sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அஞ்சலையின் அஞ்சல்!

/

அஞ்சலையின் அஞ்சல்!

அஞ்சலையின் அஞ்சல்!

அஞ்சலையின் அஞ்சல்!


PUBLISHED ON : அக் 20, 2019

Google News

PUBLISHED ON : அக் 20, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'என் உசுருக்கும் உசுரான, அப்பனுக்கும் - ஆத்தாவுக்கும், அஞ்சலை பாசத்துடன் எழுதிக் கொள்வது... நீங்களும், அகிலா குட்டியும் சொகமா இருக்கீங்களா... நான், அபுதாபிக்கு வந்து, 30 மாசம் ஓடிப் போயிருச்சு... இதுவரை, நான் எழுதின, 30 கடுதாசிக்கும், நீங்க பதிலே எழுதலையே, ஏன்... உங்களுக்கு, எழுதப் படிக்க தெரியாது தான்... ஆனா, தங்கச்சி அகிலா குட்டி, ஜோரா எழுதுமே... அதுகிட்ட சொல்லி எழுத வேண்டியது தானே...

'ஆத்தா... ஒனக்கும், அப்பனுக்கும் எம்மேல கோவம் இருக்கும் தான்... ஒப்புக்குறேன்; ஆனா, மாசம், 30 ஆகியுமா, எம் மேல கோவம் கொறையல... இல்ல... என்னைத் தொலைச்சு தலை முழுகிட்டீகளா... எனக்கு மட்டும், நாம் பொறந்து வளந்த குப்பத்தையும், சிங்கார சென்னையையும் வுட்டுட்டு, பாஷை தெரியாத, இந்த ஊருக்கு வரணும்ன்னு தலை எழுத்தா என்ன...

'ஒங்க பேச்சை கேக்காம, நா இம்மாந் தொலவு வந்து, நாள் முச்சூடும் கஷ்டப்படறதெல்லாம் எனக்காவ மட்டுமா சொல்லு, ஆத்தா...

'ஒனக்காக... கூலி நெறயக் கெடைக்குதேன்னு, தனியார் ஆசுபத்திரி, கழிவுநீர் டேங்க சுத்தப்படுத்தற வேலைக்கு போன அப்பன், நச்சு வாயு தாக்கி, கையும், காலும் வெளங்காம படுக்கையில வுளுந்து கெடக்குதே... அதுக்கு, நல்ல வைத்தியம் பாக்கணும்கிறதுக்காக... நீங்க மூணு பேரும், மூணு வேளையும் வவுறார சாப்புடோணும்கிறதுக்காக...

'நாந்தான் படிக்கல... எங்கூட பொறந்த பொறப்பு, அகிலா குட்டியையாச்சும், நல்லா படிக்க வச்சு, கலெக்டராக்கி, நம் குப்பத்து சனங்களை எல்லாம் முன்னேத்தணும்ன்னு, கெனா கண்டுக்கினு இருக்கேனே... அதுக்காக தான், நீங்க வேணாம் வேணாம்ன்னு தடுத்தும், இங்க வந்தேன்...

'நம்மூருல கெடைக்கிற சம்பளத்தை காட்டிலும், பல மடங்கு ஜாஸ்தியான சம்பளம், அபுதாபியில கெடைக்கும்ன்னு, முருகேசு அண்ணன் நம்பிக்கையா சொல்லவும் தானே, இங்க வீட்டு வேலைக்கு வந்தேன்... இதுவே, நான் ஆம்பிளை புள்ளையா பொறந்திருந்தா, நீங்க தகிரியமா எங்கன்னாலும் வேலைக்கு அனுப்பி இருக்க மாட்டீங்களா...

'ஆணா இருந்தா என்ன... பொண்ணா பொறந்தா என்ன... பெத்தவங்களையும், கூட பொறந்த பொறப்புகளையும் காப்பாத்தற பொறுப்பு, தலைச்சன் புள்ளைகளுக்குதானே இருக்கு... செரி... செரி... அதெல்லாம் முடிஞ்சு போன கதை... இனி, இதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க...

'மாசா மாசம், எஞ்சம்பளத்த, முருகேசு அண்ணன் ஒழுங்கா எடுத்து வந்து குடுக்குதா... நீங்க வவுறார சோறு துன்றீங்களா... அப்பனுக்கு நல்ல வைத்தியம் பாக்கறீங்களா... இப்போ, கை, காலுல உணர்ச்சி இருக்குதா... அகிலா குட்டி நல்லா படிக்குதா... கடனெல்லாம் பைசல் பண்ணிட்டீங்களா... குடிசைய, காரை வீடா மாத்தினீங்களா...

'நம்ப குப்பத்துல எல்லாரும் நல்லாருக்காங்களா... என்னை பத்தி விசாரிச்சாங்களா... உங்ககிட்ட இருந்து, எனக்கு பதில் கடுதாசி வராததுனால, நம்ப வீட்டு விசயம் எதுவுமே எனக்கு தெரியல... இப்ப, நீங்கள்ளாம் சந்தோசமா இருப்பீங்கன்னு, கற்பனைல பாத்து ரசிச்சுகினு கீறேன்...

'இந்த வூட்டுல, 'டிவி' பாக்க, எனக்கு அனுமதியில்ல... இங்க வந்ததுல இருந்து, ஒரு சினிமா இல்ல, நல்ல பாட்டு இல்ல... இந்த முருகேசு அண்ணனும், ரொம்ப மோசம்... என்னடா, நம்ப குப்பத்து பொண்ண, வூட்டு வேலைக்கு இட்டாந்து வுட்டமே, ஏர்போர்ட்ல, முன்ன பின்ன தெரியாத ஒரு ஷேக்காண்ட ஒப்படைச்சமே... புள்ள என்ன பண்ணுது, எப்படி இருக்குதுன்னு வெசாரிக்கணுமா வேண்டாமா...

'இது நா வரைக்கும் என்னோட கடுதாசிக்கெல்லாம் நீங்க பதில் எழுதாட்டாலும் பரவால்ல... ஆனா, இந்த தபா பதில் எழுதாம இருந்துடாதீங்க... ஏன்னா, நா இப்ப ஒரு கஸ்டத்துல இருக்கறேன்... இப்ப என்ன இப்ப... இங்க வந்த நா தொட்டே கஷ்டம் தான், ஆத்தா... ஆனா, ஒங்ககிட்ட சொல்லாம மறச்சிட்டேன்...

'ஒங்க பேச்சை கேக்காம, நா இங்க வந்ததுக்கு, நல்லா அனுபவிச்சுட்டேன்... இத சொன்னா, நீங்க வெசனப்பட்டு, என்னை திரும்பி வரச்சொல்லி வற்புறுத்துவீங்க... அதனால தான், கடுதாசியில இதுவரைக்கும் எதுவும் எழுதல... மூணு வருசந்தானே, பல்லை கடிச்சிட்டு ஓட்டிரலாம்ன்னு இருந்தேன்...

30 மாசம் ஓடிப்போயிருச்சு... இன்னும், ஆறே மாசந்தானேன்னு சந்தோசமா இருந்த எனக்கு, நேத்து, தல மேல இடி வுளுந்த கணக்கா ஆயிடுச்சு...

'அது என்னன்னா... இரு ஆத்தா, அதுக்கு முன்ன, நா இங்க வந்ததுலருந்து நடந்த கோராமைய எல்லாம் வெவரமா ஒங்கிட்ட சொல்றேன்... அப்பதானே ஒனக்கு நல்லா வெளங்கும்...

'ஏர்போர்ட்ல, முருகேசு அண்ணன், என்னை, இந்த வூட்டு ஷேக்காண்ட ஒப்படச்சுட்டு, எம் பாசுபோர்ட்டையும் அவரு கையில குடுத்துட்டுட்டார்... 'நல்ல புள்ளையா நடந்துக்க அஞ்சலை'ன்னு சொல்லிட்டு, எங்கூட வந்த பொண்ணுங்களையும், வேற வேற ஆளுங்களோட அனுப்பி வச்சுட்டு போனவரு தான், இதுவரைக்கும் அவரையோ, இல்ல, எங்கூட வந்த மத்த பொண்ணுங்களையோ நா பாக்கவே இல்ல...

'அன்னைக்கு, ஊருல இருந்து வந்ததும், இந்த வூட்டுக்குள்ளாற பூந்தது தான், இன்னி வரைக்கும் வெளி ஒலகத்தை பாக்கவே இல்ல... வூடா இது, மாளிகை கணக்கா அம்மாம் பெரிசு... வூடு பெரிசா இருந்து என்ன பிரயோசனம்... மனுசங்க மனசு சிறுசால்ல இருக்கு... இங்க, ஜெயில்ல இருக்குற மாதிரி இருக்குது...

'நம்ப சென்னையில, வூட்டு வேலை செஞ்சுகினு இருந்தேனே, அந்த தபாலாபீசு மாமி செஞ்சு குடுக்குமே, மணக்க மணக்க, ஒரு வத்தக் கொளம்பு... அத நெனச்சா, நாக்குல எச்சி ஊறுது; அப்புறம் நீ செய்வியே, அயிரை மீனு கொளம்பு... ஆஹாஹா கொளம்பா அது, அமிர்தமாட்டம் ருசிக்குமே... நம்ப குப்பத்துல இருந்த சந்தோசமும், நிம்மதியும் இந்த ஒலகத்துல எங்க தேடினாலும் கெடைக்காதுன்னு, நல்லாவே புரிஞ்சுகினேன்...

'இங்க, என்னோட எசமானியம்மா இருக்காளே... சரியான ராச்சசி... நா இந்த வூட்டுக்குள்ள வந்து பூந்ததும், எப்புடி இருக்கே, ஒம் பேரென்ன, எதுனா துன்றியான்னு ஒண்ணியும் வெசாரிக்கல... என்ன பாத்ததும், ஒடனே அவ மூஞ்சி, மொகறையே மாறிப் போச்சுது... சட்டுனு உள்ளாற போயி, ஒரு கத்திரிகோலை கொணாந்து, என் நீளமான சடைய வெட்டி எறிஞ்சுட்டா... இப்பவும், எம் முடி வளர வளர வெட்டி உட்டுருவா...

'அப்புறம் கேளு... என்னோட மேமு இருக்காளே, அவளுக்கு எதுக்கெடுத்தாலும் கோவம், ஆத்திரந்தான்... சிரிப்பையே காணாத சிடுமூஞ்சிக்காரி... நா தப்பே பண்ணாட்டாலுஞ் சரி, அவ புருசனோட சண்ட போட்டுகிட்டாலும், புள்ளைக்கு மேலுக்கு சொகமில்லாட்டாலும் என்ன போட்டு அடிப்பா... அடி வாங்கி, அடி வாங்கி என் ஒடம்பே மரத்துப் போச்சு... ஒங்களுக்காக பொறுமையா இருந்தேன்.

'இத்தினி நா பொறுத்தவளுக்கு, இப்ப என்னான்னு ஒம்மனசுல ஒரு கேய்வி வரும்... நாயந்தான்... அதுக்கும் காரணமிருக்கு, ஒரு கண்ணாடி சாடிய கை தவறி கீள போட்டுட்டேன்... அதுக்கு எங்க மேமு, ராச்சசி கணக்கா வந்து எங்கன்னத்துல மாறி மாறி அறைஞ்சா பாரு... என்னோட முன் பல்லு ஒண்ணு ஒடஞ்சு ரத்தமா கொட்டுச்சு...

'அப்பவும் அழுவாம, கட்டுப்படுத்திகிட்டு, என்னோட ரூமுக்கு போயி, அங்க இருக்கற கண்ணாடில எம்மூஞ்சிய பார்த்ததும், 'ஓ'ன்னு கதறி அழுதுட்டேன்... என்ன பாக்க எனக்கே புடிக்கல... 'என்னோட அஞ்சல, ராசகுமாரி கணக்கா இருக்குறா'ன்னு, குப்பத்துல பெருமை அடிச்சுக்குவியே...

'இப்ப என்ன பாத்தீன்னா, 'நீ எம்புள்ளயே இல்லன்னு சத்தியம் பண்ணுவே...' அவ்வளவு அசிங்கமா, எலும்பும், தோலுமா, வத்தலும், தொத்தலுமா... அதுல, இப்ப ஒரு பல்லு வேற இல்லியா... கேக்கவே வேணாம்... அன்னிக்கு ராத்திரி முச்சூடும், அன்னந்தண்ணி இல்லாம, நா அழுதுகினு இருக்கறதப் பாத்து, சமையல்காரம்மா வந்து சாப்புடக் கூப்புட்டு, ஆறுதலும் சொல்லுச்சு...

'சமையல்காரம்மாகிட்ட, 'இன்னும் ஆறே மாசந்தானே... அப்புறம் இந்த நரகத்துல இருந்து எனக்கு விடுதலை'ன்னு சொன்னேன். அதுக்கு அந்தம்மா சொல்லுச்சு, 'மேமுக்கு, உன்னை சென்னைக்கு திருப்பியனுப்புற எண்ணமே இல்ல. எத்தினி அடிச்சாலும், பொறுமையா தாங்குற... உன்ன மாதிரி வேற ஆளு எந்த நாட்டுலயும் கெடைக்காதுங்கறா... அதனால, சாகுற வரைக்கும் நீ இங்கதா இருந்தாகணும்'னாக...

'என்னோட மொதலாளி இருக்காரே, அவுரு எதையுமே கண்டுக்கறதே இல்ல... எனக்கு ரொம்ப பயமா இருக்குது... எப்ப ஊருக்கு வருவோம், ஒங்கையால சாப்புட்டு, ஒன்ன கட்டிப்புடிச்சிட்டு துாங்குவோம்ன்னு இருக்கு, ஆத்தா... தங்கச்சிய துாக்கி கொஞ்சணும்... அப்பன் ஆசையா, 'அஞ்சலே'ன்னு, கூப்பிடுமே, அத காதார கேக்கணுமுன்னு மனசு தவியா தவிக்குது...

'எப்பாடு பட்டாவது, அந்த முருகேசு அண்ணன் கையி, காலுல வுளுந்தாச்சும், என்னை இந்த நரகத்துலருந்து மீட்டுகிட்டு போகச் சொல்லு, ஆத்தா... எங்கூட வந்த மத்த புள்ளைங்களும், என்ன மாதிரி கஸ்டப்பட்டுகிட்டு இருப்பாங்களாம், சமையல்காரம்மா அப்படிதான் சொல்லுது... அந்த புள்ளைங்களுக்கும் எப்படியாச்சும் விடுதலை கெடைக்கறாப்புல செய்யணும்...

'மொதல்ல, முருகேசு அண்ணங்கிட்ட இந்த தகவலை சொல்லி, ஆக வேண்டியத பாக்க சொல்லு... அது ஏதாச்சும் கமிசனா பணம் கேட்டுச்சுன்னா கூட குடுத்துரலாம்... ஊருக்கு வந்தப்புறம், நா ஒங்க பேச்சை தட்டாம நடந்துக்குறேன்... கடேசி வரைக்கும் ஒங்க மகளா கூடவே இருக்குறேன்...

'எனக்கு, கல்யாணங்காச்சி எதுவுமே வேணாம்... தங்கச்சிய நல்லா படிக்க வச்சு கலெக்டராக்கிரணும்... அவளுக்கு, ஒங்க கண்ணு குளிர, கல்யாணம் முடிக்கணும்... இதுதான், இனி என் லட்சியம்... இது சத்தியம்... தயவுசெஞ்சு, என்ன இங்கிருந்து மீட்டுக்க... இனிமே, நம்ப ஊரு பொண்ணுங்கள, இங்க வேலைக்கு அனுப்பவே கூடாது... நம்ப குப்பத்துல உள்ள எல்லாருக்கும், என் நெலமய சொல்லி புரிய வை...

'நல்ல வேளையா, எங்க மொதலாளி சிடுமூஞ்சிகாரனா இருந்தாலும், நான் குடுக்கற கடுதாசில விலாசம் எழுதி, தபால்ல சேக்குறாரு... அதுக்கு, அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.

'இப்படிக்கு, கண்ணீருடன் அஞ்சலை...'

பின் குறிப்பு:

கடிதத்தில் தன் கஷ்டங்களையும், துயரங்களையும், பெற்றவர்களுக்கு விலாவாரியாக எழுதி விட்டதில் சற்றே ஆறுதலடைந்தாள், அஞ்சலை.

'நாளை இந்த கடிதத்தை, எசமானரிடம் கொடுத்து, தபாலில் போட்டு விட்டால், விரைவில் நமக்கு விடுதலை கிடைத்து விடும்...' என, மனசுக்குள் எண்ணமிட்டவளாக, சந்தோஷத்துடன் துாங்க சென்றாள்.

பெற்றவர்களின் கடன் சுமையை தீர்க்கவும், தன் உடன்பிறப்பு அகிலாவை நல்ல முறையில் வைத்து காப்பாற்றும் ஆசையில், அபுதாபிக்கு வந்து அடிமைப் பெண்ணாகிவிட்டாள்.

மூன்று ஆண்டு, 'கான்ட்ராக்ட்' என்று சொல்லி, அவளை கூட்டி வந்த கயவன், ஏஜன்ட் முருகேசு, இந்த ஷேக்கிற்கு அடிமையாக அவளை விற்று விட்டான் என்பதோ, அஞ்சலையுடன் வந்த மற்ற பெண்களின் கதியும் இதுதான் என்பதோ, தெரிய வாய்ப்பில்லை.

அது மட்டுமா... இவர்களை விற்று கிடைத்த கோடிக்கணக்கான பணத்துடன் இந்தியா திரும்பிய, முருகேசு, சென்னைக்கு திரும்பவில்லை. முருகேசையும், மகளிடமிருந்து வரப்போகும் கடிதத்தையும், பணத்தையும் எதிர்பார்த்து கண்களில் கண்ணீருடன், உள்ளத்தில் கவலையுடன் காத்திருந்தனர், அஞ்சலையின் பெற்றோர்.

ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு, கடன்பட்டு, அவமானப்பட்டனர். இளைய மகள் அகிலாவுக்காக, அத்தனை துயரங்களையும் தாங்கிக் கொண்டிருந்தனர்.

கடன் தொகைக்கு ஈடாக அகிலாவை கடத்திச்சென்று விடுவதாக, கடன் கொடுத்தவர்கள் செய்த நெருக்குதலும், பயமுறுத்தலும் பொறுக்க முடியாமல், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அத்துடன், அஞ்சலை எழுதிய கடிதங்கள் ஒன்றை கூட, அவள் முதலாளி தபாலில் சேர்க்காமல், உடனுக்குடன் அவரால் கிழித்தெறியப்பட்டன என்பதையும், அஞ்சலைக்கு சொல்ல யாருமில்லை...

இந்த விஷயங்கள் எதுவும் தெரியாத, அஞ்சலை, துாக்கத்தில் புன்னகைத்து கொண்டிருக்கிறாள்.

எஸ். கே. விஜயலட்சுமி

வயது: 61,

கல்வி: முதுகலை பட்டதாரி, சிறுகதை, கவிதை மற்றும் பக்தி பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இவரது படைப்புகள் பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது, மேலும் எழுத ஊக்கம் அளிப்பதாகவும் குறி்ப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us