தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/போவோமா சுற்றுலா!

போவோமா சுற்றுலா!

போவோமா சுற்றுலா!


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர்வு முடிந்து, விடுமுறை விட்டாச்சு... அடுத்து, சுற்றுலா கிளம்ப வேண்டியது தான். எங்கு செல்வது என்று, 'பிளான்' செய்து விட்டீர்களா? குறைந்த, 'பட்ஜெட்'டில், தமிழகத்திற்குள் எங்கெங்கு செல்லலாம் என்பதற்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்...

முட்டம்!

கன்னியாகுமரியிலிருந்து, 32 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, முட்டம். மிக அழகான கடற்கரை; நுாற்றாண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் மற்றும் இக்கடற்கரையும் பல திரைப்படங்களில், இடம்பெற்றுள்ளன. முட்டம் கடற்கரையை ஒட்டி, முட்டம் கிராமமும், சவுக்கு தோப்பும், பெரிய தேவாலயமும் உள்ளது. ஆண்டு முழுதும் செல்லலாம்; கன்னியாகுமரியில் சிறிய உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன.

கன்னியாகுமரி வரை ரயில் மற்றும் பேருந்துகளில் சென்று, அங்கிருந்து முட்டம் செல்ல வேண்டும். அருகில், துாத்துக்குடி விமான நிலையம் உள்ளது.

அங்கே பார்க்க வேண்டிய இடங்கள்: சிதறால் மலை, தொட்டிப்பாலம்.

மணிமுத்தாறு அணை!

திருநெல்வேலியிலிருந்து, 47 கி.மீ., துாரத்திலும், பாபநாசத்திலிருந்து, 5 கி.மீ., துாரத்திலும் உள்ளது, மணிமுத்தாறு அணை.

அணையை ஒட்டி அழகான பூங்கா உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் எடுத்துச் சென்று, அணையை கண்டு ரசித்து, பூங்காவில் ஓய்வெடுக்கலாம். இங்கு, தண்ணீர் பாட்டில், குளிர் பானங்கள் கிடைக்கும். உள்ளூர் மக்கள் அதிகம் விரும்பும் இடங்களில் இந்த அணையும் ஒன்று; ஆண்டு முழுவதும் செல்லலாம்; திருநெல்வேலியில் தங்கும் விடுதிகள் உள்ளன.

திருநெல்வேலி வரை, ரயில், பேருந்து வசதி உள்ளது; அங்கிருந்து மணிமுத்தாறு செல்லும் நகர பேருந்தில் பயணிக்க வேண்டும். அருகில், துாத்துக்குடி, மதுரை விமான நிலையங்கள் உள்ளன.

அங்கே பார்க்க வேண்டிய இடங்கள்: அகஸ்தியர் அருவி, குற்றாலம்.

அரியமான் கடற்கரை - சேதுக்கரை!

ராமநாதபுரத்திலிருந்து அரைமணி நேர பயணத்தில், அரியமான் கடற்கரையை சென்றடையலாம். வெள்ளை மணலும், அமைதியான கடலும், குளிப்பதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும்

ஏற்ற அற்புதமான இடம். இங்கிருந்து தேவிபட்டிணம், சேதுக்கரை போன்ற கடற்கரைகளையும் ஒரே நாளில் பார்த்து வரலாம்.

ராமநாதபுரத்திற்கு ரயில் அல்லது பேருந்தில் பயணித்து, அங்குள்ள நகர பேருந்தில், அரியமான் கடற்கரை செல்ல வேண்டும். ஆண்டு முழுவதும் செல்லலாம்; ராமநாதபுரத்தில் தங்கும் விடுதிகள் உள்ளன; உணவு எடுத்துச் செல்வது நலம்.

குருசடை தீவுகள்!

ராமேஸ்வரத்திலிருந்து, 20 கி.மீ., துாரத்தில் உள்ளது, குருசடை தீவுகள். கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது, இத்தீவுகள். இங்கு, பல வண்ணங்களில், விதவிதமான பவளப் பாறைகளை கண்டு ரசிக்கலாம். நட்சத்திர மீன்கள், கடல் வெள்ளரி, கடல் பாசி மற்றும் கடல் பஞ்சு போன்றவை ஏராளமாக காணப்படுகின்றன. அடிப்பகுதி கண்ணாடியால் செய்யப்பட்ட படகில் சென்றால், அரிய உயிரினங்களை பார்க்கலாம். வெயில் நேரத்தில், நம் முகமே தெரியும் என்பதால், குடையுடன் சென்றால், அந்த நிழலில் கடல் வாழ் உயிரினங்களை ரசிக்கலாம்.

ராமேஸ்வரம் வரை ரயில், பேருந்தில் பயணித்து, அங்கிருந்து படகில் குருசடை தீவுகளுக்கு செல்லலாம்.

ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதி, உணவகங்கள் உள்ளன. உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்ல வேண்டும். ஆண்டு முழுவதும் செல்லலாம்.

மதுரை விமான நிலையத்திலிருந்து, 163 கி.மீ., துாரத்தில் உள்ளது. குருசடை தீவுகளுக்கு செல்லும் முன், மீன் வளத்துறையிடம் அனுமதி பெறுவது அவசியம்.

சம்மருக்கு, 'டூர்' போகும்போது...

சுற்றுலா செல்வதற்கு ஒரு வாரம் முன், பழைய டைரி ஒன்றில், சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை, நம் நினைவில் வர வர, எழுதிக் கொண்டே வாருங்கள். 'பேக்கிங்' செய்யும்போது இந்த டைரி பேருதவியாய் இருப்பதுடன், நம் டென்ஷனை பெருமளவில் குறைக்கும்

* முன்கூட்டியே திட்டமிட்டு, ஒரு சிறு தொகையை மாதா மாதம் சேமித்து வந்தால், சம்மர், 'டூர்' செலவை சுலபமாக சமாளித்து விடலாம்

* பயணத்தின் போது, நகைகள் அதிகம் அணிந்து செல்வதை தவிர்க்கவும்; நகைகளை வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைத்துச் செல்லவும். வீட்டை பூட்டுவதற்கு முன், காஸ் சிலிண்டர், மின் இணைப்புகளை நிறுத்தி செல்லவும்

* எந்தெந்த பையில் என்னென்ன பொருட்கள் என்பதை, ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டால், தேவையின்றி டென்ஷனை குறைக்கலாம்

* பயணத்தின்போது, 5, 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட அளவு எடுத்துச் சென்றால், சில்லரை பிரச்னையை தவிர்க்கலாம்

* போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத ஊர்களில் உள்ள கோவிலுக்கு செல்லும்போது, 'ரிட்டர்ன்' பேருந்து வரும் நேரத்தை முன்பே கேட்டு வைத்துக் கொண்டால், அதற்கேற்றவாறு, தரிசனத்தை முடித்து, சவுகரியமாக கிளம்பி வரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us