
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெய்ப்பட முடியும்!
புதைந்தே கிடக்கும்
புதையல் அல்ல
இங்கே பூமியை பிளந்து
முளைத்தெழும் விதைகளே
மேலானவை!
அஸ்திவாரத்தோடு
நின்று போனது
மாளிகையே ஆனாலும்
கூரை வேய்ந்த
குடில்களில் தான்
வாசம் செய்ய முடியும்!
உறங்குவது
எரிமலையே ஆனாலும்
எரியும் குச்சிகளில் தான்
குளிர் காய முடியும்!
மணலாய் படுத்திருப்பது
மறுகரை தெரியாத
மகாநதியானாலும்
நகர்ந்து வரும்
சிற்றோடைகளே
தாகம் தணிக்க முடியும்!
விதைகளும், நதிகளும்
எரிமலைகளும்
எல்லாருக்குள்ளும் உண்டு
என்றாலும்...
அவற்றிற்கான
அங்கீகாரம் என்பது
வாடாமல்
துளிர்த்துக் கொண்டிருப்பதும்
நிற்காமல்
ஓடிக் கொண்டிருப்பதும்
அணையாமல்
எரிந்து கொண்டிருப்பது தான்!
களத்தில் இருக்கும் வரை
யாரும் தோல்வியுற்றவர்
ஆகி விடுவதில்லை
என்பதால்...
பயணத்தின்
முதல் அடியெடுத்து
வைப்பதல்ல...
தொய்வில்லாமல் தொடர்ந்து
நடைபோடுவதாலேயே
தொலைதூரக் கனவும்
மெய்ப்பட முடியும்!
— என். கீர்த்தி, கொளத்தூர்

