
உ.வே.சாமிநாதய்யர் எழுதிய, 'என் சரித்திரம்' நூலிலிருந்து: ஒரு நல்ல நாளில், சென்னைக்கு புறப்பட்டு சென்றேன். சென்னையில், இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் தம் கோச் வண்டியில் என்னை அழைத்துக்கொண்டு புறப்படுவார் ராமசாமி முதலியார். பிரசிடென்சி கல்லூரி மற்றும் காஸ்மொபாலிடன் கிளப் முதலிய இடங்களுக்கு சென்று, அங்குள்ளவர்களும், வருபவர்களுமாகிய கனவான்களில் ஒவ்வொருவரையும், எனக்கு பழக்கம் செய்து வைப்பார். அவர்கள் கவுரவத்தை எனக்கு எடுத்துரைப்பதோடு, என்னை பற்றியும் அவர்களிடம் சொல்வார். அவருடைய உதவியால், 'ஜட்ஜ்' முத்துசாமி ஐயர்,
சர்.வி.பாஷ்யமையங்கார், ஸ்ரீநிவாச ராகவையங்கர், பம்மல் விஜயரங்க முதலியார், ரகுநாதராயர் முதலிய பல கனவான்களுடைய பழக்கத்தை பெற்றேன்.
பிரசிடென்சி கல்லூரிக்கு சென்று, பூண்டி அரங்கநாத முதலியாரையும், தொழுவூர் வேலாயுத முதலியாரையும் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களாயினர். 'வர்னாகுலர் சூபரிண்டென்டு' சேஷகிரி சாஸ்திரியாரையும், தமிழ்ப் பண்டிதர் கிருஷ்ணமாச்சாரியரையும் கண்டு பேசினேன்.
புரசவாக்கம் அஷ்டாவதானம், சபாபதி முதலியார் சோடசாவதானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற்கவிராயர், காஞ்சிபுரம் ராமசுவாமிநாயுடு, கோமளீசுவரன் பேட்டை ராஜகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை முதலிய வித்துவான்களைப் பார்த்துப் பேசி இன்புற்றேன்.
அஷ்டாவதானம் சபாபதி முதலியார், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சகலபாடியாதலால் அவருடைய புலமையை பற்றி பேசினார். சோடசாவதானம் சுப்பராய செட்டியார், தாம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்ட விஷயத்தையும், அப்புலவர்பிரானுடைய சிறப்புகளையும் எடுத்துச் சொன்னார். நான் கண்ட வித்துவான்கள், பல பழைய பாடல்களை கூறினர். அவற்றைக் கேட்டு குறித்துக் கொண்டேன். நானும் எனக்கு தெரிந்த செய்யுட்களை சொன்னேன்.
சென்னையில், பார்க்க வேண்டிய பொருட்காட்சி சாலை, கடற்கரை, கோவில்கள், புத்தக சாலைகள், சர்வகலாசாலை போன்றவற்றையும் பார்த்தேன். வித்துவான்களையும், அறிஞர்களையும் பார்த்துப் பழகியது, கிடைத்தற்கரிய பெரிய லாபமாக தோன்றியது.
உயர் பதவி வகித்த பெரியவர்கள் எல்லாம் அடக்கமாகவும், அன்பாகவும் இருப்பதைக் கண்டு வியந்தேன். கும்பகோணத்தில், 15 அல்லது 20 ரூபாய் சம்பளம் பெறும் குமாஸ்தா செய்யும் அட்டகாசத்தையும், ஆடம்பரத்தையும் கண்ட எனக்கு, அப்பெரியவர்களுடைய நிலை மிக்க ஆச்சரியத்தை உண்டாக்கியது.
முல்லை முத்தையா தொகுத்த, 'ராஜாஜி உதிர்ந்த முத்துக்கள்' நூலிலிருந்து: ராஜாஜியின், 91ஆவது பிறந்த நாளின் போது, திருச்சியில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய ஈ.வெ.ரா., 'ராஜாஜிக்கு, என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்; தம் லட்சியங்களை உண்மையாக கடைப்பிடிப்பவர் ராஜாஜி. அதற்காக, தியாகம் செய்ய தயங்காதவர். காங்கிரஸ் இயக்கத்தில், நாங்கள் இருந்த போது, அவரது சீடனை போலவே நடந்து கொண்டேன்; ஆனால், அவர், என்னை தம் தலைவரை போலவே நடத்தினார். அவர் எனக்கு கவுரவமான ஸ்தானம் தந்த போதிலும், நான், அவரது உதவியாளனைப் போலவே நடந்து கொண்டேன்.
'பிற்பாடு, எங்கள் கொள்கைகளில் மாறுபட்டு, அரசியலில் விலகினோம். எனினும், தனிப்பட்ட முறையில் எங்களிடம் பேதமில்லை; எங்களது உண்மையான நட்பை இருவரும் போற்றி வருகிறோம்...'என்று பேசியது, 'இண்டியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளிவந்தது.
இது பற்றி ராஜாஜி கூறும் போது, 'ஈ.வெ.ரா., என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அவரிடம் எனக்குள்ள அன்பிலிருந்து என்னால் விடுபட முடியாது. எனக்கு, பலர் வாழ்த்து அனுப்பியிருந்த போதிலும், ஈ.வெ.ரா., கூறியதை போல வேறு எதுவும் கவனத்தைக் கவர்ந்து, மனதை தொட முடியாது என எண்ணுகிறேன்...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்

