sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 21, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்பு அக்காவிற்கு —

நான், என் மனைவி இருவருமே வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள். எங்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்களாகி விட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த ஐந்து வருடங்களில், ஒரு நாள் கூட நாங்கள் நிம்மதியாக வாழவில்லை. எங்களுக்குள் என்றுமே நிம்மதியில்லாமல் வாழக் காரணம், என் மனைவி கூறும், 'சூப்பர்' பொய்கள். இன்னும் இவள் திருந்தவில்லை. நானும், இவளும் சேர்ந்து உண்மையான அன்போடு படுக்கையறையை பகிர்ந்து கொண்டது சரியாக ஏழு நாட்களே.

தனது தம்பிகளிடம் அதிக பாசம் வைத்திருப்பதாகக் கூறி, என் வாழ்க்கையையும் கெடுத்து, வேலை செய்யுமிடங்களிலும், வங்கிகளிலும் தேவைக்கதிகமான கடனை வாங்கி கெட்ட பெயர் எடுத்து விட்டாள். இவளை ஒரு விஷயத்தில் முழுமையாக நம்பலாம். கற்பு என்ற விஷயத்தில் மட்டும். எனது நிலைமையோ இதை விட மோசம். கல்யாண வயதில் நிற்கும் என் தங்கை மற்றும் வயதான தாய், தந்தை - இவர்களை கவனிப்பதா! குழந்தைகளுக்காக என் மனைவியின் பல்வேறு தொல்லைகளை தாங்கிக் கொள்வதா! மைத்துனர்கள் தரும் துன்பங்களை தாங்குவதா!

என் மனைவிக்கு பல தடவை மாறுதல் வாங்கித் தந்தும், என்னுடன் வாழ அவளுக்கு விருப்பமில்லை. தற்போது நான்கே மாதம் இறுதியான கெடு கேட்டிருக்கிறாள். இன்னும் ஒரு மாதம்தான் பாக்கி.

தற்பொழுது 35 வயதாகும் எனது இளமை இவ்வாறே கழிந்து விடுமா அல்லது விவாகரத்து செய்து விடலாமா என, பல்வேறு கோணங்களில் மூளை மழுங்கி இரவு, பகல் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். எனது மனைவி திருந்துவாள் என்ற நம்பிக்கை இல்லை. மைத்துனர்களும் புத்தி சொல்லி அனுப்பும் வகை இல்லை.

தற்போது நான் இருக்கும் தனிமை பல கெட்ட வழிகளில் ஈடுபடுத்தி விடுமோ என, மனம் பயப்படுகிறது. பேசாமல் வக்கீலின் உதவியால் ஒப்பந்த அடிப்படையில், ஒரு விபசாரிக்கு கூட வாழ்வு கொடுக்கலாமா என்ற எனது எண்ணங்களின் ஓட்டத்தை தெளிவுபடுத்துவீர்களா?

தங்களின் பதில் ஒன்றே ஆறுதல்!

அன்பு சகோதரருக்கு—

உங்கள் கடிதம் கண்டேன். பல விஷயங்கள் புரியவில்லை.

உங்களுக்குத் தெரியாமல் அல்லது உங்களது அனுமதியில்லாமல் உங்கள் மனைவி வேலை செய்யும் இடங்களிலும், வங்கிகளிலும் தேவைக்கு மேல் கடன் வாங்குவதாகவும், நிறைய பொய் சொல்வதாகவும் எழுதி இருக்கிறீர்கள்.

தன் பிறந்த வீட்டுக்கு உதவுவதற்காக அவள் கடன் வாங்குகிறாளா? அப்படி சாப்பாட்டுக்கும், மற்ற செலவுகளுக்கும் பெண் பணம் கொடுத்து தான் உயிர்வாழ வேண்டும் என்கிற நிலையில் அல்லது படிக்கும் தம்பிகள், வைத்தியச் செலவு, வயதான தாய், தந்தை, கல்யாணக் கடன் இப்படி ஏதேனும் இருந்தால், அந்தக் குடும்பம், பெற்ற மகளின் கையை எதிர்பார்ப்பதில் தவறில்லையே...

அவள் பொய் சொல்வதைத் தடுக்க நீங்களே அவளை அழைத்து, 'உன் சம்பளத் தொகையை உன் தம்பிகள் முன்னுக்கு வரும் வரையில், பிறந்த வீட்டுக்கே கொடுத்து விடு. நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விடலாமே...'

கணவன் — மனைவி மட்டுமில்லை... பெற்றவர் — குழந்தைகள், ஆசிரியர் — மாணவர் இப்படி இரு பக்கமும் பொய் அரங்கேறுவதற்கான காரணமே ஒருவரிடத்தில் மற்றவருக்கு இருக்கும் பயம்தான்.

உண்மையில் பயமில்லாத சினேகத்தில் பொய் முளைக்காது.

கூப்பிட்டு இதமாய் விசாரித்தீர்களா?

தெரிந்தோ, தெரியாமலோ போலியான வறட்டு கவுரவம் உங்கள் மனைவியின் கண்களை மறைத்திருந்தாலும் புரியும்படியாக எடுத்துச் சொல்லலாமே...

கிடைக்கிறது என்பதற்காக கடனை வாங்கி, காலமெல்லாம் நிம்மதி இன்றி தவிப்பதைக் காட்டிலும் — அன்றாடம் மானமாய் கூழோ, கஞ்சியோ குடித்து வாழலாம் என்று எடுத்துச் சொன்னீர்களா?

இரண்டு பெண் குழந்தைகளை படிக்க வைத்து, பட்டம் வாங்க வைத்து, ஆளாக்கி, கல்யாணம் செய்து கொடுத்து... வாங்குகிற சம்பளம் கைக்கும், பைக்கும் போதாத அந்த மாதிரியான சமயங்களில் கண்டிப்பாய் கடன் வாங்கியே தீர வேண்டியிருக்கும்.

இப்போது அநாவசியமாய் கடன் வாங்கி, பெயரைக் கெடுத்துக் கொண்டால், ஆபத்து சமயத்தில் ஒரு ஈ, காக்கை நமக்கு உதவாது என்பதைப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்.

இது எதற்குமே அவள் மசியவில்லை என்றால், தினசரியில் ஒரு அறிவிப்பு — அதாவது, 'எனது மனைவியும், இன்னாரது மகளுமான... என் அனுமதியின்றி பல இடங்களிலும் கடன் வாங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்தது. மேற்படியார் வாங்கும் கடனுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவள் கையெழுத்திட்ட பத்திரங்கள் எதுவும் என்னையோ, என் சம்பளத்தையோ, என் சொத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு...'

— இப்படி ஒரு அறிவிப்பு கொடுத்து விடுவதாகச் சொல்லுங்கள். விஷயம் மிகவும் கை மீறிப் போனால், அறிவிப்பும் கொடுக்கலாம்... பாதகமில்லை.

அதை விடுத்து, அவளை விவாகரத்து செய்யும் வரை ஏன் போக வேண்டும்? பெரியவர்களை வைத்து பிரச்னையைப் பேசித் தீருங்கள். 35 வயசு 'இளமை' வீணாகப் போகிறதே என்று சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்ணை மணக்கத் துணிந்திருக்கிறீர்களே... இருக்கிற பெண்டாட்டியை ஒழுங்காய் வைத்துக் கொள்ள முடியாதா உங்களால்?

இதே நிலை ரிவர்ஸில் திரும்பி, நீங்கள் கடனாளியாகவும், சொன்ன சொல் கேட்காதவராகவும் இருந்தால், அதற்காக உங்கள் மனைவி வேறொருவனை மணக்க கிளம்பினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்...

'இரண்டு பெண் குழந்தைங்க இருக்கற போது, அப்படியென்ன உடம்பு கேட்குதோ...'

கேட்பீர்களா, மாட்டீர்களா? பொறுமை வேண்டும் சகோதரா! ஏழு நாட்கள் மட்டும்தான் அவளுடன் உறவு என்றால் இரண்டு குழந்தைகளை அந்த ஏழு நாள் உறவுக்காக பத்தும், பத்தும் இருபது மாதங்கள் சுமந்திருக்கிறாளே... அவளிடம் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக, அன்பாக விசாரியுங்களேன். சில சமயங்களில் இது ஒருவிதமான மனம் சம்பந்தப்பட்ட நோயாக இருக்குமோ என்று கூடத் தோன்றுகிறது.

அவளுக்குள் ஏதோ, ஒருவித ஏக்கம், எதிர்பார்ப்பு இருக்கலாம்... கடன் வாங்கிச் செலவு செய்யும் போது, அவளுள் ஒரு வித திருப்தி தோன்றலாம்... பின்னால் வருத்தப்பட்டாலும், இதை அவளால் மாற்றிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். எதற்கும் நல்ல மனநல மருத்துவரிடம் காட்டுங்கள்.

கடைசியாக ஒன்று, தனிமையில் பல கெட்ட வழிகளில் ஈடுபட்டு விடுவோமோ என்று பயப்படுவதாக எழுதியிருக்கிறீர்கள்.

சகோதரரே... கெட்ட வழிகளில் ஈடுபடுபவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கின்றனர். ஏற்கனவே ஒரு சில செய்திகளும், சினிமாக்களும் காவல்துறையை மட்டமாகச் சித்தரிப்பதால், மக்களின் மனதில், 'காவல் துறை என்றாலே நமக்கு எதிரி' என்ற நினைப்பை உண்டு பண்ணி விட்டது.

இப்போது உங்களைப் போன்றோர், அத்துறையில் இருந்துகொண்டே, மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் மார் மீதுதான் விழும் என்கிற பழமொழியை மெய்ப்பிப்பது போலக் கூறினால்... எப்பேர்பட்ட குற்றம்?

செய்யும் தொழில் தெய்வம் சகோதரா... உங்களை நம்பி இந்நாட்டில் பல அபலைகள், அநாதைகள் இருக்கின்றனர்... இது போன்ற சேவையில் இருக்கும் நீங்கள், நீங்கள் சார்ந்துள்ள துறைக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

மனைவியே ஆனாலும் அவளிடம் உங்கள், 'ஈகோ' வைக் காட்டாமல் ஒரு குழந்தையாக நடத்திப் பாருங்கள். உண்மை வெளிவரும். உங்களது முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us