sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!

/

விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!

விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!

விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!


PUBLISHED ON : ஜூலை 21, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை.

விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.

ஆனால், சமீபகாலமாக, அழகு கெட்டு விடும் என்பதற்காக, ஒரு சில தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய அளவு, தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற விமர்சனம், நம் நாட்டில் எழுந்துள்ளது. குழந்தை பிறந்த ஓரிரு மாதங்களிலேயே, புட்டிப் பாலை, அதன் பச்சிளம் வாய்களுக்குள் திணித்து விடுகின்றனர். இதுபோன்ற புட்டிப் பால் கலாசாரத்தில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நோய்களின் அமுத சுரபியாக திகழும் அபாயம் உள்ளதாக, டாக்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தாய்ப்பாலுக்கு உள்ள மகத்துவத்தை பயன்படுத்தி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில், கல்லா கட்ட துவங்கியுள்ளன பல நிறுவனங்கள். பணத்தாசை பிடித்த சில பெண்கள், 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக, தாய்ப்பாலை விற்பனை செய்வதாக, புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதை விட அதிர வைக்கும் நிகழ்வுகள், சீனாவில் அரங்கேறுகின்றன.

'நோய், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்கள், தாய்ப்பால் அருந்தினால், அந்த பாதிப்புகளிலிருந்து குணமடையலாம்...' என்ற பிரசாரம், சமீபகாலமாக சீனாவில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதைப் பயன்படுத்தி, சென்ஜென் மற்றும் குவாங்டன் ஆகிய நகரங்களில் செயல்படும் சில நிறுவனங்கள், தாய்ப்பாலை விற்பனை பொருளாக்கி, செமத்தியாக காசு பார்க்க துவங்கியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்படும் இந்நிறுவனங்கள், இளம் தாய்மார்களுக்கு பண ஆசை காட்டி, அவர்களை, தங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களிடமிருந்து தாய்ப்பாலை பெறுகின்றன.

சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றோ அல்லது தங்கள் நிறுவனங்களுக்கு வரவழைத்தோ, தாய்ப்பாலை பெறும் நிறுவனங்கள், அதற்காக, அவர்களுக்கு, கணிசமாக பணம் கொடுக்கின்றன. சில பெண்கள், மாத கணக்கில், அந்த நிறுவனங்களுக்கு தாய்ப்பாலை கொடுக்கின்றனர்.

இதற்காக, ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, அந்த பெண்களுக்கு கொடுக்கப்படுவதாக, பதற வைக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த பெண்களிடமிருந்து பெறும், தாய்ப்பாலை, பதப்படுத்தியோ அல்லது, 'பிரஷ்'ஷாகவோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன இந்நிறுவனங்கள்.

செல்வத்தில் கொழிக்கும், பெரும் பணக்காரர்கள் தான், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள். ஒரு சில ஓட்டல்களில், தாய்ப்பாலில் தயாராகும் இனிப்பு வகை மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை விற்பனை செய்கின்றன. சீனாவில் அரங்கேறும், இந்த அநியாயத்துக்கு, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

'தாய்ப்பால் என்பது, ஒரு வரம் போன்றது. ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சொத்து. தாய்மையின் அடையாளம். அதை, விற்பனை பொருளாக்கி, பெண்களை, கால்நடைகளாக மாற்றுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது...' என, அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து, சீன அரசு, தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

***

சி. சண்முகநாதன்






      Dinamalar
      Follow us