
*பி.ராஜாத்தி, புதுப்பாக்கம்: சினிமா மோகத்தால், படிப்பில் அக்கறை காட்டாத என் மகனை என்ன செய்யலாம்?
தோளுக்கு மேல் வளர்ந்த பையன் என்றால், 'கோடம்பாக்கத்திற்கே ஓடிப்போ...' என அனுப்பி வையுங்கள்; என்றாவது, 'ஷைன்' பண்ண வாய்ப்புள்ளது. அப்படி அனுப்பும் போது, 'செலவிற்கு இங்கிருந்து சல்லி கூட எதிர்பார்க்காதே...' என்றும் சொல்லி விடுங்கள்!
***
** எஸ்.மாதவன், சேலையூர்: இந்தி மொழியை, தமிழ் மீது கொண்ட பற்றால் எதிர்க்கிறோமா? மொழி தெரியவில்லை என்பதாலா... அல்லது, நம்மால் படித்து புரிந்து தேற திறமை கிடையாது என்பதால் எதிர்க்கிறோமா?
நாம் எங்கே எதிர்த்தோம்... அன்று, ஆட்சியைப் பிடிக்க இந்தியை ஒரு கருவியாக்கிக் கொண்டது தி.மு.க., இன்று, பல கல்விக் கூடங்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரண்டாவது பாடமாக, இந்தியைக் கற்றுக் கொள்கின்றனரே!
***
*டி.செழியன், சிவகங்கை: வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
ஆடம்பரத்தை மூட்டை கட்டி வைக்க வேண்டும்; சிக்கனத்தை பழகிக் கொள்ள வேண்டும்!
*எம். பெரியசாமி, திருவான்மியூர்: பெருகி விட்ட தொலைக்காட்சி ஒளிபரப்புகளால், படிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருவதாகச் சொல்வது உண்மையா?
ஆமாம். பல வார இதழ்களின்,'சர்குலேஷன்' 'மடமட'வெனச் சரிந்து வருகிறது. ஆனால், நாளிதழ்களின் விற்பனை என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது! பள்ளி விடுமுறை மாதங்களில் வழக்கமாக நாளிதழ் விற்பனையில் சரிவு இருக்கும். இந்த வருடம் சரிவுக்குப் பதில், அதிகரித்தே இருக்கிறது!
***
** வி.ராதிகா, செஞ்சி: ஒரு முறைக்கு நூறு முறை சிந்தித்து செய்த செயலும் கூட, தோல்வி அடைந்தால்...
நூறு முறையும் செய்த சிந்தனையில், ஓட்டைகள் கண்ணில் படவில்லை என்பதே பொருள்!
***
*வி.கண்ணக்குமார், பொள்ளாச்சி : குடும்பம் நடத்த, இக்காலத்தில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?
எவ்வளவு சம்பாதித்தாலும், செலவு செய்து விடும் பழக்கம் இல்லாமல் இருந்தாலே, அவரவர் இப்போது சம்பாதிக்கும் பணமே போதுமானதாக இருக்கும். சம்பாதிக்கும் பணத்திற்குள், வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்பவனே அறிவாளி!
***
** கு.சங்கீதா, அவினாசி : ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை, தைரியம், சுயசிந்தனை, சிரிப்பு ஆகியவை, அவள் திருமணத்திற்கு பின் மறைந்து விடுகின்றனவே... ஏன்?
தன் கணவருக்காக, அனைத்தையும் தியாகம் செய்து கொள்வதாக எண்ணினாலும், உண்மையில் கணவன் - கணவன் வீட்டாரின் அடக்குமுறைகளால், தன் குணங்களை எல்லாம் துறக்கிறாள்! பெண்கள் செய்யும் பல தியாகங்களில் இதுவும் ஒன்று!
***
*க.தாமரைச்செல்வி, விருதுநகர்: கட்டிய மனைவி உடன் வரும் போதே, தெருவில் போகும் மற்ற பெண்களை ரசிக்கின்றனரே ஆண்கள்... இவர்களைத் திருத்துவது எப்படி?
உடன் செல்லும் மனைவியும், தெருவில் செல்லும் ஆண்களை ரசிப்பது போல் நடித்தால் போதுமே!
***

