
டீன் - ஏஜ்ஜில் இருக்கும் பெண்களின் மனதை குழப்பி, தம் மீது, அவர்களிடம் ஒருவித, 'சிம்பதி'யை ஏற்படுத்தி, தம் இச்சைகளுக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் கலையில் ஆண்களில் பலர் டாக்டர் பட்டமே பெற்று இருக்கின்றனர் என்பது, மதுரை மாவட்ட வாசகி ஒருவர் எழுதிய இக்கடிதத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக புரிந்தது!
படியுங்கள் கடிதத்தை:
என் வயது ----(டீன்ஏஜ்). நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர், என்னிடம் நன்றாக பேசுவார். அவருக்கு வயது 35க்கு மேல். திருமணம் ஆகிவிட்டது; குழந்தைகள் உள்ளனர். தினமும் என்னையும், என் தோழிகள் சிலரையும் கூப்பிட்டு பேசுவார். சோஷியலாக பழக ஆரம்பித்தார். ஆசிரியர் என்ற மரியாதையுடன் நானும் பேசினேன்.
திடீரென ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் போது, (தோழிகளுடன்) அவர் முதலில் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்ததாகவும், அப்பெண் வீட்டில் ஒத்துக் கொள்ளாததால், அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனால், சில வருடம், எவற்றிலும் ஈடுபாடு இல்லாமல், வீட்டிலேயே பித்து பிடித்தவர் போல் இருந்ததாகவும் கூறினார்.
பிறகு, வீட்டில் கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விட்டனர் என்றும், மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாழ்கிறேன். மனைவியை நேசிக்கவில்லை; ஆனால், அதே சமயம் தன்னை நம்பி வந்தவள் என்பதால், வெறுக்கவும் இல்லை என்று கூறினார். இதைக் கூறிவிட்டு, அவர் காதலித்த பெண்ணைப் போலவே நான் இருப்பதால், தினமும் என்னைப் பார்த்து பேச வேண்டும் போல் இருப்பதாக கூறினார்; அழவும் செய்தார்.
என் தோழிகள் உட்பட அனைவரும் அவருக்காக வருத்தப்பட்டு, தினமும் அவரிடம் நன்றாக பேசுவோம். இந்த விஷயம் என் தோழிகளில் யார் மூலமாகவோ கல்லூரி முழுவதும் பரவி விட்டது. மற்ற ஆசிரியர்கள், என்னை ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்தனர். அதனால், நான் அவரிடம் பேசுவதைத் தவிர்த்தேன்.
ஆனால், அவர் நிலை மிக மோசமாகி விட்டது; என்னைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்ற நிலையில், அழுது, புலம்பியிருக்கிறார் என் தோழிகளிடம். அவர்கள் வந்து, என் மனதை மாற்றி, என்னை அழைத்துச் சென்று, பேச வைத்தனர்.
அவர் அழுது, 'இந்த விஷயம் என் மனைவிக்கும் தெரியும்' என்று, கூறினார். அவர் மனைவி அவரிடம், 'அப்பெண்ணை நினைத்து இப்படி ஆகி விட்டீர்கள். மறக்க முடியாவிட்டால், திருமணம் செய்து கொள்ளுங்கள்...' என்று கூறிவிட்டாராம். இதை என்னிடம் கூறி, என்னுடைய சம்மதத்தையும் கேட்டார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் மிகவும் வேதனைப்பட்டேன். அவர், என்னிடம் மிகவும் கெஞ்சினார். இவ்விஷயம் என் வீட்டில் தெரிந்து, என்னை கல்லூரிக்குப் போக விடாமல் நிறுத்தி விட்டனர். என் படிப்பு வீணாகி விட்டது. இப்பவும், அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியுடன் நிற்கிறார்.
தெய்வ நம்பிக்கை அதிகம் உண்டு அவருக்கு. 'என் பிரார்த்தனைபடி நம் திருமணம் நிச்சயம் நடக்கும்!' என்றும், என் பெற்றோரின் சம்மதத்துடன் கைப்பிடிப்பேன் என்றும் கூறுகிறார். இல்லாவிட்டால், இவ்வுலகில் வாழ மாட்டேன் என்று கூறி, குறிப்பிட்ட காலத்துக்கு கெடு வைத்துள்ளார். இதை கடிதமாக எழுதி, ஒரு பெண்ணிடம் கொடுத்து, என்னிடம் சேர்ப்பிக்க சொல்லியுள்ளார்.
எனக்கு, என்ன செய்வதென்றே புரியவில்லை. எனக்கு, அவரை திருமணம் செய்து கொள்ள கொஞ்சமும் விருப்பமில்லை. இந்த திருமணத்தால் பின்னால் ஏற்படப் போகும் பிரச்னைகளை நன்கு அறிவேன். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல, அவர் வற்புறுத்த, வற்புறுத்த என்னையும் அறியாமல், அவர் மேல் பரிதாபப்பட்டு, சம்மதித்து விடுவேனோ என்று பயமாக உள்ளது.
நான் மிகவும் மனம் உடைந்த நிலையில் உள்ளேன். இதற்கு நீங்கள் தான் ஒரு வழி கூற வேண்டும். உங்களை நம்பி காத்திருக்கிறேன். என் தோழியின் முகவரிக்கு ஆலோசனை கடிதம் எழுதவும்.
— என எழுதியுள்ளார்.
என்ன ஆலோசனை எழுதி இருப்பேன் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!
செத்து விடுவாராம் செத்து... சாகட்டுமே இது போன்ற தடிமாடன்கள்!
***
அன்று லென்ஸ் மாமா ஊரில் இல்லை... மாலை நேரம் கடற்கரை செல்ல, 'கம்பெனி' இல்லாததால், மேற்கு மாம்பலம் செல்ல பஸ் ஏறினேன். அங்கே உள்ள ஒரு மடத்தில், கற்றுத் தேர்ந்த பலர், தினமும் நல்ல உபன்யாசங்கள் செய்கின்றனர்.
குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் இறங்கி, இரண்டு ரூபாய்க்கு கடலை வாங்கி கொறித்தபடியே உபன்யாச மண்டபத்தை அடைந்தேன்.
அங்கே, பழுத்த பெரியவர் ஒருவர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். எக்கச்சக்கமான ரிட்டயர்டு பார்ட்டிகள் - ஆணும், பெண்ணுமாக அமர்ந்து உபன்யாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த பெரியவர் சொன்ன கதை ஒன்று...
'ஏன் இவ்வளவு தாமதம்...' என்று சினந்தார் சாது.
'நான் என்ன ஸ்வாமி செய்வேன்... ஆற்றைக் கடந்து வர வேண்டியுள்ளது! பரிசல்காரன் குறித்த நேரத்தில் வருவதில்லையே...' என்று பயபக்தியோடு மொழிந்தாள், அவருக்கு பால் கொண்டு வரும் பால்காரி.
சாதுவின் கோபம் தணியவில்லை.
'என்ன... பரிசலுக்காகவா காத்திருக்கிறாய்? இறைவனுடைய பெயரைச் சொன்னால் சம்சார சாகரத்தையே தாண்டி விடலாமே! அப்படி இருக்கும்போது, அவனுடைய பெயரைச் சொல்லி, இந்த ஆற்றை கடந்து வர முடியாதா...' என்று முழங்கினார்.
அவர் வார்த்தையை உள் வாங்கிக் கொண்ட பால்காரி, மவுனமாகத் திரும்பினாள்.
அடுத்த நாள் முதல் குறித்த நேரத்தில் பால் வந்தது.
சாதுவுக்கு ஒரே மலைப்பு!
'இப்பொழுதெல்லாம் நேரம் தவறாமல் எப்படி வருகிறாய்?' என்று ஒரு நாள் அவளிடம் கேட்டார்.
'நீங்கள் உபதேசித்தபடி, கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து வருகிறேன்...' என்றாள்.
சாதுவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. நேராகவே இதைப் பரிசோதிக்க, பால்காரியுடன் ஆற்றுக்கு புறப்பட்டார்.
கடவுள் பெயரைச் சொல்லியபடி, ஆற்றின் மேல் ஒய்யாரமாக நடந்து போனாள் பால்காரி.
ஆயிரம் பெயர்களால் கடவுளைக் கூவிக் கொண்டே ஆற்றில் அடியெடுத்து வைத்த சாது, அடுத்த வினாடி, நீரில் விழுந்தார்.
'ஐயா... கடவுள் பெயரை சொல்லுகிற போது, உங்களுக்கு எதற்கு சந்தேகம் வந்தது? இடுப்பு வேட்டி நனைந்து போகுமே என்று தூக்கிப் பிடித்துக் கொண்டீர்களே... உங்களுக்கு கடவுள் பெயரில் நம்பிக்கை ஏற்படவில்லை என்று தெரிகிறது...' எனக் கூறியபடியே மேற்கொண்டு நடந்தாள் பால்காரி...
— இப்படிக் கூறி முடித்தார் அந்தப் பெரியவர்.
அரட்டைக் கச்சேரிக்கு முழு நேரத்தையும் ஒதுக்காமல், இது போன்று நல்ல சேதி கேட்கவும் நேரத்தை ஒதுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே பஸ் பிடிக்கப் புறப்பட்டேன்.
***
எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர்... 60 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். எதிலுமே தெளிவான முடிவெடுக்கத் தெரியாத சஞ்சலப் பேர்வழி.
அவரும் குழம்பி, அருகிலிருப்போரையும் குழப்பி விடுவார். வயதுக்கேற்ற பக்குவம் அடையாதவர் இவர். இதற்குக் காரணம் என்ன என ஆராய்ந்தேன். அவரது சஞ்சல குணம் தான் இதற்கு அடிப்படை என்பதை உணர்ந்தேன்.
சமீபத்தில் அவரை சந்தித்த போது, சாட்டை அடியை விட சஞ்சலம் கொடுமையானது என்பதை விளக்க ஒரு கதை சொன்னேன்.
அந்தக் கதையை அறிந்து கொள்ள விருப்பமிருந்தால் தொடர்ந்து படியுங்கள்...
ஒரு அந்தணர் வெயிலில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அவரது துன்பம் கண்டு, குதிரையில் சென்று கொண்டிருந்த செல்வந்தன் ஒருவன் தன் செருப்புகளைக் கொடுத்தான்.
சிறிது தூரம் நடந்த பின் நின்று விட்டார் அந்தணர்.
குதிரையில் வந்த செல்வந்தன், 'ஏன்?' என்று கேட்டான்.
'குடையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்!' என்றார் அந்தணர்; அப்படியே செய்தான் செல்வந்தன்.
கொஞ்ச தூரம் நடந்த அந்தணர், மீண்டும் நின்றார்... இப்போதும் ஏனென்று கேட்டான் செல்வந்தன்.
'குதிரையையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்...' என்றார் அந்தணர்.
அந்தணரின் பேராசையைக் கண்டு, சவுக்கால் இரண்டு இழுப்பு இழுத்தான் செல்வந்தன்.
அடிபட்ட அந்தணர், 'கோபிக்காதீர்... வீட்டுக்குப் போனதும், குதிரையையும் கேட்டிருந்தால் கொடுத்திருப்பீர்களோ என்ற சஞ்சலம் இருந்திருக்கும்... சவுக்கடி பட்டதும் அது தீர்ந்து போயிற்று...' என்றார்.
— இந்தக் கதையை கேட்ட சஞ்சலப் பார்ட்டி, 'ஓகோ... அப்படியா!' என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.
'இந்தாளுக்கும் சவுக்கடி கிடைத்தால் தான் புத்தி வரும்போல இருக்கிறது...' என நினைத்துக் கொண்டேன்.
***

