/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பக்கிங்காம் அரண்மனையை பார்க்க வேண்டும்!
/
பக்கிங்காம் அரண்மனையை பார்க்க வேண்டும்!
PUBLISHED ON : ஜூலை 21, 2013

இந்த ஆண்டோடு, இங்கிலாந்து அரசியாக இரண்டாம் எலிசபெத், பதவி ஏற்று, 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை கொண்டாடும் விதமாக, லண்டனில் ராணி வசிக்கும் பக்கிங்காம் அரண்மனையை, பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப் போகின்றனர்.
ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை பொது மக்கள் சுற்றிப் பார்க்கலாம். பெரியவர்கள் மற்றும் ஐந்து வயது நிரம்பிய மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு கட்டணம் 50 பவுண்டு. பெரியவர்களுக்கு 17 பவுண்டும், ஐந்து வயது முதல் 17 வயதிற்குட்பட்டோருக்கு 10 பவுண்டும் கட்டணம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்.
கடந்த 2011ல் இளவரசர் வில்லியம் - கேட்மிடில்டன் திருமண வரவேற்பு இந்த அரண்மனையில் தான் நடந்தது.
அரண்மனையில் அரச குடும்பத்தினர் வசிப்பதுடன், அவர்கள் சார்ந்த அலுவலகமும் இயங்கி வருகிறது.
இந்த அரண்மனையிலுள்ள 19 அறைகள், பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. உலகின், மிகப் பிரபலமான ஓவியர்கள் தீட்டிய அழகான ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறைகளில், உலக நாடுகளிலிருந்து வரும் மன்னர் குடும்பத்தினர் மற்றும் வி.வி.ஐ.பி.,க்கள் தங்க வைக்கப்படுவர். அவர்களை கவுரவிக்கும் வகையில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தும் இங்கு நடைபெற இருக்கிறது.
அத்துடன், ராஜ குடும்பத்தினர் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் மட்டுமல்லாமல், இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் அணிகலன்களும் பார்வைக்கு வைக்கப்படும்.
பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே, கண்ணைக் கவரும் இரு தோட்டங்களை காணலாம். இவற்றில், 350 வகையான பூக்கள் பூத்துக் குலுங்கி, பார்ப்பவரை மகிழ்விக்க உள்ளது. இதற்கு தெற்கே, மிகப் பெரிய ஏரி உள்ளது. இதில், படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரண்மனையை சுற்றிப் பார்க்க, மூன்று மணி நேரம் ஆகும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஸ்காட்லாந்துக்கு விஜயம் செய்வார். அந்த சமயத்தை பார்வையார்கள் விசிட் செய்ய பயன்படுத்தி கொள்ள உள்ளனர்.
என்ன... லண்டனுக்கு விமான டிக்கெட், 'புக்' செய்ய கிளம்பி விட்டீர்களா?
***
ராஜிராதா

