தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா --

என் பெற்றோருக்கு, நான் கடைசி மகள். எனக்கு ஒரு அக்கா, அண்ணன் உள்ளனர். அக்காவிற்கு வயது 35ம், அண்ணனுக்கு 32 வயதும் ஆகிறது. அண்ணன் பொறுக்கித்தனமான நட்பு வட்டாரத்தில் சிக்கி சீரழிந்து, வீட்டை விட்டே சென்று விட்டான்.

இப்போது பிரச்னை அக்காவைப் பற்றித் தான். இத்தனை வயதாகியும் அக்காவிற்கு திருமணமாகவில்லை. ஜாதகம் சரியில்லாமை, குள்ளமான உருவம் என்று, சில குறைகளை தன்னிடம் வைத்துக் கொண்டு, வருகிற மாப்பிள்ளைகளிடம் இருக்கும் தேவையற்ற குறைகளை சொல்லி, திருமணத்தை தட்டிக் கழித்துக் கொண்டே வருகிறாள்.

அக்கா தன்னை விட ஏழு வயது சிறியவன் ஒருவனிடம் பழகி வருவதும் ஒரு காரணம். ஆரம்பத்தில், அவனை சகோதரன் என்று சொல்லியவள், தற்போது, தோழனாக பதவி உயர்வு கொடுத்திருக்கிறாள்.

என் கண்ணெதிரேயே, அக்காவின் கையில், உதட்டில், கன்னத்தில் முத்தம் தந்ததை பார்த்த பிறகு, இவர்களின் உறவு நார்மலானது இல்லை என்று தெரிந்து விட்டது. அவனிடம் தனிமையில் இதைப் பற்றி கேட்டதற்கு, உண்மையை ஒத்துக் கொண்டான்.

அவனின் உறவு இல்லை என்றால் இறந்து விடுவதாக, மறைமுகமாக அவனை மிரட்டி வைத்திருக்கிறாள் என் சகோதரி. இதற்கு பயந்து அக்காவிடம் காதலனாக பழகிக் கொண்டிருக்கிறான்.

அவனை வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லிவிடவும் முடியாது. ஏனென்றால், என் பெற்றோருக்கு பல உதவிகளை செய்து, நல்லபிள்ளையாக பெயர் வாங்கியுள்ளான். அவர்களை நம்ப வைப்பது சிரமம்.

தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பொம்மையாக அவனை ஆட்டிப் படைக்கிறாள் என் சகோதரி. திருமணத்திற்கு ஒத்து வருகிற மாதிரி எந்த வரனாவது வந்தால் உடனே, தனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று, கடிதம் எழுதி அனுப்பி விடுகிறாள்.

இதனால், அவமானப்படுவது பெற்றோரும், நானும்தான். எனக்கு இறந்து விடலாம் அல்லது வீட்டை விட்டு சென்று, ஏதாவது ஆசிரமத்தில் தங்கி விடலாம் என்றும் அடிக்கடி தோன்றுகிறது. என் சகோதரியாலேயே என் திருமணம் தடைப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நான் என்ன செய்தால் என் பிரச்னை தீரும். நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பவள் நான். எனக்கு இப்படி ஒரு சகோதரி கிடைத்தது என் துரதிர்ஷ்டம்தான்.

நான் சுயதொழில் செய்து, கணிசமான வருவாயில் என் தேவையை, நானே பூர்த்தி செய்து கொள்பவளாக இருக்கிறேன்.

தயவு செய்து நல்ல முடிவை எனக்குத் தாருங்கள்.

-- பெயர் வெளியிட விரும்பாத வாரமலர் வாசகி.

மகளே...

முதலில் நீயும், உன் குடும்பத்தினரும் தெரிந்து கொள்ள வேண்டியது...

இறந்து விடுவது அல்லது தற்கொலை செய்து கொள்வது என்ற நினைப்போ, முடிவோ எந்த பிரச்னைக்கும் தீர்வு அல்லது மருந்து ஆகாது...

வாழ்க்கை என்பது தன்னம்பிக்கையோடு எதிர்நோக்குவதுதான். மற்றவர்களிடம் அன்பையும், பாராட்டையும் பெற்று, அவைகளை பன்மடங் காக மற்றவர்கட்கு தந்து உதவுவது. நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால், மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப் போல் காத்திருக்கத்தான் வேண்டும்.

சரி... உன் அக்காவின் பிரச்னைகளை சற்றே அலசுவோம்...

ஜாதகம் சரியில்லை, குள்ளமான உருவம், மாப்பிள்ளையின் தேவையில்லாத குறைகளைச் சுட்டிக் காண்பித்து திருமணத்தை தள்ளிப் போடுகிறாள்... அவளிடம் இது போன்ற குற்றம் குறைகளை கண்ட நீ, ஏன் இப்படி செய்கிறாள் என்று ஒரு நிமிடம் யோசனை செய்திருக்கிறாயா?

ஒருவேளை, இந்த வயதிற்கு மேல், திருமணம் செய்துக் கொள்ள தயக்கமாகவும், குழந்தைகளைப் பெற்று, எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோம் என்ற பயமாக கூட இருக்கலாம்.

அதனால், இப்படி ஒரு ஆணுடன் மிக, 'பாதுகாப்பாக' தானும் சந்தோஷம் அடைந்து, அந்த பையனையும் சந்தோஷப்படுத்த கூட முயலலாம். எனவேதான் உன் அக்கா, அந்த பையனை எல்லா வகையிலும், 'சப்போர்ட்' செய்து, தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாள். அது கிடைக்காத பட்சத்தில் தான் இறந்து போவதாக கூறி, மிரட்டுகிறாள்.

அக்கா தன்னை விட, ஏழு வயது குறைவான ஒரு ஆணுடன் பழகுவது, உனக்கு பிடிக்கவில்லை. இதை, உளவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்தால், உன்னிடமும், உன் குடும்பத்தாரிடமும் கிடைக் காத ஏதோ ஒன்று, அந்த ஆணிடம் கிடைக்கிறது என்று கூட சொல்லலாம். மேலும், இயற்கையிலேயே உன் அக்கா, மற்றவர்களை,'டாமினேட்' செய்பவளாக கூட இருக்கலாம். அதனால், 'செக்சில் கூட' ஆண் ஒருவன் தம்மை அப்படி செய்து விடக் கூடாது என்று இப்படி நடந்து கொள்ளலாம்.

அந்தந்த வயதில் நடப்பவைகள் சரியாக நடந்திருந்தால், இந்த பிரச்னைக்கே இடமிருந்திருக்காது... சரி, இனி நீ என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

வீட்டிற்கு இனி நீ வரக்கூடாது என்று உடனடியாக அந்த பையனிடம் கூறுவது சரியாக இருக்காது. அது இன்னும் பிரச்னையை ஊதி விடுவது போல ஆகி விடும்.

அந்த பையனிடம் தனியாக, 'இது நடைமுறைக்கு சாத்தியமில்லை அவளை, நீ திருமணம் செய்ய முடியாது. சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது... வீண் பிரச்னைதான் வளரும்...' என்று புரியும்படி சொல்ல வேண்டும்.

உன் அக்கா ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறாள், 'டாமினேட்' செய்கிறாள் என்பதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மூல காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும்.

மிக விரைவில், அந்த பையனின் உறவை, உன் அக்கா துண்டித்துக் கொள்ள, அவளுக்கு ஆலோசனை தர வேண்டும். ஏனெனில், உன் அக்காவிடம், 'பழகுகிற மாதிரி' எத்தனை, 'அக்காக்களிடம்' பழகுகிறார் என்று யாருக்கும் தெரியாது. முக்கியமாக, இந்த மாதிரி, 'தம்பி'களிடம் இருந்துதான், எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய் விரைவாக பரவுகிறது. இதனால், குடும்ப பெண்கள் கெட்டு விடுகின்றனர் என்ற உண்மையையும், அவளிடம் மிக பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதிர்ச்சியாக கூட இருக்கலாம் மகளே... இப்படி பிரச்னைகளை எழுதியிருக்கும் நீயும் கூட ஒருமுறை மனதளவில் சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவைகள் அனைத்தையும் நீயே செய்ய முடியுமானால் செய்... ஒருவேளை உன் அக்காவும், குடும்பத்தினரும் உன்னை ஏதோ காரணங்களால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், கவலை பட வேண்டாம். நல்ல மனநல ஆலோசகர், வீட்டில் உள்ள, உனக்கு பிரியமான, மனம் விட்டு பேசக் கூடிய பெரியவர்கள் அல்லது உன்னிடமோ அல்லது உங்கள் குடும்பத்தினரிடமோ அக்கறை கொண்டுள்ள பொது நபரிடம் பேசி, அவர்களின் மூலமாக, பிரச்னைக்கு தீர்வு காண முயலலாம்.

அதன் மூலம் உன் அக்காவிற்கும், உனக்கும் விரைவில் திருமணம் ஆகி, நீங்கள், உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்கும் நன்னாளை, நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

-- என்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us