sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 05, 2014

Google News

PUBLISHED ON : ஜன 05, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —

கல்லூரியில் படிக்கும் மாணவி நான். பள்ளியில் படிக்கும் போது, நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், அது இனக்கவர்ச்சி என்று, இப்போது புரிந்து கொண்டேன். நானும், அவனும் காதலித்த காலத்தில், பல இடங்களில் சுற்றியுள்ளோம். இந்த விஷயம், வீட்டில் தெரிந்து, என்னை கண்டித்தனர்.

அப்பொழுதும் என் மனம், அவனையே நினைத்துக் கொண்டிருந்தது. மறுபடியும், அவனுடன், பல இடங்களில் சுற்றினேன். விஷயம், மீண்டும் என் வீட்டிற்கு தெரிய வந்து, பெற்றோர் கடுமையாக கண்டித்தனர்.

என் பெற்றோரை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், அவனை பிரிய நேரிட்டது. ஒருவகையில், அவனை பிரிந்தது நல்லதாக போயிற்று. அதற்கு பின் தான், அவனுக்கு, மற்ற பெண்களுடனும், தொடர்பு இருப்பது தெரிந்தது. இதற்காக, நான் என் பெற்றோருக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

அவனுடன் பழகிய நாட்களில், என் உடம்பில், அவனது பெயரை, சூடு போட்டுக் கொண்டேன். எனக்கு, அப்போது அது பெரிய பிரச்னையாக தெரியவில்லை. ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை, இப்போது உணர்கிறேன். என் வீட்டில் இது தெரிந்தால், மிகவும் வேதனைப்படுவர். தற்போது என் வீட்டில், மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த விஷயத்தை, பெற்றோரிடம் சொல்ல முடியவில்லை. கணவனாக வருபவனிடமும் சொல்ல முடியாது; அதே சமயம் மறைக்கவும் முடியாது. என்னால், நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதற்கு, நீங்கள், ஒரு நல்ல பதிலைத் தர வேண்டும். தழும்பு மறைய வழி கூறுங்கள்.

ஒழுங்காக இருக்கும் பெண்களிடமே பல குறைகளை கண்டுபிடிக்கும் உலகத்தில், இப்படி ஒன்று இருப்பது தெரிந்தால், என்னாகும் என்றே சொல்ல முடியவில்லை.

எனவே, உங்களிடம் எல்லாவற்றையும் மனம் விட்டு கூறிவிட்டேன். தயவு செய்து என் வாழ்க்கையின் நிம்மதிக்கு, ஒரு வழி கூறுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


பிரியமான மகளுக்கு,

உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். உன் மனக் குமுறல்களை நன்கு உணர்கிறேன்.

'பள்ளியில் படிக்கும் போது ஏற்பட்ட காதல், வெறும் இனக்கவர்ச்சி என்பதைப் புரிந்து கொண்டேன்...' என, மிகத் தெளிவாக எழுதிய, உன்னை, நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எல்லாப் பெண்களும் இந்த உண்மையைத் தெரிந்து, பிரச்னைகள் வருவதற்கு முன் விழித்துக் கொண்டால், இப்பருவத்தில் வரும் மன உளைச்சல்களில் இருந்து விடுபட்டு, அமைதியான வாழ்க்கை வாழலாம்.

இப்போது உனக்கு இருக்கும் ஒரே பிரச்னை, உன் உடம்பில் உன் காதலனின் பெயரை சூடு போட்டுக் கொண்டதும், அதனால் மாறாமல் இருக்கும் தழும்பும் தானே... உடம்பில் தழும்பு எந்த இடத்தில் இருக்கிறது என்று நீ குறிப்பிடவில்லை. பொதுவாக, உன்னை போன்ற பெண்கள், சூடு போட்டுக் கொள்ள, உடம்பின் மறைவான பகுதியை தான் தேர்வு செய்வர்.

நீ போட்டுக் கொண்ட சூடு, சாதாரணமாக இருக்கிறதா இல்லை மிக ஆழமாக இருக்கிறதா, சிறியதா, மிகப் பெரியதா போன்ற விபரங்கள் இல்லை. எது எப்படி இருப்பினும், நீ இது குறித்து, கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், உன் பிரச்னைக்கு தீர்வு நிச்சயமாக உண்டு.

முதலில் உணர்ச்சிவசப்படாமல், வெளிப்படையாக, உன் தழும்பு பற்றி உன் பெற்றோரிடம் கூறி விடு.

நிச்சயமாக காதலனால் கெட்டுப் போகவில்லை; மனம் திருந்தி விட்டேன்; இடையில் ஏற்பட்ட, சின்ன சறுக்கலில் இருந்து, மீண்டு வர உங்களது உதவி தேவை என்று, மனம் விட்டு கேள்.

அவர்களின் துணையுடன், திறமையான, 'பிளாஸ்டிக் சர்ஜனை' அணுகி, முறையான சிகிச்சையின் மூலம், அவற்றை சரி செய்து விடலாம்.

இத்தழும்பு பற்றியோ, டாக்டரிடம் சென்ற விஷயம் குறித்தோ, நண்பிகள், உறவினர்கள் என்று யாரிடமும் எக்காரணத்தைக் கொண்டும் மூச்சு விடக் கூடாது. பிற்காலத்தில் இவர்கள் மூலம், உன் கணவருக்கு தெரிய வந்தால், விபரீதமான விளைவுகள் ஏற்படும்.

தன்னைத் தானே உடலாலும், மனதாலும் வருத்திக் கொண்டால் தான் பிரச்னைகளை தீரும் என்று, இனி, எக்காரணத்தைக் கொண்டும் நினைக்கக் கூடாது.

பெண்கள், எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள் என்ற, இச்சமூகத்தின் சிந்தனையை மாற்றும் விதமாக, நீ நன்கு படித்து, பட்டம் பெற்று, நல்ல வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து, உன் குடும்பத்தை உயர் நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்.

ஒரு பெண் நினைத்தால், எதையும் செய்வாள் என்பதை நிரூபிக்க, இதுவே நல்ல தருணம். நீ வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்.

என்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us