
விநியோகஸ்தர்களிடம் புலம்பும் விஷால்!
விஷால், அதிக நம்பிக்கையுடன், மூன்று வேடங்களில் நடித்த படம், மதகஜ ராஜா. ஆனால், இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால், தன் சொந்தப் பணம், ஐந்து கோடியை செலவு செய்து, ரிலீஸ் செய்ய களமிறங்கிய விஷால், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, ப்ரஷர் அதிகமாகி, மருத்துவமனையில், 'அட்மிட்' ஆனது தான் மிச்சம். இன்று வரை, படம் திரைக்கு வந்தபாடில்லை. இதற்கு காரணம், அப்படத்தை தயாரித்த, ஜெமினி நிறுவனம், முன்னதாக, குட்டி படம் உட்பட, தனுஷை வைத்து தயாரித்த, சில படங்கள் விநியோகஸ்தர்களுக்கு பலத்த நஷ்டத்தை கொடுத்து விட்டது. அதனால், அதற்கு விஷால் படம் மூலம் ஈடுகட்ட சொல்கின்றனர். 'தனுஷ் படம் கொடுத்த நஷ்டத்துக்கு, நான் என்ன செய்ய முடியும்...'என்று, புலம்பி வருகிறார் விஷால்.
— சினிமா பொன்னையா.
தீபிகா படுகோனேயின் ஹீரோ பட்டியல்!
கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியை வைத்து இயக்கவிருந்த, ராணா படத்தில் நடிக்கயிருந்தவர் தீபிகா படுகோனே. ஆனால், அப்படம் கைவிடப்பட்டதால், அடுத்து, தான் இயக்கிய, கோச்சடையான் படத்தில், அவருக்கு சான்ஸ் கொடுத்தார் ரஜினி மகள் சவுந்தர்யா. அதைத் தொடர்ந்து, தமிழில் பிரமாண்ட படமெடுக்கும் சில இயக்குனர்களிடம், சான்ஸ் கேட்டு வருகிறார். அதோடு, 'ரஜினி, கமல் மற்றும் விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படமாக இருந்தால், மட்டும் சொல்லுங்கள்...' என்று, தான் நடிக்க விரும்பும் கோலிவுட் ஹீரோ பட்டியலையும் வெளியிட்டுள்ளார் தீபிகா படுகோனே. கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா.
வில்லனாக விதார்த்!
நடிகர் விதார்த்தின் மார்க்கெட், சூடு பிடித்து விட்டது. புதிதாக, அரை டஜன் படங்களில் நடித்து வரும் அவர், தான், நெகடீவ் ரோலில் நடித்த, ஜன்னல் ஓரம் படமே, தன் ரீ - என்ட்ரிக்கு வழி வகுத்ததால், அடுத்தடுத்து, வில்லத்தனமான வேடங்களிலும், நடிக்க முடிவெடுத்துள்ளார்.
— சி.பொ.,
சமந்தாவின் துணிச்சல்!
அரசியல்வாதிகளைப் பற்றியோ, அரசியல் கட்சிகளைப் பற்றியோ நடிகர் நடிகைகளிடம் கருத்து கேட்டால், நமக்கு எதற்கு வம்பு என்று, ஓட்டம் பிடித்து விடுகின்றனர். ஆனால், சமந்தாவோ, டில்லி சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை வாழ்த்தி, 'மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்...' என்று, தன் டுவிட்டரில், தெரிவித்துள்ளார். இதையடுத்து, 'எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் உள்ளதா?' என்று அவரிடத்தில் கேட்டதற்கு, 'இப்போது வரை அப்படியொரு எண்ணம் இல்லை. ஒரு சாதாரண இந்திய குடிமகளாகவே, இந்த கருத்தை தெரிவித்தேன்...' என்கிறார் சமந்தா. எண்ணத்தொலையாது; ஏட்டில் அடங்காது!
— எலீசா.
சன்னி லியோனுக்கு ஒரு கோடி!
உலக அளவில், கவர்ச்சிப் பிரியர்களை, கதி கலங்க வைத்து வரும், ஆபாச புயல் சன்னி லியோன், சில ஆண்டுகளாக, பாலிவுட் ரசிகர்களை பதம் பார்த்து, இப்போது, அங்கிருந்து நகர்ந்து, தென்னிந்திய சினிமாவில் மையம் கொண்டிருக்கிறார். முதலாவதாக, ஜெய் நடிக்கும், வடகறி படத்தில், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார். சன்னியின் முதல் என்ட்ரி என்பதால், ஒரு பிரமாண்ட டியூனை பாடலாக்கி, பதிவு செய்துள்ளனர். அந்தப் பாடல் பதிவுக்கே, பெருந்தொகையை செலவு செய்தவர்கள், அப்பாடலுக்கு இரண்டு நாட்கள் மட்டும் ஆடிய, சன்னி லியோனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர்.
— சினிமா பொன்னையா.
கறுப்புப் பூஜை!
* தளபதி நடிகர் நடித்த, மூன்றெழுத்து படம் திரைக்கு வருவதற்கு முன், அரசியல் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததால், ரொம்பவே அடக்கி வாசிக்க துவங்கி விட்டார். குறிப்பாக, தான் சொல்லும் விஷயங்களை மீடியாக்கள், ஆட்சியாளர்களை சூடேற்றும் வகையில், வெளியிட்டு வருவதாக சொல்லும் அவர், சமீபத்தில், சில முக்கிய பத்திரிகைகளை, 'பிரஸ்மீட்'க்கு அழைத்து, 'என்னைப் பற்றி எதுவும் எழுதாமல் இருந்தாலே போதும்...' என்று மட்டும் கேட்டுக் கொண்டு, பேட்டியே கொடுக்காமல், அனுப்பி விட்டார்.
* அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த அருந்ததி நடிகை, தனக்கு பிடித்தமான மாப்பிள்ளையை தேடி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தெலுங்கில் தற்போது சரித்திர படத்தில் நடித்து வரும் நடிகை, அப்படத்தில் நடிக்கும், இரண்டெழுத்து ஹீரோவுடன் மனம் விட்டு பேசி, பழகி வருவதாக புகைந்துள்ளது. மேற்படி, நடிகர், ஏற்கனவே மூன்ஷாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் என்ற போதும், அந்த செய்தி, இப்போது மறைந்து விட்டதால், அருந்ததியின் காதல் ஆழமாகிக் கொண்டிருப்பதாக ஆந்திராவில் பரபரத்துள்ளது.
* எதிர்நீச்சல் போட்ட அந்த நடிகைக்கு, ஏறுமுகம், இறங்கு முகம் என, மாறி மாறி நிலவி வருவதால், மார்க்கெட்டை கெட்டியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால், இதுவரை மிட்நைட் பார்ட்டி என்றாலே, 'அய்யோ நமக்கெல்லாம் அது செட்டாகாது' என்று, மூக்கைப் பொத்திக் கொண்ட நடிகை, இப்போது, முதல் ஆளாக கலந்து கொள்கிறார். அந்தப் பார்ட்டிக்கு மேல் தட்டு சினிமா புள்ளிகள் அதிகமாக வந்திருந்தால், மப்பில் மூழ்கி, நட்பை வளர்க்கிறார்.

