/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி! (14) - ஒய்.ஜி. மகேந்திரன்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி! (14) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி! (14) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி! (14) - ஒய்.ஜி. மகேந்திரன்
PUBLISHED ON : ஜன 05, 2014

இசைஞானி இளை யராஜா என் நெருங்கிய நண்பர். அவரது, 'பாவலர் பிரதர்ஸ்' ஆர்கெஸ்ட்ராவில் பலமுறை, ட்ரம்ஸ் வாசித்திருக்கிறேன். அதனால், இளையராஜா என்னை, 'டிரம்மர்' என்று தான் கூப்பிடுவார். இளையராஜா என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவையான நிகழ்ச்சி இது: 
கவரிமான் படத்தில்,  கச்சேரி பாணியில் அமைக்கப்பட்ட, 'ப்ரோவ பாரமா' என்ற பாடல் காட்சியில், சிவாஜி எப்படி நடிக்கிறார் என்று பார்க்க எனக்கு ஆசை. ரீ- ரிகார்டிங் செய்யும்போது, அந்த காட்சியை பார்த்தேன். ஸ்வரம், தாளம் ஒரு இடத்தில் கூட தப்பாமல், அனுபவம் வாய்ந்த சங்கீத வித்துவான் மாதிரி, பிரமாதமாக சிவாஜி நடித்திருந்தார், என்று, ஆச்சரியமாக கூறினார் இளையராஜா. 
கடந்த, 1986ல் வெளிவந்த சாதனை படத்தில், சிவாஜிக்கு இயக்குனர் வேடம். இசை இளையராஜா. அப்படத்தில், 'நீ செய்யாத சாதனையா?' என்று, சிவாஜியைப் பார்த்து, இளையராஜா கேட்கும் வசனம் ஒன்று வரும். கவரிமான் படத்தின் பாடல் காட்சியில், சிவாஜி பிரமாதமாக நடித்ததை, இந்தப் படத்தில், இளையராஜா வசனமாக சொன்னாரோ என்று தோன்றும். 
கவரிமான் படத்தில், நெருடலான ஒரு காட்சி இடம் பெறும். சிவாஜி வீட்டிற்கு வருகிறார், அவர் மனைவி பிரமிளா, சிவாஜியின் நண்பரான ரவிச்சந்திரனுடன் படுக்கையில் இருக்கையில், சிவாஜி பார்த்துவிடுவார். 'இது தான் அண்ணே சீன், நீங்க பண்ணுங்க...' என்று, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூலாக கூறினார். 
'ஏய், முத்து, இங்கே வா...இதற்கு, என்ன ரியாக் ஷன் கொடுக்கச் சொல்றே... வாழ்க்கையில் எல்லா விதமான சூழ்நிலைகளையும் அனுபவச் சிருப்போம். அதையெல்லாம் நடிப்பாக கொண்டு வரமுடியும். இப்போ நீ சொல்கிற சீன் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை. இதற்கு என்ன ரியாக் ஷன் கொடுக்க முடியும்ன்னு நினைக்கறே...' என்று கேட்டார். 
எஸ்.பி.முத்துராமன் சிரித்துக் கொண்டே, 'அதுக்குத்தாண்ணே சிவாஜி! நீங்க செஞ்சிடுவீங்க...' என்று சமாதானம் சொன்னார். 
'சரி... என் கற்பனையில் வருவதை செய்யறேன், சரியாக இருந்தால், வைச்சுக்கோ...' என்று கூறி, நடிக்க ஆரம்பித்தார். உணர்ச்சிகளை அப்படியே கொட்டியிருப்பார். 
செட்டில் இருந்த அனைவரும், சிவாஜியின் நடிப்பில், மெய்மறந்து போயினர். டைரக்டர் 
எஸ்.பி.முத்துராமன், 'கட்' சொல்ல, மறந்து விட்டார்; கேமராமேன் பாபு அந்தக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா பொருத்தப் பட்டிருந்த டிராலியை, தள்ளிக் கொண்டு வரும் கேமரா உதவியாளர், சிவாஜியை மெய் மறந்து பார்த்துக் கொண்டே, டிராலியை அதிகமாக தள்ளி விட, தடம் புரண்டு, கேமரா கீழே விழ இருந்தது. சிவாஜி, அதைப்பார்த்து, உஷார்ப் படுத்த, கேமரா காப்பாற்றப்பட்டதாக ஒளிப்பதிவாளர் பாபு என்னிடம் கூறினார். 
சிவாஜி ஷூட்டிங் என்றால், அது, நடிப்பு ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வகுப்பறை மாதிரி தான். தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு, அவர் தன்னை தயார் செய்து கொள்வதைப் பார்த்தாலே, வியப்பாக இருக்கும். 
என் தந்தை ஓய்.ஜி.பி.,நாடக மேடையில் சிறப்பாக நடித்த நான்கு பாத்திரங்களை, சிவாஜி, படங்களில் கையாண்டு இருப்பார். 
'பெண்படுத்தும் பாடு' நாடகத்தில், ஆளவந்தார் பாத்திரத்தை, அறிவாளி படத்திலும், 'பெற்றால் தான் பிள்ளையா' நாடகத்தில், ஜமீன்தார் சிவலிங்கம் பாத்திரத்தை, பார் மகளே பார் படத்திலும் சிவாஜி செய்தார். கண்ணன் வந்தான்' நாடகத்தில், ஒய்.ஜி.பி., செய்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரம், கவுரவம் படத்திலும், 'பரிட்சைக்கு நேரமாச்சு' நாடகத்தில் இடம் பெற்ற நரசிம்மாச்சாரி பாத்திரத்தை, படத்திலும் நடித்திருக் கிறார். என் தந்தை நடித்த பாத்திரங் களில், சிவாஜி, படங்களில் நடித்து, மேலும் சிறப்பாக செய்தது, என் தந்தைக்கும், எங்கள் நாடக குழுவிற்கும் கிடைத்த பெரிய 
பாக்கியம். 
சிவாஜிக்கு கிரிக்கெட் விளையாட்டில், மிகுந்த ஆர்வம் உண்டு. ரேடியோவில் கமென்ட்ரி கேட்பது, பின், நேரம் கிடைக்கும் போது, டெலிவிஷனில் கிரிக்கெட் மாட்சுகள் பார்ப்பது அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜி.ஆர்.விஸ்வநாத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். 
மைசூரில் ஒரு முறை, நட்சத்திர கிரிக்கெட் மேட்ச் நடைபெற்றது. சிவாஜியும் அதில் விளையாடினார். இரண்டே பந்துகளில், 'அவுட்' ஆகிவிட்டார். ஆனாலும், பேட்டிங் செய்ய, அவர் நடந்து உள்ளே போகும்போதும், 'அவுட்' ஆகி, வெளியே நடந்து வந்த போதும், அவரது, 'ஸ்டைலிஷ்' நடைக்கு, அதிகமான கை தட்டல் கிடைத்தது.                                                                    
— தொடரும். 
தொகுப்பு: எஸ்.ரஜத்

