PUBLISHED ON : பிப் 09, 2014

அன்புள்ள அக்கா —
எனக்கு வயது, 30; மூன்று குழந்தை களுக்கு தகப்பன் நான்.
நான் இந்து; என் மனைவி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். என் மாமியார் கிறிஸ்துவர்; என் மாமனார் கோவில் பூசாரி. என் மாமனாரும், மாமியாரும் சில கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். என் மனைவியும், நானும் ஒருவருக்கொருவர் விரும்பினோம். பெண் வீட்டில் எதிர்ப்பு; என் மனைவியோ, 'என்னை தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறி, வீட்டை விட்டு வந்துவிட்டாள். அவர்கள் வீட்டார் கூப்பிட்டும் போகவில்லை. என் மாமியாரோ, 'நீயே திருமணம் செய்து கொள்... ஆனால், முறைப்படி நடக்கட்டும்...' என்று கூறினார்.
என் வீட்டாரிடத்தில் நான் பேசி, அவர்கள் சொல்படி திருமணம் நடக்கட்டும் என்று சொன்னேன். என்னை கிறிஸ்துவனாய் மாற சொன்னார்கள்; சம்மதித்தேன். அவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் சம்மதித்தேன். என் வீட்டில் பெண்ணுக்கு வரதட்சணை வேண்டும் என்று கேட்டனர்; அவர்கள் எதுவும் தரவில்லை. நானும் வேண்டாம் என்று கூறி விட்டேன். என் கூட பிறந்தவர்கள் நான்கு பெண்கள்; அம்மா, சிறுவயதிலேயே இறந்து விட்டார். நான் என் சின்னம்மாவிடம் வளர்ந்தேன்.
நானும், என் மனைவியும் முதல் குழந்தை பிறக்கும் வரை, சந்தோஷமாக இருந்தோம். பின், எனக்கும், என் மனைவிக்கும் சிறு சிறு பிரச்னைகள் வந்து கொண்டு இருந்தது. என் மாமியாரோ என்னை வாய்க்கு வந்தவாறு பேசுவார். அதிலிருந்து அவர்களிடம் நான் பேசுவதில்லை. என் மனைவி மட்டும் அவர்கள் வீட்டுக்குச் செல்வாள். சமீபத்தில், என் தந்தை இறந்து விட்டார். அவருக்கு ஒரே பிள்ளை நான். அவர் இந்து என்பதால், இந்து சாஸ்திரப்படி சடங்குகளை செய்தேன். இது, என் மாமியாருக்கும், மனைவிக்கும் பிடிக்கவில்லை.
என்னிடம் சண்டை போடுகிறாள் என் மனைவி. எனக்கு செய்த செய்முறைகளை என் மாமியார் சொல்லிக் காட்டி, தூற்றுகிறார். இதனால், என் குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் போய் விட்டது. இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால், என் குழந்தைகள் மனம் பாதிக்குமே என்று பயப்படுகிறேன்.
இனிமேல் நானும், என் மனைவியும் கருத்து வேறுபாடு இல்லாமல் சேர்ந்து வாழ முடியுமா? இல்லை... அவளை, விவாகரத்து செய்யலாமா? நல்ல பதிலை சொல்லுங்களேன். தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் தம்பி.
பிரியமான தம்பிக்கு —
'மனைவியுடன் சேர்ந்து வாழ முடியுமா அல்லது விவாகரத்து செய்து விடலாமா?' என்று உள்ளக் குமுறல்களுடன் எழுதிய கடிதம் கண்டேன். உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொண்டேன். சகோதரரே... கடிதத்தை ஆரம்பிக்கும் முன், இந்து, கிறிஸ்து, முஸ்லீம் ஆகிய மூன்று மதங்களின் சின்னங்களை எழுதியிருப்பதால், நிச்சயமாக நீங்கள் எந்த மதத்தையும் முழுமையாக சாராமல், 'எம்மதமும் சம்மதமே' என்ற கொள்கையை உடைய ஒரு இந்தியர் என்பதை தெளிவாக உணர்த்தி விட்டீர். இது மாத்திரம் அல்லாது, பலத்த எதிர்ப்புகளின் மத்தியில், காதலை கொச்சைப்படுத்தாமல், காதலித்த பெண்ணையே, அத்தனை தொந்தரவுகளையும் பொருட்படுத்தாமல், முக்கியமாக வரதட்சணையும் வாங்காமல், திருமணம் செய்து கொண்டதை பாராட்டுகிறேன்.
மூன்று குழந்தைகளுக்கு தகப்பன்; சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயர்ந்திருக்கிறது. ஆனாலும், வீட்டில் மனைவியுடன் கருத்து வேறுபாடு. இந்த மாறுபட்ட சூழலுக்கு அடிப்படைக் காரணம், உங்களிடையே இருக்கும் புரிந்து கொள்ளாமையே! திருமணத்திற்கு முன், இவைகளைப் பற்றி பேசி, ஒரு தீர்க்கமான முடிவு எடுத்திருக்க வேண்டும்.
காதலிக்கும் போது, 'காதல்' ஒன்றே மனதில் படும். காதலர்களின் பாசிட்டிவ் மற்றும் நற்குணங்கள் மட்டுமே கண்களுக்குத் தெரியும். அவர்களுடைய பலவீனங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுத்திருக்க மாட்டார்கள். அப்படிபட்ட பல பலவீனங்களில், ஜாதி, மதமும் ஒன்று.
மதநம்பிக்கை உள்ளவர்கள், மற்றவர்களின் மனதை புரிந்து கொண்டும், அடுத்தவர் மனதை புண்படுத்தாமல், அவர்களுடைய சுதந்திரத்திற்கு தடையில்லாமல், வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டிற்குள் இருந்து உறவை வளர்ப்பவர்கள். ஆனால், மத சடங்குகளை நம்புகிறவர்கள், சடங்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் தீவிரமாக இருப்பர். முதலில் நமக்கு புரிதல் வேண்டும், மதநம்பிக்கை என்பதும், மத சடங்குகள் என்பதும் வெவ்வேறு விஷயங்கள் என்று.
சில மதங்களில், சில விஷயங்கள், மத குருமார்களால் கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டிருக்கும். சில மதங்களில் மிகவும் சுதந்திரமாக இருக்க விடுவர். எனவே, மத சடங்குகளும், நம்பிக்கையும் அவரவர் வாழ்ந்த, வளர்ந்த விதத்தைப் பொறுத்தது.
உங்களின் தகப்பனார் இறந்தது பற்றி, கவலைப்படாமல், அவருக்கு செய்த ஈமக்கிரியை கள் குறித்து உங்கள் மனைவி விமர்சித்து, கோபப் படுகிறாள் என்றால், அது, தான், தன் கணவரை முழுமையாக மதம் மாற்றி விட்டேன் என்று, பறைசாற்றிக் கொள்ள முயலும் செயல்.
ஆனால், உங்களுக்கோ என்ன தான் மதம் மாறினாலும், தந்தையின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக, கடைசி நேரத்தில் நீங்கள் செய்த சில மத சடங்குகள்... அவ்வளவே! அந்த மாதிரியான ஈமக்கிரியை, பிரியமான தந்தைக்கு செய்யாமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வினால் வருத்தப்பட்டிருப்பீர்கள்.
மதம் என்பது மனிதனை மனம் நோகாமல் நல்வழிப்படுத்தத்தான். மாறாக அவனை எந்த விதத்திலும் தாழ்த்திக் கொள்ள அல்லது அவமானப்பட வைக்க இல்லை என்பதை, நீங்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், மனைவியிடம் கோபப்படாமல், நிதானமாக, அன்பாக குடும்ப நிலையைப் பற்றி பேச வேண்டும்.
* கணவன் - மனைவி புரிதல் இல்லை யெனில், காதல் திருமணங்கள், மதம் என்ற பெயரில் எவ்வளவு துன்பங்களை சந்திக்க நேரிடும் என்பதை, எடுத்துச் சொல்ல வேண்டும்.
* கருத்து வேறுபாடு, கருத்து பரிமாற்றம், கருத்து உரிமைகள் இருவருக்கும் உண்டு. அதை புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை என்பதை, விளக்க வேண்டும்.
* எக்காரணத்தைக் கொண்டும் ஒருவரை ஒருவர், 'டாமினேட்' செய்யக் கூடாது.
* குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்கள் முன், சண்டை சச்சரவு போடுவதை தவிருங்கள். அது, அவர்களது மனநிலையை பாதிக்கும். மேலும் மதம் என்ற கருத்தை அவர்களிடம் திணிக்காதீர்கள்.
* நீங்கள் இருவருமே கோபத்தை ஏற்படுத்து வது மாதிரி விவாதிக்காமல், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அமைதியாக கருத்துகளை வெளிப்படுத்தினால் நல்லது. இல்லையெனில் பிரச்னைகளின் திசை மாறி, வேறுவிதமான பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
* நீங்கள் சொல்கிற கருத்துகளை மனைவி கேட்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் சொல்வதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலோ நீங்கள் இருவருமே நல்ல மனநல, குடும்பநல ஆலோசகரை சந்தித்து, ஆலோசனை பெறலாம்.
மதங்கள் மாறுபட்டாலும், மனம் ஒன்றாக இருப்பின், மனித குலம் ஒன்றே என்ற நினைப்பு வரும். வேற்றுமைகளில் ஒற்றுமையைக் கண்டால், மாறுபட்ட புதிய சமுதாயத்தை நிச்சயமாக படைக்க முடியும். உங்களால் அத்தகைய புதிய சமுதாயத்தை படைக்க முடியும். அதற்கு என் அன்புகள், பிரார்த் தனைகள், வாழ்த்துகள்.
— என்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
