sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 02, 2014

Google News

PUBLISHED ON : மார் 02, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —

என் வயது 27; திருமணம் ஆகி, 11 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் குடும்பமும், என் கணவர் குடும்பமும், மிக ஏழ்மையான குடும்பம். ஆனால், என் கணவர் குடும்பத்தினர், மிகவும் பந்தா செய்வர். ஒன்றும் இல்லாவிட்டாலும், பிறரை மதிக்க மாட்டார்கள். என் கணவருக்கு, பல பெண்களுடன், ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, பல இடங்களில் அடி, உதையும் கிடைத்திருக்கிறது. அப்படியிருந்தும், என் கணவர் திருந்தவே இல்லை. இதையெல்லாம் அறிந்திருந்தும், அவரோடு வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தேன்.

என் தந்தை வீட்டிற்கும் என்னால் செல்ல முடியவில்லை. திருமண வயதில், இரு தங்கைகள், ஒரு தம்பி உள்ள நிலையில், குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்படுகிறார் என் தந்தை. அவர்களுக்கு பாரமாக இருக்க, என் மனம் இடம் தரவில்லை.

தற்சமயம், ஒரு பெண்ணுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார் என் கணவர். மாமனார், மாமியார் பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவர்கள். ஒருமுறை, என் உணவில் மருந்தை கலந்து வைத்து விட்டனர். கடவுள் தான் என்னை காப்பாற்றினார் என்று, சொல்ல வேண்டும்.

மூன்று பெண் பிள்ளைகளுடன் செய்வதறியாது தவிக்கிறேன். என் பெற்றோர் வந்து தான், சில உதவிகள் செய்து விட்டு, ஆறுதல் கூறி சென்றுள்ளனர். என் பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவேன். இரண்டு பிள்ளைகள் படிக்கின்றனர்; வழியறியாமல் தவிக்கிறேன். என் கணவர் திருந்த மாட்டாரா? மீண்டும் வந்தால், நான் எப்படி அவருடன் சேர்ந்து வாழ்வது? இப்படிப்பட்டவர்களை தண்டிக்க வழியே இல்லையா?

எனக்கு எந்த முடிவும் எடுக்க தெரியவில்லை; பிறந்த வீட்டுக்கும் செல்ல இயலவில்லை.

என் எதிர்கால வாழ்க்கைக்கு, ஒரு வழி காட்டும்படி கேட்டு கொள்கிறேன்.

- இப்படிக்கு

உங்கள் மகள்.


பிரியமான மகளே —

'வேறு பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிப் போய் விட்ட, என் கணவர் திருந்த மாட்டாரா, மனைவிக்கு துரோகம் செய்பவர்களை தண்டிக்க வழி இல்லையா...' என்று, குமுறி குமுறி, நீ எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். உன் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உன் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் தெரிந்து கொண்ட பிரச்னைகள்... கணவர், பெண் பித்து பிடித்தவர். அதனால், சிலமுறை மற்றவர்களிடம் அடி, உதையும் வாங்கியிருக்கிறார். அவரின் குடும்பம் ஒரு, 'பந்தா' குடும்பம். பிறந்த வீட்டிலும் பிரச்னைகள். எந்த வழியிலும் உனக்கு, ஆறுதல் இல்லை.

எல்லா சுமைகளும் உன் மீது திணிக்கப்படுவதால், உனக்கு எரிச்சலாக இருக்கிறது. உன் மீதும், சமுதாயத்தின் மீதும் நம்பிக்கையில்லாததால், அதுவே உனக்கு அதிக மன அழுத்தத்தை தந்து கொண்டு இருக்கிறது.

பிள்ளைகளை காப்பாற்றும் பொறுப்பை நீ ஒருவளே ஏற்றுக் கொண்டிருக்கிறாய். கணவர் பக்கம் எந்த உதவியும் இல்லை. மாறாக, திட்டும், அடியும், வீண் செலவும் தான். உன் மூன்று பெண் குழந்தைகளும் உன்னை அண்டி, உன் நிழலில் வளர்ந்து வருகின்றனர்.

இச்சூழலில் நீ செய்ய வேண்டியது:

குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் நீ, எக்காரணத்தை கொண்டும் மனம் தளரக் கூடாது.

ஒருவேளை மனச்சோர்வு வந்தால், 'என்னால் பிரச்னைகளை இலகுவாக சமாளிக்க முடியும்!' என்று, மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லி,தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

உன் கல்வித் தகுதியை குறிப்பிடவில்லை. இருப்பினும், கூடிய விரைவில், பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்ற பெண்ணாக நீ உருவாக வேண்டும். இது உனக்கும், பிற்காலத்தில் உன் பெண் குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும்.

நீ தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்துவதை, உன் பெண் குழந்தைகள் பார்க்கும் போது, அவர்களுக்கும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை வளரும்.

உன் கணவர், 'நார்மல் செக்சில்' திருப்திபடும் வகையை சேர்ந்தவராக தெரியவில்லை. அதீத காமத்தின் விளைவாக ஏற்படும் மன வியாதியின் ஆரம்பமாக இருக்கலாம். அதனால் தான் அதற்காக, அடி, உதை வாங்கினாலும், அதை பொருட்படுத்தாதவராக இருக்கிறார்.

அவரின் ஒத்துழைப்பின் தன்மைக்கு ஏற்ப, அவர் இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம். அது அவர் கையில் தான் இருக்கிறது. தேவையிருப்பின், மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று உதவி பெறலாம்.

உன் கணவர் வழியில் எந்த உதவியும் இல்லாத காரணத்தால், சிறிது காலம், உன் தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று வசிக்கலாம். இத்தகைய பிரிவு, உன் கணவரின் மனதை மாற்ற வாய்ப்பு ஏற்படும்.

இவ்வளவு விஷயங்களும் உன் குழந்தைகளுக்கு தெரியாமல் இருப்பது நல்லது. தெரிய வந்தால், பிற்காலத்தில் அவர்களது மனநிலை பாதிக்கப்படும். குழந்தைகள் வளர்ந்த பின், அவர்களே பிரச்னைகளை புரிந்து கொள்ளும் நிலை வந்தவுடன், நடந்தவைகளை கூட்டியோ, குறைத்தோ சொல்லாமல், அப்படியே சொன்னால் உன் குழந்தைககளுக்கு மற்றவர்கள் மீதும், சமுதாயத்தின் மீதும் ஏற்படும் வெறுப்பு குறையும்.

எப்படிப்பட்டவர்களையும் உண்மையான அன்பால் நல்வழிப்படுத்த முடியும். அன்பும், நம்பிக்கையும் வளரும். எனவே, உன் பெண் குழந்தைகளுக்கு நீயே அம்மையும், அப்பனுமாக இருக்க முயல வேண்டும்.

மகளே, உன் பிரச்னைகள் யாவும் நீங்கி உன் மனம் போல சுதந்திரமாக நீ வாழ, வாழ்த்துகிறேன்.

என்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us