PUBLISHED ON : மார் 02, 2014

ஒரு முறை குற்றால டூர் வந்த வாசகர்கள், திரும்பவும், குற்றால டூரில் கலந்து கொள்ள ஆசைப்பட்டாலும், அடுத்தடுத்த வாசகர்களுக்கு வாய்ப்பு தருவதற்காக, மனம் நிறைந்த வாழ்த்தை சொல்லி, கடிதம் எழுதுவார்களே தவிர, வரமாட்டார்கள். இது, வாசகர்கள், அவர்களுக்கு அவர்களே, விதித்துக் கொண்ட கட்டுப்பாடு.
இந்த கட்டுப்பாட்டை மீறி, விழுப்புரம் வாசகி யாஸ்மின், மீண்டும் ஒரு முறை வருவதற்காக, ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அவர் வர விரும்பியதற்கான முதல் காரணம், அந்துமணியை சந்தித்து, செல்லமாக சண்டை போடுவதற்கு.
இதை சொன்னதும், 'இதுக்கு எதற்கு குற்றால டூர் வந்து சிரமப்படணும். இதோ உங்களுக்கு பக்கத்திலே இருக்கும் சென்னைக்கு ஒரு நாள் வந்தால், முழுக்க முழுக்க அந்த நாள் உங்களுக்காகவே ஒதுக்கப்பட்ட நாளாக இருக்கும்; நீங்கள் பல விஷயங்களை அவரிடம் பேசலாம். அவர் தரும் ஊக்கத்தில் எழுதலாம். உங்களைப் போன்ற வாசகர்கள் பரபரப்பான டூர் சமயத்தில் சந்திப்பதை விட, பரபரப்பில்லாமல், சென்னையில் சந்திப்பது இன்னும் சந்தோஷத்தை தருமே...' என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்த பின் தான், டூருக்கு வருவதை கைவிட்டார், பின் ஒரு சமயத்தில், குடும்பத்தோடு சென்னை வந்து, அந்துமணியை சந்தித்து, பேசிவிட்டு சென்றார். அந்த படம், பா.கே.ப., பகுதியில் வந்ததில், விழுப்புரம் மொத்தத்திலுமே, யாஸ்மின் குடும்பத்திற்கு பெருமை கிடைத்தது.
அந்த டூரில், வஹிதா தன் தாயார் நூருன்னிசாவுடன் கலந்து கொண்டார். விடா முயற்சியுடன், பல வருடம் கூப்பன் போட்டு, தேர்வாகி வந்த வாசகர்களை பற்றி குறிப்பிடும் போது, கடந்த இருபது வருடங்களாக கூப்பன் போட்டும், இன்னும் தேர்வாகாத, ஆனால், வருடம் தவறாமல் மதுரையில் டூர் ஆரம்பிக்கும் நாளன்று ஆஜராகி, தன் வாழ்த்தை, பதிவு செய்துவரும் ஒரு வாசகரைப்பற்றி, சில வாரங்களுக்கு முன், குறிப்பிட்டிருந்தேன்.
அவர்தான், வி.கணேஷ்; மதுரையில் பிரபல நரம்பியல் நோய் மருத்துவமனையின் சூப்பர்வைசர். சிறந்த ஆன்மீகவாதி; வாரமலர் இதழை அட்டை டூ அட்டை படிக்கக்கூடிய நீண்ட கால வாசகர். அந்துமணியை விதம்விதமாக வரைந்து, இவர் அனுப்பும் போஸ்ட் கார்டுகள், அந்துமணியின் கேள்வி - பதில் பகுதியில் நிறையவே இடம் பெற்றுள்ளன. திருமணமாகாத இவர், தினமலர் - வாரமலர் இதழுக்கு நாள் தவறாமல் வாசகர் கடிதம் எழுதக்கூடியவர். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, தற்போது, மெயில், எஸ்.எம்.எஸ்., என்று, இவரது பங்களிப்பு தொடர்கிறது.
இருபது வருடங்களாக கூப்பன் அனுப்பி வரும் இவர், இதுவரை தான் தேர்வு செய்யப்படாதது குறித்து, துளியும் வருத்தம் இல்லாமல், டூரின் முதல் நாளான்று கலந்து கொண்டு, மீனாட்சி அம்மன் கோவில் குங்கும பிரசாதம் கொடுத்து, சந்தோஷத்துடன் வழியனுப்பி வைப்பார். வெள்ளி விழா டூரின் வழியனுப்பு விழாவின் போது, ஒரு ஓரத்தில் இருந்து, நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு இருந்த இவரைப்பற்றி தெரிந்து கொண்ட அந்துமணி, வாசகர் முன்னிலையில், அவருக்கு சால்வை போர்த்தி கவுரவப்படுத்தும்படி சொன்னார். அதன்படி, அவரை பெருமைப்படுத்தியதும், மனிதர் மகிழ்ந்தும், நெகிழ்ந்தும் போனார்.
இப்படி, 97-ம் வருடம் வரை டூரை நடத்திய எங்களுக்கு, 98-ம் வருடம் புதிய அனுபவம் வாய்த்தது. அந்த வருட டூரை வாசகர்களே நடத்தினர்;
அது எப்படி என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.
குற்றாலமும், பொங்குமாங்கடலும்...
குற்றாலத்தின் பிரதான அருவியான மெயின் அருவிதான், அதிகமான சுற்றுலா பயணிகள் குளிக்குமிடம். தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில், மெயின் அருவியை, 5 கி.மீ., தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காண முடியும். தொடர்ந்து பல மாதங்களுக்கு மழை இல்லாவிட்டாலும், மெயின் அருவியில் மட்டும் தண்ணீர் கொஞ்சமாவது விழுந்து, கொண்டே இருக்கும்; மற்ற அருவிகளில் அப்படியில்லை.
மெயின் அருவியின் அழகே, அந்த பொங்குமாங்கடல் தான். இது இல்லையென்றால், மெயின் அருவி, ஒரு காட்சிப்பொருளாகத்தான் இருந்திருக்கும். மலைப்பகுதியில் சிறிய மழை பெய்தாலே, மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து, பேரிரைச்சலுடன் கொட்டும். அதிகமாக பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர், பாதுகாப்பு வளைவை தாண்டி விழும்.
இந்த அருவி, 288 அடி உயரம் கொண்டது. இவ்வளவு உயரத்திலிருந்து தண்ணீர் நேரடியாக கீழே விழுந்தால், யாரும் குளிக்க முடியாது. எனவே, மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், முதலில் பொங்குமாங்கடல் என்று சொல்லப்படும் அகலமான கிணறு போன்ற பள்ளத்தில் விழுகிறது. அது நிரம்பி வழிந்து, பொதுமக்கள் குளிப்பதற்கேற்ப, மிதமான வேகத்தில் மெயினருவியாக விழுகிறது. மேலும், மலையில் அடித்து வரப்படும் மரக்கிளைகள், பாறை போன்ற கற்களையும் பொங்குமாங்கடல் தாங்கிக் கொள்கிறது.
மெயின் அருவியில் குளிப்பவர்களுக்கு, பல வகையில் பாதுகாப்பு அளிக்கும், 19 மீட்டர் அகலம் கொண்ட இந்த பொங்குமாங்கடல், இயற்கையின் அதிசயம்தான்.
— அருவி கொட்டும்.
எல்.முருகராஜ்

