தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு அம்மாவுக்கு வணக்கம்.

நான், 23 வயதுப் பெண். முதுகலை அறிவியல் இறுதியாண்டு படித்து வருகிறேன். என் குடும்பம் மிகவும் ரம்யமானது. என் அப்பா, அம்மா மற்றும் என் நான்கு அண்ணன்களுக்கு என் மீது மிகுந்த பாசம். அதே அளவு கண்டிப்பும் உண்டு.

இரண்டு அண்ணன்கள் திருமணம் ஆனவர்கள். ஒரு சகோதரர், தொழிற்கல்வி படித்து முடித்து, வேலை பார்க்கிறார். இன்னொருவர், தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு படிக்கிறார். என் அப்பாவின் கண்டிப்பு, சிற்சில சமயங்களில் அதிகமாகவும், வார்த்தைகள் கடுமையாகவும் இருக்கும். அப்போது என் மனம் நொந்து, தற்கொலையை நாடும். ஆனால், தற்கொலை என்பது, முட்டாள்களின் செயல் என்பதால், அதை விட்டு விடுவேன்.

என் அப்பா குடிப்பழக்கம் உடையவர். எனவே, என் அம்மாவை சந்தேகித்து பேசுவார். அதனாலேயே எனக்கு ஆண்களைப் பிடிக்காது. சில வேளைகளில் என் அப்பா, என் மீதும் சந்தேகப்படுவார். நான் படித்தது எல்லாம் இருபாலர் பயிலும் பள்ளி, கல்லூரி என்பதால் தான், இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று நினைத்து, நான், பிற ஆண்களிடம் பேசவோ, அவர்களை நிமிர்ந்து பார்க்கவோ மாட்டேன். இதனாலேயே, திருமணமே செய்து கொள்ள கூடாது என்ற முடிவுக்கும் வந்தேன்.

நான் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்த போது, என் வகுப்பு மாணவன் ஒருவனின் நட்பு கிடைத்தது. என்னுடன் பாசமாக பழகுவான். கண்டிப்பு இல்லாமல், பாசம் மட்டுமே காட்டும் அவனை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் வீட்டில் எவ்வளவு பாசம் காட்டுவரோ, அத்துணை பாசம், அவன் ஒருவன் மூலமே எனக்குக் கிடைத்தது. அதனால், அவனை, என் நண்பனாக ஏற்றுக் கொண்டேன். என் நண்பனுக்கு ஒரு காதலி உண்டு; அவளும் எனக்கு தோழியானாள். ஒரு கட்டத்தில் அவள், அவனை வெறுத்து, அவனது ஜாதியை காரணம் காட்டி விலகி விட்டாள். எனவே, இவன் தற்கொலைக்கு, முயன்றான். பின், நண்பர்கள் அனைவரும் வழங்கிய ஆலோசனைகளால், அவள் நினைவுகளில் இருந்து மீண்டான்.

இதற்கிடையில், நாங்கள் நண்பர்களாக பழகுவதற்கு முன்னரே, நாங்கள் தனியாக பேசிய ஒரு சந்தர்ப்பத்தில், என்னுடைய விருப்பங்களான, வேலை பார்த்து, கை நிறைய சம்பாதித்து, ஊனமுற்றோருக்கு உதவ வேண்டும்; இரு குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பதை கூறியிருந்தேன். அதில், அவனுக்கும் உடன்பாடு இருந்தது.

அவனை, என் கூட போட்டி போட்டு படிக்க வைத்து, சராசரியாக படித்துக் கொண்டு இருந்தவனை முதல் நான்கு இடங்களுக்குள் கொண்டு வந்தேன். அவனிடமிருந்த தீய குணங்களை, அவ்வப்போது எடுத்துக்கூறி மாற்றினேன்.

இந்நிலையில், 'நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது; உன்னை, யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நீ, எனக்கு வேண்டும்...' என்பது போன்று, சொல்லிக் கொண்டே இருப்பான். 'எறும்பு ஊற கல்லும் தேயும்' என்பது போல, என் மனமும் கரைந்தது. அவன் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து, தற்போது, முதுகலை பயிலுகிறான். நாங்கள் வேறு வேறு ஜாதி என்பதால், என் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும், நிலையான வேலை அவனுக்கு கிடைக்கும் என்பதால், வீட்டில் அது குறித்து பேசி சம்மதம் வாங்கலாம் என நினைத்து, நானும் சம்மதம் தெரிவித்தேன். அவனைத் தானே திருமணம் செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தால், என் மனதைக் கொடுத்ததுடன், மூன்று முறை என்னையும் கொடுத்தேன்.

நாங்கள் காதலிப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டோம். இந்நிலையில், ஒரு நாள், என்னுடைய தோழிகளின் தொலைபேசி எண், அவனுக்கு கிடைத்தது. அதிலிருந்து என்னை கொஞ்சம் ஓரம் கட்டினான். நானும், எங்கள் வகுப்பில், அனைவருமே நண்பர்களாக பழகுவதால், நண்பர்கள் தானே என்று கண்டு கொள்ளவில்லை. ஆனால், அதுவே தொடர்ந்ததால், என் வருத்தத்தை, அவனிடம் கூறினேன். என்னை கோபமாக திட்டினான்.

இச்சூழ்நிலையில், என் காதல் விவகாரத்தை என் நெருங்கிய தோழியிடம் கூறினேன். அவள், எனக்காக அவனிடம், 'ஏன் பழைய காதலியையே நினைத்துக் கொண்டு என் தோழியை இம்சிக்கிறாய்...' என்று கேட்டதற்கு, நான் தான் அவனிடம் காதலை சொன்னதாகவும், அவனைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் கூறியிருக்கிறான். இதை அவள் என்னிடம் சொன்னவுடன் எனக்கு உயிரே போய் விட்டது. இதனால், மிகவும் மன உளைச்சலாக உள்ளது. எச்சூழ்நிலையிலும், என்னுடைய படிப்பிலிருந்து தவறியதில்லை. என் வகுப்பில், முதல் இடத்திலேயே உள்ளேன். மேலும், என் எதிர்காலத்தை நினைத்தால், மிக மிக பயமாக உள்ளது. நான் இனி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் அம்மா. உங்கள் பதிலுக்குப்பின் தான், என் வாழ்க்கையே உள்ளது.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு,

உன் நண்பனின் துர்நடத்தைகளை பற்றிய ஆவலாதிகளை, அள்ளிக் கொட்டியிருந்தாய். குடிகார தந்தை மற்றும் கண்டிப்பான அண்ணன்மார்களுக்கு இடையே வளர்ந்த உனக்கு, ஆண்கள் மீதான வெறுப்பு, விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆனால், உன் வெறுப்புணர்வை, உன் ஹார்மோன் வெட்டி சாய்த்துள்ளது. காதலில் தோல்வியடைந்தவன், உன்னை கெஞ்சி, கொஞ்சி, கும்பிட்டு, மண்டியிட்டு யாசித்து, உன் காதலை பெற்றிருக்கிறான். அவனுக்கு உன் உடலை, பரிசளித்திருக்கிறாய்.

மகளே... உன் காதலன், ஒரு சுழல்பந்து வீச்சாளரைப் போன்றவன். ஆப் ஸ்பின்னோ, லெக் ஸ்பின்னோ, கூக்லியோ வீசி பெண்கள் விக்கெட்டை சாய்க்க முயற்சிக்கிறவன். உன் விக்கெட்டை வீழ்த்தி விட்டான். அதனால், உன் மீதான பிரமிப்பு விலகி விட்டது. ஏற்கனவே காதலித்தவளின் உடலை, அவனால் அடைய முடியவில்லை. அதனால், அவள் விக்கெட்டை வீழ்த்த, சதா சர்வகாலமும் யோசித்தபடி அலைகிறான். கும்கி யானையை வைத்து, மற்ற காட்டு யானைகளை பிடிப்பது போல, உன்னை வைத்து, உன் தோழிகளையும் பிடிக்க முயற்சிக்கிறான்.

அவன் உன்னை சந்தேகிப்பதாக கூறியிருந்தாய். 'தான் திருடி பிறரை நம்பாள்' என்ற கிராமத்து சொல்லாடல், உன் நண்பனுக்கு பொருந்தும். தீயநடத்தை கொண்ட அவன், உன்னை சந்தேகிப்பது இப்படித்தான்.

உன் காதலன், நவீன ஆண்களின் பிரதிநிதி. இன்று, 99 சதவீதம் காதலர்கள் சுயநலவாதிகளாகவும், கிளைக்கு கிளை தாவும் குரங்காகவும், வாய் சவடால் பேர்வழிகளாகவும் திகழ்கின்றனர். பொதுவாகவே காதலில் பெண்கள் தூண்டில் மீனாகின்றனர். வெள்ளித்திரையிலோ, சின்னத்திரையிலோ மகிமைப்படுத்தி காட்டப்படும் காதல், நிஜவாழ்க்கையில் இல்லை. இன்றைய காதல், ஒரு வர்த்தகம் போல மாறிவிட்டது. ஆணும், பெண்ணும் ஈடுபடும் இந்த வர்த்தகத்தில், பெண்களுக்கு மட்டுமே நஷ்டம்; ஆண்களுக்கோ கொள்ளை லாபம். அவனை நீ மணந்து கொண்டால், உன் வாழ்க்கை, நரகம் தான்.

உன் காதலனை விட்டு விலகி செல். அவனை, நீ காதலித்ததற்கான ஆதாரங்கள் ஏதாவது அவனிடம் இருந்தால், அதை அவனிடமிருந்து பெற்று, அழித்து விடு.

கைநிறைய சம்பாதித்து ஊனமுற்றோருக்கு உதவுதல், இரு குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது தான் உன் நோக்கம் என, எழுதியிருக்கிறாய். அதை செயல்படுத்த நன்றாக படித்து, நல்ல வேலைக்கு போ. உன் எண்ணத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், சிறிதளவாவது நிறைவேற்று. பின், உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள். சுயநல ஆண்களின் காதல் வலையில் சிக்கத் துடிக்கும் இளம் யுவதிகளுக்கு, தகுந்த அறிவுரை கூறி, நல்வழிக்காட்டு.

பெஸ்ட் ஆப் லக் மை டியர்.

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us