PUBLISHED ON : அக் 19, 2014

அன்புள்ள அம்மா,
எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் வயது, 26; கணவரின் வயது, 28. ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளார். பார்க்க அழகு; அன்பானவர். நானும் சுமாராக இருப்பேன்.
என் பிரச்னை என்னவென்றால், என் குடும்பம் ஏழ்மையானது. ஒரு அண்ணன், திருமணமாகி மனைவியுடன் தனியே சென்று விட்டார். நான், என் மாமனார், மாமியார், கணவர், குழந்தை, மாமியாரின் அம்மா - இது என் குடும்பம். ஆரம்பம் முதற்கொண்டே என் தாய், தந்தையரை என் கணவருக்கு பிடிக்காது. அவர்கள், என்னிடம் போனில் கூப்பிட்டால் கூட என் கணவர், நான் வெளியில் இருக்கிறேன் என்று பொய் சொல்வார். இல்லையென்றால் போனை, 'கட்' செய்து விடுவார். என் அம்மா வீட்டிற்கு சென்று திரும்பும்போது, 'போய் வருகிறேன்...' என்று கூட சொல்வது கிடையாது. நான் தான் சொல்ல வேண்டும். குழந்தையை அவர்கள் தொடக் கூடாது. சமீபத்தில், ஒரு விருந்தில் என் குழந்தையை என் அம்மா ஆசையாய் தூக்கிய போது, அனைவரின் முன்னிலையில், முகத்தில் அறைந்தாற்போல், 'குழந்தையை கீழே விடுங்கள்...' என்று கூறிவிட்டார் என் கணவர். என் அம்மாவிற்கு கண்ணீரே வந்து விட்டது. இத்தனைக்கும் என் குழந்தையை வளர்த்தவர் அவர் தான். என் அம்மா, அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட நான் பார்க்கப் போகக் கூடாது; என் வீட்டிற்கோ, உறவினர் வீடுகளுக்கோ தனியே செல்லக் கூடாது. போனில் யாருடனும் பேசக் கூடாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நானும் பொறுமையாக இருந்து விட்டேன்; என்னால் முடியவில்லை. அன்பா, அழுது சண்டையிட்டும் சொல்லிப் பார்த்து விட்டேன்; திருந்துவதாக இல்லை. என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்க மாட்டார் என் கணவர். என் மேல் அவ்வளவு காதல். எனக்கும் என் கணவர் என்றால் உயிர். என் குடும்பம் கூலி வேலை செய்யும் குடும்பம். என் கணவரிடம் பத்து பைசா கூட எதிர்பார்க்க மாட்டார்கள். கூலி வேலை செய்து, பிளஸ் 2 வரை படிக்க வைத்தனர். காதல் வலையில் வீழ்ந்து, பெற்றோர் சம்மதத்துடன், இவரை கரம் பிடித்தேன். நான் எதிலும் சுதந்திரம் கேட்கவில்லை. என் தாய், தந்தைக்கு நான் ஒரு மகளாக செய்யும் கடமைகளை செய்ய விட்டால் போதும். அவர்களிடம் அன்பாய் ஒரு வார்த்தை போனில் பேசினால் கூட நிம்மதி கிடைத்து விடும். அவரின் தாய், தந்தைக்கு நான் இன்று வரை ஒரு மகளாகத் தான் இருந்திருக்கிறேன்; இது அவருக்கே தெரியும். என் மேல் குற்றம் இல்லை அம்மா. இப்படி பெற்றவர்களை நோகடித்து, நமக்கு ஒரு இன்பமான வாழ்க்கை தேவையா என்று, பல சமயம் நினைக்கிறேன். இதனால், என் கணவரை பிரிந்து விடலாமா என, சில சமயம் தோன்றுகிறது. சரியான முடிவு சொல்லுங்கள் அம்மா.
- இப்படிக்கு
உங்கள் மகள்.
அன்புள்ள மகளுக்கு,
வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொண்ட உன் கணவனுக்கு, உன் பெற்றோரின் வறுமை இளப்பமாக தோன்றுகிறது. எல்லாவற்றையும் மீறி, தான், தம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அடுத்தவர் குடும்பத்துடன் ஒட்டுதலோ, உறவோ தேவையில்லை என்கிற உன் கணவனின் சுயநலமே, உன்னை உன் வீட்டு மனிதர்களுடன் ஒட்ட விடாததற்கு காரணம். சில ஆண்களுக்கு, மாமனார் தேவையில்லை; மாமனார் பெற்ற மகள் தேவை.
தனியே போனில் உன்னை உன் பெற்றோரிடம் உன் கணவன் பேச அனுமதிக்காததற்கான காரணம், ஒன்று, கணவனின் குடும்பத்தினர் பற்றிய குறைகளை உன் பெற்றோரிடம் கூறி விடுவாயோ என்ற பயம். இரண்டு - தனியே மணிக்கணக்கில் பேசி, பெற்றோர் மீதான பாசத்தை பல மடங்கு பெருக்கிக் கொள்வாயோ என்ற சுயநலம்.
பெற்று, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கி, பெரும் செலவு செய்து திருமணம் செய்து வைக்கும் பெற்றோரை, புகுந்த வீட்டில் காலடி வைத்ததும், லகுவாக மறந்து விடுகின்றனர் சில பெண்கள். தந்தைக்கு, 'ஹார்ட் அட்டாக்' என்ற செய்தி வந்தாலும், மரணச் செய்தி வரட்டும் ஒரேயடியாக போய் கொள்ளலாம் என, இரும்பு மனதுடன் இருக்கும் மகள்களும் தமிழகத்தில் உண்டு. பெற்ற தாயை சமையல்காரியாகவும், ஆயாவாகவும் பாவிக்கும் பெண்களும் இருக்கின்றனர். அவர்களுக்கிடையே நீ அபூர்வமான பெண் தான்.
பெற்றோரின் மீது பாசத்தைப் பொழிய அனுமதிக்காத கணவனுடன், இன்ப வாழ்க்கை தேவையா என்ற குற்ற உணர்வில் மருகியிருக்கிறாய். இந்த ஒரு பிரச்னைக்காக, கணவனை பிரிய நினைப்பது தவறு.
சிறிது சுயநலத்துடன் உன் பெற்றோர் மீதான அன்பை கொஞ்சமாக சுருக்கிக் கொள். நீ மாமனார், மாமியாரிடம் தனியே பேசி, பெற்றோருடன் மாதம் இருமுறையாவது பேசிக் கொள்ள கணவனை சம்மதிக்க வை. கணவன் நல்ல மூடில் இருக்கும்போது, உன் கணவனுக்கு அவனது பெற்றோர் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் உனக்கு உன் பெற்றோர், என்பதை விளக்கு.
இதற்கும் உன் கணவன், கணவன் வீட்டார் ஒத்துவரவில்லை என்றால், இறுகிய மனதுடன் கணவன் விதித்த தடைகளை முழுமையாக பின்பற்று. நீ, உன் கணவனை விட்டு பிரிந்து வந்து, தங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என, உன் பெற்றோர் கனவிலும் விரும்ப மாட்டார்கள். எல்லா உறவுகளும், பிரிவதற்கே என்ற தத்துவார்த்த நிலைக்கு என்றோ வந்திருப்பர்.
அனைத்தையும் மீறி, நீ உன் பெற்றோருடன் பேச வேண்டும் என்றால், ரகசியமாக ஒரு கைபேசி வாங்கிக் கொண்டு பேசு. பெற்றோரை தலைமுழுகி விட்டது போல நடித்தபடி, அவர்களிடம் அன்பு பாராட்டு.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
