தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு—

என் வயது, 35; கணவரின் வயது, 45. நீதித்துறையில் பணிபுரிகிறேன். 12 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இயற்கையாகவே எனக்கு செக்சில் நாட்டம் அதிகம். இதனால், பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில், என்னுடன் பணிபுரியும் திருமணமான, இரு குழந்தைகளுக்கு தந்தையான, 42 வயதுடைய நபருடன் பழக்கம் ஏற்பட்டு, கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். பின், நாங்கள் பல ஊர்களுக்கு சென்று தங்கி, வித விதமாக புகைப்படங்கள் எடுத்து சந்தோஷமாக இருந்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக கணவன், மனைவி போல் சுற்றி வந்தோம்.

என் தவறான உறவை அறிந்த என் கணவர், என்னை அடித்து கண்டித்தாலும், பின், மன்னித்து ஏற்றுக் கொண்டார். ஆனால், அந்நபரையும், அவரின் அரவணைப்பையும் மறக்க முடியாமல், அவருடனான தொடர்பை தொடர்ந்தேன்.

இதன் காரணமாக, என் கணவர், மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி, என் கள்ள உறவை புகைப்பட ஆதாரங்களுடன் காட்டி, விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்சமயம், வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இதற்கிடையில், என்னுடன் பழகிய நபர், தன் மனைவியை விவாகரத்து செய்வது போல பாசாங்கு செய்து, பின், 'என் குழந்தைகளை பிரிந்து என்னால் இருக்க முடியாது...' என்று, பலவாறாக என்னை சமாதானம் செய்து, வழக்கை வாபஸ் பெற்று என்னை ஏமாற்றினார். மேலும், என்னைப் பார்ப்பதையும், என்னுடன் பழகுவதையும் தவிர்த்தார்.

இடையில், சில மாதங்களுக்கு முன் என்னை அணுகி, 'நாம் இருவரும் உடலளவில் மட்டும் இணைந்து இருப்போம்...' எனக் கூறினார்; அதை, நிராகரித்து விட்டேன். ஆனால், அந்நபர் என்னை தொடர்ந்து சமாதானம் செய்து, அவரின் ஆசைக்கு இணங்க வைத்தார். அதனால், கடந்த ஆறு மாதங்களாக பழகி வந்தோம்.

அதன்பின், அவரை நம்பி, சேமித்த வைத்திருந்த பணம் இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் ஆறு சவரன் நகைகளை அவருக்காக செலவு செய்து, தனி வீடு எடுத்து அதில், கடந்த மூன்று மாதங்களாக சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம்.

என் கணவர், இதையெல்லாம் என் மகனுக்கு தெரியப்படுத்தியதால், தற்போது அவன் என்னை வெறுக்கிறான். வழக்கையும் முன்பை விட வேகமாக நடத்தி வருகிறார் கணவர். இதனால், நான் பணிபுரியும் நீதிமன்றத்திலும், பொது இடத்திலும் மிகப் பெரிய தலைகுனிவு எனக்கு ஏற்பட்டுள்ளது. தற்சமயம், அந்நபர் என் பணத்தையும், மரியாதையையும் சீர்குலைத்து விட்டு, மறுபடியும் தன் குடும்பத்துடன் இணைந்து விட்டார். நான், ஏமாந்தது தான் மிச்சம்.

இதனால், மரியாதை இழந்து, பெற்றோர், கணவர் மற்றும் மகன் ஆகியோரின் முகத்தில் விழிக்க முடியாமல் அசிங்கமும், அவமானமும் பட்டு, வீதியில் நிற்கிறேன். நன்றாக படித்து இருந்தும், துடிப்புடன் தொழில் செய்து முன்னேறி, சொந்தமாக வீடு மற்றும் கார் வைத்திருந்தும், என்னுடைய கேவலமான செயல் மற்றும் நடத்தையால் இன்று தனி மரமாக நிற்கிறேன்.

அந்நபர், தான் செய்த செயலுக்காக சிறிதும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ஆனாலும், அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை என்றே, என் மனம் அலை பாய்கிறது. எனவே, அம்மா எனக்கு சரியான அறிவுரை வழங்கும்படி, கேட்டுக் கொள்கிறேன்.

— இப்படிக்கு பெயர் வெளியிட

விரும்பாத மகள்.


அன்பு மகளுக்கு—

உன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை வாசித்தேன். உன் கணவர் குடிக்கிறார் என்றோ, சின்ன வீடு வைத்திருக்கிறார், தாம்பத்ய சுகத்தை தர மறுக்கிறார் என்றோ நீ, உன் கணவன் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கவில்லை. அத்துடன், சட்டப்படி திருமணம் செய்த கணவர் உயிருடன் இருக்கையில், திருமணமான இன்னொரு ஆணை ரகசிய திருமணம் செய்து, ஐந்து ஆண்டுகள் உல்லாசமாய் வாழ்ந்தாக கூறுகிறாய். நீதித்துறையில் பணிபுரியும் பெண்ணுக்கு, வாழ்க்கையில் நீதியாக நடக்கத் தெரியவில்லை.

உன் கணவரிடமிருந்து உனக்கு விவாகரத்து கிடைத்து, உன் கள்ளக் காதலனுக்கு அவனுடைய மனைவியிடமிருந்து விவாகரத்து கிடைத்து, உங்கள் கோவில் திருமணம் செல்லத்தக்கது என்றாலும் கூட, நீ மூன்றாமவனை தேடுவாய்; அவன் அடுத்தடுத்த பெண்களை தேடுவான்.

இவ்வுலகில் கெட்ட நண்பன், கெட்ட முதலாளி, கெட்ட உறவினர்கள் இருக்கலாம். ஆனால், கெட்ட அம்மா என்று ஒருவரும் கிடையாது. எல்லா அம்மாக்களும் அவரவர் குழந்தைகளுக்கு நல்ல தாய் தான். ஆனால், நீ, 12 வயது மகனை உதாசீனப்படுத்தி, அவனுடைய வளமான எதிர்காலத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல், கள்ள உறவில் மூழ்கி களித்திருக்கிறாய். உன்னுடைய கள்ள உறவுக்காக, நீ சிறிதும் வெட்கமோ, வேதனையோ படவில்லை. ஆனால், கள்ள உறவை கணவனும், வெளியுலகும் கண்டிக்கிறதே என சங்கடப்படுகிறாய். இவ்வளவுக்கு பின்னும் கள்ள நண்பர் தான் தேவை என, அடம் பிடிக்கிறாய்.

மகளே... மிதமிஞ்சிய காமத்தால் வாழ்ந்தவர் யாருமில்லை; வீழ்ந்தவர் தான் பலகோடி. இதனால், பல சாம்ராஜ்ஜியங்கள் தலைகுப்புற கவிழ்ந்திருக்கின்றன. முறையற்ற காமம், அவர்களது, 10 தலைமுறையினருக்கு கரும்புள்ளியை பச்சை குத்தி விடும். அதனால், கள்ள நண்பனின் நினைப்பை உன் மனதிலிருந்து நீக்கு. 'இனிமேல் மனதை அலைபாய விட மாட்டேன்...' என்று உன் கணவனிடமும், மகனிடமும் மன்னிப்பு கேள்.

சபல புத்தியை கருவறுக்க குலதெய்வத்திடம் வேண்டு. உன் நம்பிக்கையான நடத்தையே, உன் கணவனை விவாகரத்து வழக்கை வாபஸ் பெறத் தூண்டும். உனக்குள் இருக்கும் கட்டுப்படுத்த முடியாத காம உணர்வை சைவ உணவாலும், யோகா மற்றும் தியானத்தாலும் கட்டுப்படுத்து. கள்ள நண்பனை சந்திக்காமலிருக்க, அனைத்து உபாயங்களையும் மேற்கொள்.

கையில் நிறைய பணமும், கழுத்தில் நிறைய நகையும் வைத்திருக்காதே. சேமிப்பு பணத்தை மகனின் பெயரில், 'பிக்சட் டெபாசிட்' செய். வாழ்க்கையை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல், தத்துவார்த்தமாய் பார். காம எண்ணத்திலேயே மூழ்கி திளைக்காமல், மனதை ஒரு நிலைப்படுத்தி நேரான வழியில் நடந்து, இலக்கை அடை!

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us