தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பதவியும், குதிரையும்!

பதவியும், குதிரையும்!

பதவியும், குதிரையும்!


PUBLISHED ON : ஏப் 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசை யாரை விட்டது? சாதாரணமானவர்களுக்கு, சாதாரண ஆசை. பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கோ, பெரிய ஆசைகள். நாட்டை ஆளக்கூடியவர்கள், சாதாரண துறவியின் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவருடன் மோதிய வரலாறு இது:

நலன் (நளன் அல்ல) என்ற மன்னன், வேட்டையாடப் போனான். ஒரு மானைத் துரத்தி நெடுந்தூரம் போனதில், குதிரைகள் களைத்துப் போயின. அதனால், எவ்வாறு நாடு திரும்புவது என்று யோசித்த மன்னரின் பார்வையில், வாமதேவ முனிவர் அகப்பட்டார்.

முனிவரை வணங்கிய அரசர், 'மாமுனிவரே... உங்களிடம் உள்ள இரண்டு குதிரைகளைத் தந்தால், நான் நாடு திரும்பிய பின், குதிரைகளை திருப்பி அனுப்பி விடுவேன்...' என, வேண்டினான்.

முனிவரும் சம்மதித்து, குதிரைகளை கொடுத்தார். நாடு திரும்பிய மன்னனுக்கு, முனிவர் அளித்த குதிரைகளின் அழகு, கம்பீரம் மற்றும் வேகம் ஆகியவை மனதைக் கவர்ந்ததால், குதிரைகளை தானே சொந்தமாக்கி கொள்ள முடிவு செய்தான்.

நாட்கள் வாரமாகி, வாரங்கள் மாதங்களாகின. குதிரைகள் திரும்பாததால், வாமதேவர் தன் பணியாட்களை அனுப்பி, குதிரையை திரும்ப அழைத்து வரப் பணிந்தார். ஆனால், மன்னன் குதிரைகளைத் தர மறுத்து விட்டதால், முனிவரே நேரில் வந்து கேட்டார்.

'காட்டில் ஆசிரமத்தில் வாழும் உங்களுக்கு குதிரைகள் எதற்கு? வேண்டுமானால், அவற்றுக்குப் பதிலாக, என் குதிரைகளில் இரண்டைத் தருகிறேன்; வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று கூறினான் மன்னன்.

அதை ஏற்க மறுத்த முனிவர், 'மன்னா... தவறு செய்யாதே... நீ தவறு செய்தால், உன்னைப் பார்த்து, உன் நாட்டு மக்களும் கெடுவர்; அதன்பின் நாடே கெட்டுப் போகும்...' என்றார்.

'ஆட்சி செய்யும் எனக்கு, ஒரு ஆண்டி அறிவுரை கூறுவதா...யாரங்கே... இவரை கொல்லுங்கள்...' என்று கட்டளை பிறப்பித்தான் மன்னன்.

பொறுமை இழந்த முனிவர், தன் தவ சக்தியால் அரசரையும், அவரைக் கொல்ல வந்த வீரனையும் கொன்றார்.

நலன் இறந்த பின், அவன் தம்பி பதவிக்கு வந்தான். அண்ணனை விட, நயவஞ்சகன் இவன். எதிர்பாராமல் கிடைத்த அரச பதவி, அவனுள் ஆணவத்தை வளர்த்தது. அவனிடம் சென்று, முனிவர் தன் குதிரைகளைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

இவனோ, அண்ணனைப் போல ஆளை அனுப்பாமல், தானே முனிவரை கொல்ல, வில்லை எடுத்து, அதில், அம்பைத் தொடுத்தபோது, கோபமடைந்த முனிவர் சாபம் கொடுத்தார்.

அதன்படி, அரசனின் கைகள் அப்படியே செயலற்றுப் போக, அவன் பயந்து, முனிவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். கூடவே, முனிவரின் குதிரைகளை அவரிடம் ஒப்படைத்தான். அதன்பின், முனிவரின் அருளால், அவன் கைகள் இயங்கின. குதிரைகளுடன் ஆசிரமம் திரும்பினார் முனிவர்.

ஆபத்தில் உதவியவர்களுக்கு தீங்கு செய்ய நினைப்பவன் அரசனாக இருந்தாலும், அழிந்து போவான்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!

தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்

டர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்

கடந்து நின்றான் கமலம் மலர்மேலே

உடந்திருந்தான் அடிப்புண்ணியம் ஆமே!

கருத்து:
உயிர்களை எல்லாம் தொடர்ந்து காத்து அருளும் பரம்பொருளை பணிந்து வணங்குங்கள். அவ்வாறு வணங்கி வழிபட்டால், இவ்வுலகும், மற்றுமுள்ள அண்டங்கள் அனைத்தையும் கடந்து நிற்கும் அப்பரம்பொருள், நம் உள்ளம் எனும் மலர் மீது வந்து அமர்ந்து அருள்புரியும். அந்தப் பரம்பொருளின் திருவடிகளை தொழுவது புண்ணியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us