தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு,

நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். போதுமான வருமானமும் கிடைக்கிறது. என் வயது 36; திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என் மனைவி பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருக்கிறார். திருமணத்திற்கு முன், பல பெண்களிடம் தவறாக நடந்து உள்ளேன். எனக்கு முன் கோபமும், முரட்டுத்தனமும் அதிகம். ஆனாலும், இன்று வரை, என் மனைவிக்கு நல்ல கணவனாகத் தான் இருக்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், விவாகரத்துப் பெற்ற ஒரு பெண்ணை, என் தொழில் சம்பந்தமாக பார்க்க நேரிட்டது. இப்போது, அவள் வயது, 30. எல்லா பெண்களுடன் பழகுவது மாதிரிதான் அவளிடம் பழக ஆரம்பித்தேன். பழகப் பழக, அவள் குணம் மிகவும் பிடித்து விட்டது.

அவளுக்கும் என் குணம் பிடித்துப் போய் நெருக்கமாகி விட்டோம். அவளுக்கு வயது வந்த ஒரு பெண்ணும், மனம் குன்றிய தந்தை, தாய் மற்றும் பெரியம்மா உள்ளனர். நான் அவளிடம் நெருங்கி பழகியதால், அவளின் உறவினர் அனைவரும் அவளை வெறுத்து விட்டனர். இவளும் நான் தான் கதி என்று இருந்து விட்டாள். அதனால், அவள் வீட்டினர் முன்னிலையில் தாலி கட்டி என் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டேன்.

இவ்விஷயம், என் முதல் மனைவிக்கும் தெரிந்து, 'என்னையும், என் பிள்ளைகளையும் அனாதையாக விட்டு விடாதே...' என்று கூறி, இரண்டாவது மனைவி வீட்டுக்கு சென்று வர, அரைகுறை மனதுடன் சம்மதித்தாள்.

நான் நிரந்தரமாக இரண்டாவது மனைவி வீட்டுக்குச் சென்று விட மாட்டேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, அவளுக்கு! நானும் அப்படித்தான்.

நான் இரண்டாவது திருமணம் செய்து, நான்கு ஆண்டுகள் கழிந்து விட்டன. இதுவரை, எங்கள் குடும்பத்தில், எந்த பிரச்னையும் இல்லை.

இந்நிலையில், இரண்டாவது மனைவி, தன் மகளுக்கு சடங்கு செய்ய ஆசைப்பட்டாள். இதை, முதல் மனைவியிடம் சொல்லி சம்மதம் கேட்டேன். அதற்கு, 'பத்திரிகையில் உங்கள் பெயர் போட்டா, உங்கள பெத்தவங்களுக்கும், கூடப் பிறந்தவங்களுக்கும் முதல்ல பத்திரிகை வை...' என்று கூறினாள்.

அப்படி பத்திரிகை வைத்தால், விசேஷம் நடக்கும்போது, அவர்கள் ஏதாவது பிரச்னை செய்து விடுவரோ என்று எண்ணி பயந்தேன். அதனால், இரண்டாவது மனைவியிடம் சொல்லாமல், பத்திரிகையில், இன்ஷியல் போடாமல், 'புரூப்' வாங்கி விட்டேன். இதை, இரண்டாவது மனைவி பார்த்து, 'இவ்வளவு பிரச்னை இருக்கிறது என்றால், பத்திரிகை அடிக்கவே வேண்டாம்...' என்று கூறினாள்.

இப்போது இப்படி கூறுபவள், பிறகு பிரச்னை செய்வாள் என்று எண்ணி, இரண்டாவது மனைவிக்கு தெரியாமலேயே, இன்ஷியல் போடச் சொல்லி, பத்திரிகை அடித்து விட்டேன். ஆனாலும், பயந்தபடியே இருந்தேன்.

பத்திரிகை அடித்த அன்று இரவு, இரண்டாவது மனைவி வீட்டுக்குச் சென்றேன். அவளின் அம்மா, ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அதனால், தூங்குவதற்காக பெட்ரூம் சென்றேன்.

அங்கு எங்கள் மகள் படுத்திருந்தாள். நானும் அருகில் படுத்தேன். வேலை செய்த களைப்பில் உடனே தூங்கி விட்டேன். இரண்டாவது மனைவி வந்து பார்க்கும்போது, நான் அயர்ந்து தூங்கியதால், என்னை எழுப்பாமல், அவள் அம்மாவுடன் ஹாலில் தூங்கி விட்டாள்.

இரவு, 12:00 மணி இருக்கும்... மகள் என் மீது காலையும், கையையும் போட்டபடி தூங்கிக் கொண்டிருந்தாள். எனக்கு திடீரென, பத்திரிகை ஞாபகம் வந்து, தூக்கம் வரவில்லை. யோசித்தேன்... என்னால், இரண்டாவது மனைவியை வெறுக்க முடியாது. அவள், என்னை வெறுத்து விட்டால், இந்த விசேஷம் நின்று விடும் என்று எண்ணி, என்னை கெட்டவனாக, அவள் மனதில் பதிய வைக்க என்ன செய்வது என்று நினைத்து, மனதை கல்லாக்கி, மகளின் வயிற்றில் கையை வைத்து அழுத்தி தள்ளினேன்.

இதை தவறாக புரிந்து, மகள், அம்மாவிடம் சொல்வாள். பின், சண்டை போட்டு என்னை வீட்டை விட்டு வெளியேற கூறுவாள்... அதன் பின், அவள் மனதில் நாம் இருக்க மாட்டோம் என்று நினைத்தேன். நான் நினைத்தது மாதிரி தான் நடந்தது. ஆனால், இரண்டாவது மனைவி நடந்து கொண்ட விதம், என்னை மிகவும் வேதனைப்படுத்தி விட்டது.

அவள் கோபப்படாமல், என் அருகில் வந்து, 'ஏன் இப்படி செய்தீர்கள்...' என்று மட்டும் தான் சொன்னாள்.

அவளின் கண்களில் கண்ணீர் மல்கி நின்றது. 'நீங்க உங்க வீட்டுக்கு போங்க... மகள் பயப்படுகிறாள்...' என்று கூறினாள்.

நானும் முதல் மனைவியின் வீட்டுக்கு வந்து விட்டேன். விடியும் வரை தூக்கம் இல்லை; மன்னிக்க முடியாத தவறு செய்து விட்டோமே என்ற மன உளைச்சல் வேறு!

மறுநாள், இரண்டாவது மனைவி வீட்டுக்குச் சென்றேன். பித்து பிடித்தது மாதிரி இருந்தாள்.

என் தாலியையும் கழற்றி கொடுத்து விட்டாள். இப்போது நானும், அவள் கூட இல்லை. அவளின் சொந்த பந்தமும் கூட இல்லை. கெட்ட பெயர் வேற. என்ன செய்யப் போகிறாள் என்றே தெரியவில்லை. முதலில் நேசித்ததை விட, இப்போது தான் இவளை அதிகம் நேசிக்கிறேன்.

அவள் கஷ்டப்படக் கூடாது. அதற்காக உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். அதை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என் பிள்ளைகள் வேறு, இவள் பிள்ளைகள் வேறு என்று, ஒருபோதும் நினைத்தது இல்லை. இரண்டாவது மனைவி, மகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது. நான் என்ன செய்வது, தயவு செய்து எனக்கு நல்ல அறிவுரை கூறுங்கள் அம்மா.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள மகன்.

அன்புள்ள மகனுக்கு,

உன், 'இரட்டை வால் குருவி' கதை என்னை, பெரிய அளவில் ஆயாசப்படுத்தி விட்டது. தவறுகள் செய்திருந்தாலும், நீ மனசாட்சி உள்ளவன். எல்லா சுகங்களையும் தந்தும், கணவன் இன்னொருத்தியை மணந்து கொண்டான். இருந்தாலும், கணவன் இன்னொருத்தியின் வீட்டுக்கும் சென்று வரட்டும் என்கிற மனிதாபிமானம் மிக்கவள், உன் மனைவி. தன் இரண்டாவது கணவன், தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டான். அவனை விட, மகளே முக்கியம் என்பதற்காக, தாலியை கழற்றி கொடுத்து, முதல் மனைவி வீட்டுக்கு சென்று விடக் கூறிய இரண்டாவது மனைவி மற்றும் நீங்கள் மூவருமே சிறந்த குணச்சித்திரங்கள்.

இரண்டாவது மனைவியின் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்த நீ விழைந்ததில் பெரிய தப்பில்லை. எழுத்துப்பூர்வ இன்விடேஷனே அடிக்காமல், வாய்வழியே அழைத்து விழாவை மிக சிறப்பாக நடத்தியிருக்கலாமே... விழாவை நிறுத்த, உன்னை கெட்டவனாக காட்ட சினிமாத்தனமாக ஏன் முயற்சி செய்தாய்? இவ்விஷயம் தெரிந்தால், உன் முதல் மனைவியும் காறித் துப்புவாள்.

மீண்டும் முதல் மனைவியிடமே திரும்பி விட்டாய். நல்லவேளை இரண்டாவது மனைவிக்கு, உன் வழியாக குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி, உன்னுடன் ஜோடி சேர்ந்ததால், அவளது சொந்தங்கள், அவளை வெறுத்து ஒதுக்கி விட்டன. அவளுக்கென்று தனியாக வருமானம் கிடையாது என்றுள்ளாய். முதலாம் கணவனை விவாகரத்து செய்ததில் ஜீவனாம்சம் ஏதும் அவளுக்கு கிடைக்கவில்லையா? உன்னிடம் தொடர்பு ஏற்படுவதற்கு முன், முதலாம் கணவனை விவாகரத்து செய்த பின், குடும்ப செலவிற்கு என்ன செய்து கொண்டிருந்தாள், உன் இரண்டாவது மனைவி?

இனி, திருமண பந்தம் மீறிய எந்த உறவிலும் ஈடுபடக் கூடாது என்பதில் தெளிவாக இரு. முதல் மனைவியிடமும், இரு மகள்களிடமும் அதிக நேரத்தை செலவிடு. முதல் மனைவியிடம், உன் துர்நடத்தைக்காக மன்னிப்பு கேள்.

திரும்ப இரண்டாம் மனைவியிடம், இணைய எந்த முயற்சியும் செய்யாதே. முறிந்தது முறிந்ததாகவே இருக்கட்டும்.

இனி நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே...

உன் குற்றமற்ற தன்மையை விளக்கி, இரண்டாவது மனைவிக்கு, ஒரு கடிதம் எழுது. அவளின் மகளை தவறான எண்ணத்தில் தொடவில்லை என்பதை விளக்கு. நம் உறவு முறிந்தது, நம்மிரு குடும்பங்களுக்கும், ஒரு வகையில் நல்லதுதான். அதனால், இந்த பிரிவை நிரந்தரமாக்குவோம். உன் மற்றும் நம் மகள் எதிர்காலத்துக்காக, இரு பெரிய தொகைகளை டிபாசிட் செய்கிறேன். அதன் மூலம் கிடைக்கும் வட்டியை, உன் மாத செலவுக்கும், நம் மகள் படிப்புக்கும் பயன்படுத்து. பிக்சட் டிபாசிட் ஐந்து ஆண்டுகளில் முடிந்து விடும். அந்த பணத்தை, மகளின் திருமண செலவுக்கு பயன்படுத்து - என எழுது. உன்னை அவள் பிரிந்ததால், அவளது பிரிந்த உறவுகள் மீண்டும் அவளுடன் கூடட்டும்.

கடிதத்தை படித்தவுடன், உன் இரண்டாம் மனைவி, உன்னுடன் மீண்டும் சேர ஆவலாதிக்கக் கூடும்; அது வேண்டாம்.

இரு பெரும் தொகைகளை, பிக்சட் டிபாசிட் செய்யும் முன், முதல் மனைவியிடம் அனுமதி பெறு.

எல்லாம் சுமுகமாய் நடந்து முடிந்ததும், மன அமைதி பெற, ஒரு ஆன்மிக சுற்றுலா குடும்பத்துடன் சென்று வா. இறைவன் மிகச் சிறந்த மருத்துவன்; எல்லா காயங்களுக்கும் அவன் மருந்திடுவான்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us