
அன்புள்ள அம்மா அவர்களுக்கு —
என் வயது, 47; சொந்தக்கார பெண்ணை தான் திருமணம் செய்தேன். எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, இறந்து விட்டன. இந்நிலையில், 'உங்க கூட வாழ விருப்பம் இல்ல...' என்று சொல்லி, ஊர் பஞ்சாயத்தில், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு, விலகி விட்டாள் என் மனைவி.
அதன்பின், கைக் குழந்தையுடன் இருக்கும் வேறு ஒரு பெண்ணை, இரண்டாவது திருமணம் செய்தேன். தற்போது அவள் வயது:௩௮. எங்களின் முதலிரவு அன்று, 'நம் இருவருக்குமே இது, இரண்டாவது திருமணம்; இதற்கு முன் என்ன நடந்திருந்தாலும், அதை இன்றோடு மறந்து, உனக்கு நான், எனக்கு நீ என வாழ்வோம்...' என்று சொல்லி, எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
மறு ஆண்டில், ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளதால், ஆண் ஒன்றும், பெண் ஒன்றும் போதுமென்று கருத்தடை ஆப்ரேஷன் செய்து கொண்டாள்.
இப்போது அவளை தாம்பத்யத்திற்கு அழைத்தால், 'வர முடியாது, போடா, வாடா...' என்று தகாத வார்த்தைகளை பேசி, செருப்பை எடுத்து அடிக்க வருகிறாள். அத்துடன், 'இனிமேல் என்னை தொட்டால், தூங்கும் போது கொலை செய்து விடுவேன்...' என்று மிரட்டுகிறாள்.
ஒரு ஆண்டாக மொபைலில் யாரிடமோ பேசுகிறாள். யார் என்று கேட்டால் அவளது உறவினர் யாரையாவது சொல்கிறாள். ஆனால், உறவினர்கள் யாரும் இவளிடம் பேசுவதில்லை. 'மொபைல் போனில் தேவையில்லாமல் பேசாதே...' என்று கூறினால், 'எனக்கு இது, தேவையா இருக்கு; இதை கண்டுகொள்ளாமல் இருந்தால் இரு... இல்லன்னா, என்னை விட்டு போய் விடு...' என்று எடுத்தெறிந்து பேசுகிறாள்.
நான், காலை, 8:00 மணிக்கு வேலைக்கு சென்றால், இரவு, 8:00 மணிக்கு தான் வீட்டிற்கு வருவேன். எனக்கு சொந்தம் என்று யாரும் கிடையாது. என்னிடம் சிலர், 'உங்க மனைவி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் போனாள்...' என்று கூறினர். அதை, நம்ப மறுத்த போது, 'நீங்க விடுமுறை இன்றி வேலைக்கு செல்வதால், உங்களுக்கு தெரியவில்லை...' என்று சொல்லி, அவளைப் பற்றி, கேவலமாக கூறுகின்றனர்.
இந்நிலையில், இப்போதெல்லாம் எனக்கு அதிகமாக கோபம் வருகிறது. அதனால், இவளை கொலை செய்து விடலாமா என்று அடிக்கடி நினைக்கிறேன். ஆனால், பிள்ளைகளை எண்ணும் போது, கவலையாக உள்ளது.
பெண் படித்து முடித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். மகன் படித்துக் கொண்டிருக்கிறான். இதற்காகத் தான் அவளை இன்னும் விட்டு வைத்திருக்கிறேன்.
இப்பிரச்னை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
அம்மா... எனக்கு நல்ல ஆலோசனை தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
திருமணமான புதிதில், நீ கொடுத்த தாம்பத்ய சுகம், உன் மனைவிக்கு திருப்தியாக இருந்துள்ளது. தற்சமயம், அவளுக்கு நீ கொடுக்கும் தாம்பத்ய சுகம் போதவில்லை என்றே நினைக்கிறேன். 50 வயதை நெருங்கும் நீ, நாளின் பெரும் பொழுது வீட்டில் இருப்பதில்லை; அத்துடன் முன்கோபமும் அதிகம். இவையெல்லாம், உன் பலவீனப்புள்ளிகள்.
அமைதியாக இருந்த மனைவி, இப்போது ரவுடி போல் பேசுகிறாள் என்றால், இடைப்பட்ட ஆண்டுகளில் எது அவளை மாற்றியது? ஒன்று உன் துர்நடத்தை காரணமாக இருக்கலாம் அல்லது அவளது ஆண் நண்பர் செய்த மூளைச்சலவையாக இருக்கலாம்.
கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண்கள், மதம் பிடித்த யானைபோல நடப்பர்; பேசுவர்.அதனால், அமைதியான தருணத்தில், நீயும், உன் மனைவியும் தனியாக அமர்ந்து பிரச்னையை மனம் விட்டு பேசுங்கள். இருவரும் அவரவர், 'ஈகோ'வை கழற்றி வைத்து, பேசுவது நல்லது. உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை மையமாக வைத்து நடப்பது உசிதம். எவ்வளவு பெரிய விரிசல்களையும், பேச்சு வார்த்தை சரி செய்துவிடும்; சமாதானமே இருதரப்புக்கான வெற்றி.
அதையும் மீறி, உன் மனைவி தொந்தரவு செய்தால், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய். அது வேண்டாம் எனில், தவறு செய்யும் மனைவியிடம் எதுவும் பேசாமல் விலகி, மகன், மகளுடன் சேர்ந்து வாழ்; அம்மாவின் துர்நடத்தையை பற்றி, பிள்ளைகளின் காதுகளில் போட்டு வை.
நீ உன் மகளுக்கு உயிரியல் தந்தை அல்ல; இருப்பினும், உனக்கும், அவளுக்கும் நல்ல உறவு இருந்தால், அவளை, உன் மனைவியிடம் பேசச் சொல்.
வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்து. விடுமுறை நாட்களில் முழு நேரமும் வீட்டில் இரு. குடிப்பழக்கம் இருந்தால் குறைத்து கொள். சர்க்கரை நோய் இருந்தால், மருத்துவம் பார்த்து கட்டுக்குள் வை. வாரம் ஒருமுறை கோவிலுக்கு போ. உன் குடும்பத்தில் அமைதி நிலவ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
— என்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

