PUBLISHED ON : ஜூன் 21, 2015

அப்பா!
எங்கள் இல்லத்தின் சுமைதாங்கி
எங்கள் பயணத்தின் வழிகாட்டி
எப்போதும் ஏழ்மை தான்
எனினும் மனதில் பணக்காரர்!
நல்ல பள்ளியில் என்னை சேர்த்தார்
மதிப்பெண் குறைந்த போதிலும்
மனதாலும் என்னை கண்டிக்காதவர்
'பள்ளியை மாற்றுவோமா' என்பார்!
உடன்பிறந்தோர் எட்டு பேர்
அனைவரும் அவருக்கு சரிசமம்!
அவரால் மட்டுமே அது சாத்தியம்!
பரோட்டா கேட்போம் நானும், தங்கையும்
இருந்த பணத்துடன் கூட்டிச் செல்வார் ஓட்டலுக்கு
இருவருக்கும் வாங்கிக் கொடுத்து
தனக்கு மட்டும், 'வயிற்று வலி' என்பார்!
நான் புகைத்தேன்; அவர் கண்டித்ததில்லை
காலியா இருக்கும் என் சட்டைப் பை
அவ்வப்போது பணம் வைத்தார்
காரணம், அவரும் புகைக்கு அடிமை!
வெடுக்கென்று என்னை பேசினாள் மனைவி...
பொறுத்துக் கொள்ளாமல் போன் செய்தார்
அவளின் அப்பாவுக்கு
கோபமே வராத அவரிடம் கோபம்!
நானும், மனைவியும் சண்டைக் கோழிகள்
அப்பாவும் அம்மாவும் அமைதிப் புறாக்கள்
அவர்கள் போல வாழ முயற்சித்து தோற்கிறோம்
ஆனாலும் இருவரும் அவரை நேசிக்கிறோம்!
உறவினரை கண்டால் உறக்கம் போச்சு
விடிய விடிய ஜாலியான பேச்சு
ஊரில் ஒருவருக்கு பிரச்னை என்றால்
அவர் கண்ணில் வரும் கண்ணீர்!
உடன் பிறந்தாரை அரவணைத்தவர் அவர்
அதுபோல் நாங்கள் இல்லையே... ஏன்?
கோளாறு விதையில் இல்லை; விளைந்ததில் தான் அபார்ட்மென்ட்...
சுற்றிலும் ஒற்றை குடும்பங்கள்!
அவர் போல் நான் இருக்க முயற்சிக்கிறேன்
ஆனாலும், ஆரம்பத்திலேயே தோற்கிறேன்
இப்போதே என் மகன் கூறுகிறான்
'உங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று!
என் அப்பா இருந்த காலம் பொற்காலம்
அவர் இல்லாத காலம் இறந்த காலம்
எப்போது அவர் வருவார் எதிர்காலம்
எண்ணிக் கொண்டிருக்கிறேன் பல காலம்!
— ஏ.மீனாட்சிசுந்தரம்,
சென்னை.
