
''உங்க அப்பாவுக்கு வயசாச்சே தவிர அறிவு இல்லே... எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னோம்... கேட்காம, அடமா இங்கிருந்து நகர மாட்டேன்னு சொல்லிட்டாரே... இப்போ நம்ப மேலே பழி வரும்படியா ஆயிடுச்சு பாருங்க,'' என, தர்மராஜன் எதிரிலேயே, மருமகள் நித்யா அவரை பற்றி, அவருடைய மகன் பாஸ்கரிடம் புகார் கூறினாள்.
மாவு கட்டுப் போட்டிருந்த வலது காலின் வேதனையோடு எழுந்து உட்கார முயற்சித்த தர்மராஜன், ஓரிரு இருமலுக்கு பின், மெதுவாக பேசலானார்...
''என்னை மன்னிச்சுடும்மா... என் மேலே தான் தப்பு; இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன்,'' என்றார்.
''சரிதான்... இத்தனை நாள் நல்லா வாட்ட சாட்டமா திரிஞ்சீங்க... இப்ப கால் முறிஞ்சி படுத்துட்டீங்க. இனிமே, உங்கள விட்டு நாங்க எங்கேயும் போக முடியாது. இந்த, 'டிரிப்' அத்தனை வசதியோட, நார்த்திலே எல்லா முக்கிய இடத்தையும் பாத்துட்டு, கடைசியா சிம்லா போயிட்டு, திரும்பி விமானத்துல வர்ற மாதிரி இருந்தது. அத்தனையும் உங்களால பாழாப் போச்சு.
''ஆந்திரா எல்லையக் கூட தாண்டல, அதுக்குள்ள திரும்பி வர்ற மாதிரி ஆயிடுச்சு; அத்தனையும் வேஸ்ட். நாங்க வருந்தி வருந்தி கூப்பிட்டோமே எங்க கூடவே வந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா... எல்லாரும் டூரை முழுசா அனுபவிச்சிட்டு திரும்பி இருப்போம். இனிமே இப்படி ஒரு சந்தர்ப்பம் எங்கே வரப்போகுது... உங்களுக்கு காவல் கிடக்க வேண்டியது தான் எங்க தலையெழுத்து,'' என, சுடு சொற்களை நித்யா அள்ளி வீச, பதில் பேசாமல் இருந்தான் மகன் பாஸ்கர்.
பாஸ்கருக்கும் அதே மனநிலை தான் இருக்குமென்று தர்மராஜனுக்கு புரிந்தது.
தர்மராஜன் தனியார் கம்பெனியில் உத்யோகம் பார்த்து ஓய்வு பெற்றவர். அவருடைய, 'செட்டில்மென்ட்' பணத்தோடு, தன் சேமிப்பையெல்லாம் சேர்த்து மகனுக்கு பிளாட் வாங்கியது தான், அவர் பேர் சொல்லும் சொத்து. மனைவி போய்ச் சேர்ந்ததும், பாஸ்கருக்கு கல்யாணம் செய்து வைத்தார். சாப்ட்வேர் நிறுவனத்தில் தன்னுடன் வேலை செய்த நித்யாவையே திருமணம் செய்து கொள்வதாக கூறிய போது தடை கூறவில்லை தர்மராஜன்.
நித்யாவும் நல்ல பெண் தான்; இருவரும் வேலை பார்ப்பதால், வாரக்கடைசி லீவு நாட்களில் எங்காவது வெளியே போவதை கட்டாயமாக வைத்திருந்தனர். உள்ளூரில், மால் போன்ற இடங்களில் சுற்றியவர்கள், சனி, ஞாயிறு ஒட்டிய விடுமுறை நாட்களாக இருந்தால், வெளியூருக்கு செல்ல ஆரம்பித்தனர்.
'அப்பா... நீங்க ரொம்ப நாளா அம்மாவோட சேர்ந்து திருச்செந்தூர் போகணும்ன்னு சொல்லிட்டிருந்தீங்களே... அடுத்த வாரம் நாம எல்லாரும் அங்க போறோம்; அப்படியே குற்றாலமும் போயிட்டு வரலாம்...' என்று பாஸ்கர் தன் முதல் வெளியூர் பயணத்தை பற்றி தந்தையிடம் கூறி, அவர் ஆவலாய் அதற்கு இசைவார் என்று எதிர்பார்த்தான்.
ஆனால், தர்மராஜனோ, 'நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கப்பா. எனக்கு திருச்செந்தூர் போயி தான் முருகனை தரிசிக்கணும்ன்னு இல்ல... இங்கேயே பக்கத்து தெரு கோவில்ல தினமும் பாலமுருகனை பாக்குறேனே... உன் அம்மா தான் இதுக்கெல்லாம் ஆசைப்படுவா; அவ தான் போய் சேர்ந்துட்டாளே... நான் வரல...' என்றார்.
'ஏம்ப்பா... நீங்களும் வாங்களேன்; வாரா வாரம், உங்கள விட்டுட்டு நாங்க ரெண்டு பேரும் தானே உள்ளூர் சுற்றுலா பகுதிகளுக்கு போயிட்டு வர்றோம். அதனாலே, நான் தான் இவர் கிட்ட சொல்லி, 'மாமாவையும் கூப்பிடுங்க; திருச்செந்தூர்ன்னா வருவார்'ன்னு சொன்னேன். இப்ப வரமாட்டேன்னு சொல்றீங்களே... நாங்க போயிட்டு வர நாலைஞ்சு நாளாகும். நீங்க எப்படி தனியா இருப்பீங்க....' என்றாள் வாஞ்சையோடு நித்யா.
ஆனால், தீர்மானமாக வர மறுத்து விட்டார் தர்மராஜன். இருந்தாலும், அவர்களுடைய பயண விவரங்களை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
திரும்பி வந்தவர்கள் உடனே ஆபிசுக்கு பறந்தனர். அன்று இரவு, மகன் பாஸ்கர் சாப்பிடும் போது, பயணத்திற்கான செலவுகளை தர்மராஜன் கேட்க ஆரம்பித்த போது, முகம் சுளித்தாள் நித்யா.
'நெல்லை எக்ஸ்பிரஸ்லே 'ஏசி' டூ டயலர்லே தானே போனே, என்ன சார்ஜ்?' என்று கேட்டார்.
சொன்னான் பாஸ்கர்.
'லாட்ஜ் போட்ருப்பே, 'ஏசி' டபுள் பெட்ரூம் நாலு நாளைக்கு, 4,000 ரூபாய்க்கும் மேலே ஆயிருக்குமே...' என்றார்.
'எதுக்குப்பா இந்த வேண்டாத கேள்வியெல்லாம்...' என்று அலுத்துக் கொண்டான் பாஸ்கர்.
'ஒண்ணுமில்ல... நீ என்னையும் அழைச்சுட்டு போயிருந்தா எனக்குன்னு சாப்பாடு செலவோட 3,000 ரூபாய் அதிகம் ஆயிருக்குமில்ல...' என்றார்.
'சரிப்பா... அதுக்கென்ன இப்போ...' என்றான் பாஸ்கர்.
'அந்த பணத்தை என்கிட்ட கொடுத்துடுப்பா; நான் செலவுக்கு வச்சுக்குறேன்...' என்றார் தர்மராஜன்.
'என்னப்பா இது அசிங்கமா... உங்களுக்கு செலவுக்கு வேணும்ன்னா கேட்டா நான் தர மாட்டேனா... இப்படியா கேட்கறது...' என்று லேசாக கோபப்பட்டான் பாஸ்கர்.
'சரி... அப்பா ஏதோ கேட்கிறார்; கொடுத்துடுங்களேன்...' என்று நித்யா தான் குறுக்கிட்டு, அவருக்கு சிபாரிசு செய்தாள்.
ஆனால், அடுத்து சுற்றுலா என்றாலும், உறவினர் வீட்டு விசேஷம் என்றாலும் இவரை அவர்கள் கூப்பிடும் போதெல்லாம், அதை தவிர்த்தார்.
'சிவசங்கரன் கோவிச்சுக்க மாட்டான்; அப்பாவுக்கு மூட்டு வலின்னு சொல்லிடு...' என, பெங்களூரில் தன் சகோதரனின் மகன் கல்யாணத்திற்கே போகாமல் இப்படி போக, வர ஆகும் செலவு, தங்கும் செலவு இத்யாதிகளை உத்தேசமாக கணக்கிட்டு வாங்க பழகியிருந்தார்.
கோடை விடுமுறையில், குழந்தைகளுடன் வடமாநில டூரை ஏற்பாடு செய்திருந்தான் பாஸ்கர். அப்பாவை அழைத்து செல்லலாம் என்று, அதன்படி பயணத்தை திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தான். மேலும், தர்மராஜனின் உடல்நிலையும், அவர் வயது காரணமாகவும் தனியாக விட்டு விட்டு போக மனம் இல்லாமல், தன்னுடன் அழைத்துச் செல்ல தீர்மானித்திருந்தான்.
'காசி, திவசம் இதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லடா. நீ வேணும்ன்னா காசியிலே அம்மாவுக்கு செய்றதை செய்துட்டு வா; அப்புறம் நீ எங்கேயோ சுத்தப் போற... நான் வந்தா உனக்கு தான் தொந்தரவு...' என்றார் தர்மராஜன்.
நித்யா, கணவனின் காதில், 'இது எதிர்பாத்தது தானே... கிடக்கிறாரு விடுங்க. அவர் வருவாருன்னு காசி, கயான்னு வேற சுத்தணும்ன்னு சொன்னீங்க. இப்போ காசிக்கு போறதை விட்டுட்டு நாம சிம்லா அது, இதுன்னு சுத்திட்டு வரலாம்...' என்று கிசுகிசுத்தாள்.
பாஸ்கருக்கும் அது உடன்பாடாய் இருந்தது.
'உங்க அப்பாகிட்ட விமானத்துல போறதா சொல்லி தொலைக்காதீங்க; அந்த காசை பிடுங்கிடுவார். செகண்ட் கிளாஸ் டிரெயின் தான் கிடைச்சதுன்னு சொல்லுங்க. அந்த கணக்கே ஐயாயிரமாயிடும்...' என்று எச்சரிக்க கற்றிருந்தாள் நித்யா.
தாங்கள் இதுவரை போன டூர்களுக்கெல்லாம், கிழவர் தன் பங்காக வசூலித்ததே பல ஆயிரங்கள் இருக்கும் என்று அவள் கணக்கு போட்டு வைத்திருந்தாள்.
'எல்லா செலவுக்கும் நீங்க தான் காசு கொடுக்கறீங்க; இப்படி வாங்கற பணத்தை உங்க அப்பா என்ன தான் செய்றாரோ...' என்ற கேள்வியுடன் நித்யா அதை பெரிதுபடுத்தாமல் நிறுத்திக் கொண்டாள்.
எப்போதும் போல் பக்கத்து வீட்டுக்காரரான மூர்த்தி மாமாவிடம், தர்மராஜனை பார்த்துக் கொள்ள சொல்லி, குழந்தைகளுடன் கிளம்பிச் சென்றனர் பாஸ்கர் - நித்யா தம்பதி.
அடுத்தநாள், ஐதராபாத்தில் தங்கியிருந்த போது பக்கத்து வீட்டு மாமாவிடமிருந்து மொபைலில் அவசர தகவல் வந்தது.
'பாஸ்கர் சார்... வெரி சாரி; உங்க அப்பா கூரியர் ஆபிஸ்ல படியேறும் போது கால் தடுக்கி மயங்கி விழுந்திருக்காரு... யாரோ ரெண்டு பேர் அவர் கொண்டு போன கவர்லே இருந்த முகவரியை பாத்துட்டு, வீட்டுக்கு ஆட்டோவிலே கொண்டு வந்தாங்க. நான் யதேச்சையா வெளியே வர, உடனே, அந்த ஆட்டோவிலேயே ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போனோம். மயக்கம் தெளிஞ்சுடுச்சு; ஆனா, கால் வலி தாங்காம துடிச்சு போயிட்டார். டாக்டர் பாத்துட்டு எலும்பு முறிவுன்னு, 'ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கார்...' என்று படபடத்தார் மூர்த்தி.
பாஸ்கருக்கு டூரை அதோடு முடித்து திரும்ப வேண்டியதாயிற்று. உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. கால்முறிவு தான் என்று தெரிந்ததில், அவனுக்கு நிம்மதி உண்டாயிருந்தது. அதேசமயத்தில் நித்யாவிற்கும், குழந்தைகளுக்கும் பயணம் பாதியில் நின்றதில், பெரிதும் ஏமாற்றம்.
இப்படி திரும்பும்படியாகிவிட்டதே என்ற ஏக்கத்தில், நித்யா தாறுமாறாக பேசி, தன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தாள். அத்துடன், எங்கும் நகர முடியாமல் இவருக்கு காவலாக இருக்க வேண்டியதாகி விடுமோ என்ற நினைப்பும் அதற்கு காரணமாயிருந்தது.
இதையெல்லாம் நன்கு உணர்ந்திருந்ததால், மருமகள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொண்டவராக, அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தார் தர்மராஜன்.
மருத்துவமனையில் நான்கு நாட்கள் கழிந்தன; கட்டை அவிழ்க்க, 15 நாட்களாகும் என்ற நிலையில், தர்மராஜனை டிஸ்சார்ஜ் செய்வதாக கூறினார் டாக்டர்.
மருத்துவமனை செலவுடன் டாக்டர் பில் வந்தபோது அதைப் பார்த்த நித்யாவின் கோபம், திரும்பவும் சுடர்விட ஆரம்பித்தது.
''இத்தனை பெரிய செலவை உங்க அப்பா இப்போ இழுத்து விட்டிருக்காரு; எத்தனை சொல்லியும் நம்ப கூட வராம, இப்படி பண விரயத்தோட, பிரச்னையையும் கொண்டு விட்டிருக்காரு. அவர் நாம எங்க போனாலும் அதுக்கு என்ன செலவுன்னு தன் பங்கை கணக்கு பார்த்து வாங்கி வச்சிருக்காரு இல்ல... அதுல இருந்து எடுத்து தான் இந்த பீசை கட்டணும்; ஆமா சொல்லிட்டேன்,'' என்று நித்யா, பாஸ்கரிடம் கண்டித்து கொண்டிருந்தது தர்மராஜன் காதில் விழுந்தது.
அப்போது தான், அவருக்கு நினைவிற்கு வந்தது. வங்கியில் பாஸ்புக்கில் என்ட்ரி வாங்கிக் கொண்டு, செக்புக்கும், பாஸ்புக்கும் வைத்திருந்த கைப்பையுடன் கூரியர் ஆபிசுக்கு போனது ஞாபகம் வந்தது.
கூரியர் ஆபிஸ் மாடிப்படியில் ஏறும் போது தான் மயங்கி விழுந்திருந்தார். தன் பையிலிருந்த தகவலை பார்த்து, யாரோ ஆட்டோவில் வீட்டில் கொண்டு வந்து விட்டிருப்பதாக தெரிந்தது. ஆனால், கொண்டு போன பாஸ்புக், செக்புக் அடங்கிய கைப்பையை பற்றி இதுவரை மறந்திருந்தார்.
உடனே, கொஞ்சம் படபடப்போடு பயந்து போனவராய், பாஸ்கரை கூப்பிட்டு, கைப்பையை பற்றி கேட்டார்.
''ஆட்டோல உங்கள கொண்டு வந்து விட்டவங்க அந்த பையை மூர்த்தி மாமாகிட்ட கொடுத்துட்டு போயிருக்காங்க; அதை வாங்கி வச்சிருக்கேன்,'' என்று சொன்னதும் நிம்மதியாயிற்று.
''பாஸ்கர்... அதை எடுத்துட்டு வா, டாக்டர் பீசுக்கு செக் எழுதித் தர்றேன்,'' என்றார்.
பாஸ்கர், தன் மனைவியை சமாதானம் செய்ய, அப்பாவின் பணத்தையே எடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தான்.
மனைவி நித்யாவை அழைத்து, வீட்டிற்கு சென்று அந்த பையை எடுத்து வரச் சொன்னான்.
அவளும் வீட்டிற்கு சென்று பையை எடுத்து, ஏதோ ஒரு ஆவலோடு மாமனாரின் பாஸ்புக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்த்தாள். அப்போதிருந்த தொகை, மருத்துவமனை பீசுக்கு போதுமானதாக இருந்தது.
கால்முறிவு ஏற்பட்ட அன்றைய தினத்திற்கு முந்தைய வரவுகள் யாவும், இவர்கள் சென்ற பயணங்களுக்கு அவர் வாங்கிக் கொண்ட தொகைகளாக இருந்தன. ஆனால், அவையாவும் அடிக்கடி வெவ்வேறு தொகைகளாக செக் மூலம் யார் யாருக்கோ அளிக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. விக்டர், ஜெகநாதன், கபீர், தீனதயாளன் என்ற ஊர் பேர் தெரியாத பெயர்களுக்கு அவ்வப்போது, 200, 500 ரூபாய் என்ற தொகைகள் அனுப்பப்பட்டிருந்தன. வேறு எந்த தன் சொந்த செலவிற்கும் பணம் எடுக்கப்பட்டதாய் தெரியவில்லை.
நித்யாவிற்கு குழப்பமாக இருந்தது. மாமனாரின் பையை திரும்பவும் துழாவி பார்த்ததில், அவர் கூரியர் அனுப்ப எடுத்துச் சென்ற கவர் ஒன்று இருந்தது. மாமனாருக்கு, ஜோக், கவிதைகள் என்று வார இதழ்களுக்கு அனுப்பும் வழக்கமுண்டு. அதற்காக, கூரியர் ஆபிசுக்கு போய் வருகிறார் என்று நினைப்பாள் நித்யா.
ஆனால், அக்கவர் மீது, கோமதி அம்மாள் என்ற பெயரில், கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையின் விலாச மிடப்பட்டிருந்தது. ஆவல் மிகுந்தவளாய் அக்கவரை பிரித்தாள். அதில், 250 ரூபாய் காசோலையுடன் மாமனாரின் கடிதமும் இருந்தது.
அன்புடையீர்,
தங்களின் கோரிக்கையை பத்திரிகை விளம்பரத்தில் கண்டேன். இத்துடன், ஒரு சிறு தொகையை தங்கள் சிறுநீரக மருத்துவ செலவிற்கு வைத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.
அன்புடன்
தர்மராஜன்.
- என்று எழுதியிருந்தது.
இவை அனைத்தையும் தொடர்பு செய்து பார்த்ததில், மாமனாரின் தர்மசிந்தனையை உணர்ந்தாள் நித்யா. நாளிதழ்களில் இப்படி உயிருக்கு போராடுவோர் விடுக்கும் கோரிக்கைகளுக்கு உதவுவதற்கே உல்லாச பயணங்களை தவிர்த்து, அதற்கான செலவு தொகையை மாமனார் பயன்படுத்தியுள்ளார் என்று நினைத்த போது, நித்யாவின் கண்கள் பனித்தன. மானசீகமாக மாமனாரிடம் மன்னிப்பு கேட்டு, அவருடைய செக்புக்கை அங்கேயே வைத்து விட்டு, பாஸ்கரின் கிரெடிட் கார்டிலேயே பணம் கட்டிவிடும் தீர்மானத்துடன் மருத்துவமனையை நோக்கி சென்றாள் நித்யா.
அகிலா கார்த்திகேயன்

