PUBLISHED ON : செப் 20, 2015

காலையிலேயே கைபேசி ஒலிக்க, அதில் தேவி என, பெயர் ஒளிர்ந்ததைப் பார்த்தும், சட்டென பூரித்தேன்.
''நான் உங்க ஊருக்கு வர்றேன் சூர்யா,'' என, இன்ப அதிர்ச்சியை ஊட்டினாள் தேவி.
''ஏய் நிஜமாவா... எப்போ?''
''அடுத்த மாசம், 20ம் தேதி, விருதுநகர்ல இருக்கிற எங்க மாமா வீட்டுக்கு வர்றேன்; நாலுநாட்கள் அங்க இருப்பேன். விருதுநகர் பக்கம் தானே உங்க ஊரு?''
என் மனதுக்குள் மத்தாப்பூ. 'தேவியைப் பார்த்து எத்தனை காலமாயிற்று!'
அவள், என் கல்லூரித்தோழி.
கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் கடந்த பின்தான், அவள் எங்கள் வகுப்பிற்கு வந்தாள். அவள் வந்து சேர்ந்த போது, அவள் மீது எனக்கு பெரிதாக எந்த வித ஈர்ப்பும் ஏற்படவில்லை.
சக மாணவியரோடு நான் கொண்டிருந்த, 'ஹாய்...ஹலோ...' தோழமை தான் அவளோடும் இருந்தது.
தேவியின் முகம், என் மனதில் பதியும் முன்னரே, எங்கள் வகுப்பிலிருந்து அவள், வேறு பிரிவுக்கு மாறிப் போனாள். என், 'புராஜெக்ட்' தொடர்பான புத்தகம் ஒன்று தேவைப்பட்ட போது, நான், தேவியைக் கேட்க நேர்ந்தது.
'என் பிரண்ட்கிட்ட அந்தப் புத்தகம் இருக்கு; கேட்டு வாங்கித் தர்றேன். கவலைப் படாதே, 90 சதவீதம் கிடைச்சிடும்...' என்றாள்.
'அதென்ன... 90 சதவீதம் கணக்கு...' என்றேன்.
'இந்த உலகத்துல எதுவுமே உறுதியோ, நிரந்தரமோ இல்லயே... என் முயற்சி, 100 சதவீதம் இருந்தால், எதிர்மறை முடிவுக்கும், 10 சதவீதம் வாய்ப்பு இருக்குமே...' என்று கூறி, புன்னகைத்தாள்.
சொன்னது போலவே, அப்புத்தகத்தை வாங்கித் தந்தாள்.
'இது ரொம்ப அரிதான புத்தகம்; கிடைக்குமோ, கிடைக்காதோன்னு நினைச்சேன்...' என்றேன்.
'தேவியை நம்பினோர் கைவிடப்படார்...' என்று கூறி, புன்னகைத்தாள்.
வாய் விட்டு பெரிதாக சிரிக்கும் வழக்கம், அவளுக்கு இல்லை. ஆனால், உதட்டுக்குள் சிரிப்பை ஒளித்து வைத்து, பட்டும் படாமலுமாய் ஒரு புன்னகையை அவள் கசிய விடுவது அத்தனை அழகாய் இருக்கும்.
எனக்குப் பிடித்த குணங்கள் பலவும், தேவியிடம் உண்டு.
யதார்த்தம் புரிந்தவள், அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதவள், கடிந்து பேசாதவள், தெளிவாய் முடிவெடுப்பவள், எல்லாருக்கும் உதவ நினைப்பவள், நட்புக்கு அதிகமாய் மதிப்பளிப்பவள், மனித மனங்களின் உணர்வுகளை புரிந்தவள் என, அடுக்கிக் கொண்டே போகலாம்.
கல்லூரி காலத்தில், எனக்கு நல்ல தோழியாக இருந்தாள். அவளோடு பழகப்பழக, அவளது நல்ல குணங்களால், என் மனதை நெருங்கியிருந்தாள்.
படிப்பு முடிந்து ஊர் திரும்பிய பின், என்னால் அவளை சந்திக்க இயலவில்லை; ஆனாலும், கைபேசி உதவியுடன், எங்கள் நட்பு வளர்ந்தது.
எங்கே ஆரம்பித்து, எப்படி ஆழமாகிப் போனது என புரிந்து கொள்ள முடியாத, ஒரு அழுத்தமான நட்பில் நாங்கள் வீழ்ந்தோம்.
தினமும் குறுஞ்செய்திகள், காலையும், மாலையும் கைபேசி உரையாடல்கள் என, எங்கள் நட்பு இறுகியது. அவளோடு பேசாத நாளே இல்லை என்றானது. அவள் வேற்று மனுஷி அல்ல என்ற உணர்வு, என் ஆழ்மனதில் பதிவானது.
'நமக்குள் ஆண், பெண் வித்தியாசம் இருக்கிறது தான் பிரச்னையே... ஏதாவது ஒரு இடத்தில் கட்டுப்பாடு தலைதூக்கும்...' என்பாள் தேவி.
நட்பின் நெருக்கம் காரணமாக, அவளிடம் எதையும் உரிமையாய் கேட்கலாம், பேசலாம் என்ற உணர்வு எனக்குள் தோன்றினாலும், நண்பர்களோடு பேசிய பாலியல் விஷயங்கள், ரசித்துச் சிரித்த, 'ஏ ஜோக்' என சிலவற்றை அவளோடு பகிர்ந்து கொள்ள நினைத்த போது, உள்மனதிலிருந்து ஒரு தயக்கம், எப்போதுமே என்னை கட்டிப் போட்டுவிடும்.
ஒருமுறை அவளிடம், 'தேவி... உன்கிட்ட எதைப்பற்றி வேணுமானாலும் பேசலாமா?' என்று கேட்டேன்.
'பேசலாமே... ஏன் திடீர்ன்னு இந்த கேள்வி?'
'இல்ல... பேசற விஷயத்துல எதாவது கட்டுப்பாடு வச்சிருக்கிறியோன்னு...'
'அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ, என் நண்பன்டா; எதைப் பற்றி வேணும்ன்னாலும் பேசலாம்...' என்றாள் தேவி.
'செக்ஸ் பற்றி?'
'பேசக்கூடிய அளவு பேசலாம்...'
'ஏ ஜோக்ஸ்?'
'சொல்லேன்... அதில் என்ன பிரச்னை; நமக்கு மனசுல, 'மெச்சூரிட்டி' இருக்கே; கேட்போம், ரசிப்போம்...'
அவள் சாதாரணமாக சொன்னாலும், பாழாய்ப் போன தயக்கம், என் மனசுக்குள்ளேயே இருந்தது. எதாவது சொல்லப் போய், தப்பாய் நினைத்து, பேசுவதையே நிறுத்தி விடுவாளோ என்ற பயம்.
மாலையில் மீண்டும் பேசினாள் தேவி.
''சூர்யா... நான் விருதுநகர் வரும் போது, ஒருநாள் நாம சந்திக்கலாமா?'' என்று கேட்டாள்.
சந்தோஷத்தில் என் மனம் இறக்கை கட்டி பறந்தது.
''நானே கேட்கலாம் என்றிருந்தேன்,'' என்றேன்.
''கேட்டிருக்க வேண்டியது தானே...''
''தயக்கமா இருந்தது...''
''நட்பில் தயக்கமே கூடாது சூர்யா; நண்பர்கள் சந்திப்பில் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறெதிலும் கிடைக்காது. நம் வாழ்க்கை ரொம்பச் சின்னது. அதை மகிழ்ச்சியாய் கழிக்க கடவுள் நமக்கு தந்திருக்கும் சந்தர்ப்பங்களை, தயக்கத்தின் காரணமாக தவற விட்டுடக்கூடாது,'' என்ற தேவி, ''ஒருநாள் உன்கூட இருக்கப் போறேன்; புரோகிராம் என்னன்னு திட்டமிட்டு வை. சரியா...'' என்று முடித்தாள்.
உலகில் உள்ள அத்தனை சந்தோஷமும், என் மனதில் ஒரே புள்ளியாய் குவிந்தது.
நண்பன் ஒருவனிடம் இரவலாக கார் வாங்கி, டீசல் நிரப்பி, விருதுநகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். சொன்ன நேரத்தில் வந்தாள் தேவி.
நாவல் பழ நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். அந்த நிறம் அவளுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. தேவதை போல சிரித்தாள்.
''சூர்யா...''
''தேவீ...''
குசல விசாரிப்புகள் முடிந்த போது, அவள் தலையை கவனித்தேன்; பூ இல்லை. 'வாங்கிக் கொடுக்கலாமா... பூ வாங்கிக் கொடுத்தால் எதாவது சொல்லி விடுவாளோ...' என மனதில் நினைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
''என்ன... என் தலையையே உத்துப் பாக்கிற...''
''இல்ல... பூ வைக்கலயா?''
''வந்த அவசரத்துல வாங்கி வைக்க மறந்துட்டேன். ஏன், நீ வாங்கி தரப் போறியா?''
''ம்...'' என்றேன் மலர்ச்சியாய்!
காரை நகர்த்தி பூக்காரியிடம் நிறுத்தினேன்.
''எனக்கு நிறைய பூ வச்சுக்க பிடிக்காது; கொஞ்சமாய் வாங்கு. ஒரு முழம் போதும்,'' என்றாள்.
அவளுக்கு பூ வாங்கிக் கொடுத்தது எனக்கு பெருமையாய் இருந்தது.
''எங்கே போகிறோம்?'' என்று கேட்டாள்.
''மதுரை வரை ஒரு, 'ட்ரிப்' போயிட்டு வரலாமா... கார்ல பேசிகிட்டே போய் வரலாம்,'' என்றேன்.
''ஓகே... ஆனா, 6:00 மணிக்கெல்லாம் திரும்பிடணும்,'' என்றவள், கார் நகர்ந்ததும், ''சாப்பிட்டாயா சூர்யா?'' என்று கேட்டாள்.
''இல்ல... நீ?''
''புறப்படவே லேட் ஆயிடுச்சு. சாப்பிட்டால் இன்னும் லேட் ஆயிடுமேன்னு, இட்லியை ஒரு டப்பாவில போட்டு எடுத்திட்டு வந்திட்டேன். அதுலயே சாம்பாரை ஊற்றி கொண்டு வந்திருக்கேன். அவுட்டர்ல ஒரு ஓரமா காரை நிறுத்து; ஷேர் செய்து சாப்பிடலாம்,'' என்றாள்.
நான், வண்டியை ஓரமாக நிறுத்தியதும், தேவி, ஸ்பூனால் இட்லியை துண்டு துண்டாய் வெட்டி எடுத்துத்தர, ஆளுக்கொரு விள்ளலாய் பகிர்ந்து சாப்பிட்டோம்; மனசெல்லாம் சந்தோஷம்.
''உன் கூட இப்படி ஒரு ஜாலி, 'ட்ரிப்' வருவேன்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு,'' முகம் மலர்ந்து சொன்னேன்.
''கிளம்பலாமா... இப்பவே மணி, 11:00 ஆச்சு,'' என்றாள்.
கார் புறப்பட்டதும், ''மதுரையில எங்கே போகலாம்?'' என்று கேட்டாள்.
'சினிமாவுக்கு போகலாமா...' என கேட்க நினைத்தேன். ஆனால், என்னுள் மீண்டும் தயக்கம்.
''காந்தி மியூசியம் அல்லது ஏதாவது பார்க் போய் உட்கார்ந்து பேசலாமா?'' சமாளிப்பாய் கேட்டேன்.
''எவ்வளவு நேரம் தான் பார்க்கில் உட்கார்ந்து பேசுவோம். வெயில் வேற... ஏதாவது படத்துக்கு போகலாம். நல்ல, 'ஏசி' தியேட்டரா பாரு... உன்கூட படம் பார்த்த மாதிரியும் இருக்கும்; வெயில் இல்லாம மூணு மணி நேரம் கடந்த மாதிரியும் இருக்கும்,''என்றாள்.
நான் மகிழ்ச்சியில் மிதந்தேன்.
மதுரை செல்லும் வழியெல்லாம், பாட்டு கேட்டபடி பயணித்தோம்; கல்லூரிக் காலத்து நட்பை அசை போட்டோம்.
'ஏசி' தியேட்டரில், தனி ஒருவன் திரைப்படம் பார்த்தோம்.
தேவியின் அருகில் அமர்ந்து சினிமா பார்ப்பதே, ஒரு இனிய அனுபவமாக இருந்தது; ஆனாலும், அவள் கைமேல் என் கை பட்டு விடுமோ, தோள் உரசி விடுமோ என அவஸ்தையாக இருந்தது. தற்செயலாய் நிகழ்ந்தாலும், ஏதாவது தப்பாய் நினைத்து விடுவாளோ!
தயக்கங்கள் அணிவகுக்க, அடங்கி, ஒடுங்கி அமர்ந்திருந்தேன்.
அவள் அமைதியாக படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
''என்ன தேவி... பேசமாட்டேங்கிறே...'' என்றேன்.
''நம்மைச் சுற்றி எத்தனை பேர் உட்கார்ந்து படம் பாத்துக்கிட்டிருக்காங்க... நாம் பேசிகிட்டிருந்தா அவங்களுக்கு தொந்தரவா இருக்காதா...'' என்றாள்.
அவள் கருத்தில் நியாயம் இருந்ததால், அமைதியானேன்.
சினிமா முடிந்ததும், விருதுநகர் கிளம்பினோம்.
''காபி சாப்பிடணும் போல இருக்கு சூர்யா...''
''வழியில ஒரு மோட்டல் இருக்கு; சாப்பிடலாம்...''
பைபாஸ் சாலையின் ஓரத்தில் இருந்த மோட்டலில் காரை நிறுத்தினேன்.
காபி சாப்பிட அமர்ந்தோம்; அவளே ஆர்டர் செய்தாள்.
மோட்டலுக்கு வெளியில், பைபாஸ் சாலை தெரிந்தது. அந்த இருவழிச் சாலையின் நடுவில், அடர்த்தியாய் இருந்த அரளிச் செடியில், 'பிங்க்' வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
தேவியின் கரம்பற்றி, அந்த அரளிச் செடிகளின் நடுவே, சிறிது தூரம் காலாற நடக்க வேண்டும் போல ஆசையாய் இருந்தது.
'கேட்கலாமா... மறுத்து விடுவாளோ... தப்பாய் நினைப்பாளோ...' மீண்டும் தயக்கம் எட்டிப் பார்த்தது.
சின்ன மனப் போராட்டத்திற்குப்பின், கேட்டுவிடலாம் என தைரியமாய் முடிவெடுத்து, அவளிடம் கேட்க நிமிர்ந்த போது, காபி பில்லை செட்டில் செய்துவிட்டு, ''போகலாமா...'' என்றபடியே காரை நோக்கி நடந்தாள்.
நான் பின்தொடர, கார் கதவை திறந்து ஏறி அமர்ந்தாள். வேறு வழியின்றி, நானும் காரில் ஏறி, கிளப்பினேன்.
மீண்டும் பழைய நினைவுகளின் அசைபோடல், நட்பின் வலிமை பற்றிய உரையாடல் என, நேரம் போனதே தெரியாமல் விருதுநகர் வந்தடைந்தோம்.
இறங்கும் போது, ''பைபாஸ் சாலையில் அந்த அரளிச் செடிகளும், 'பிங்க்' கலர் பூக்களும் எவ்வளவு அழகாக இருந்தது கவனித்தாயா... பிங்க் பச்சை கலர் காம்பினேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். பூச்செடிகளுக்கு நடுவில் நடப்பது எனக்கு ரொம்ப இஷ்டம்; அதுவும் கையைப் பிடித்துக் கொண்டு...''
அவள் சொல்லச் சொல்ல, என் தயக்கத்தை நினைத்து எனக்கே வெறுப்பாய் இருந்தது.
'ஆண்களான நமக்கு சின்னச்சின்ன சந்தோஷங்களுக்கான ஆசைகள் இருப்பது போல தான் பெண்களுக்கும் இருக்கும். ஆனால், நாம தான் ஆணாதிக்க உணர்வில், அவங்களுக்கு தடைபோட்டு வச்சிருக்கிறதோட, அவங்களை அடக்கியே வச்சிட்டோம். நாமும் மனசுவிட்டு அவங்களோட சின்னச்சின்ன சந்தோஷங்கள் பற்றி கேட்கிறதில்ல. பெரும்பாலும், அவங்களை கேட்க அனுமதிக்கிறதும் இல்ல. பெண்பாவம் பொல்லாததுடா...' என, நண்பன் மாப்பிள்ளைசாமி, எப்போதோ சொன்னது நினைவு வந்தது.
'ஜாலியாய் பேசுவது, 'ஏ ஜோக்' பகிர்ந்து கொள்வது, நேரில் சந்திப்பது, சேர்ந்து பயணிப்பது, ஒன்றாய் சினிமா பார்ப்பது, ஒரே உணவை பகிர்ந்து உண்பது, கரம் பிடித்து ஜாலியாய் நடைபோடுவது என, நான் ஆசைப்பட்ட சின்னச்சின்ன சந்தோஷங்களை, அவளும் தானே ஆசைப்பட்டிருக்கிறாள்...
'நட்பு தந்த நம்பிக்கையில், அவள் கேட்டு விட்டாள். என்னைப் போல அவளும் தயங்கியிருந்தால், இந்த சின்னச்சின்ன சந்தோஷங்கள், இருவரின் மனசையும் நிறைத்திருக்குமா...' என, என் தயக்கத்தை நினைத்து வெட்கினேன்.
'நட்பில் தயக்கம் என்பதே கூடாது சூர்யா...' என்றோ தேவி போனில் கூறியது, என் காதில் மீண்டும் ஒலித்தது.
தயக்கத்தை உதறி, அவள் கரம்பற்றி அரளிச் செடிகளின் நடுவே, ஒரு நடை சந்தோஷமாய் போய் வந்திருக்கலாமோ!
இருவரின் மனசுக்குள்ளும் மகிழ்ச்சி மழையாய் பொழிந்திருக்குமே!
''என்ன சூர்யா யோசனை... மிஸ் யூ பீலிங்கா...'' என்று கேட்டுச் சிரித்த தேவி, என் நினைவுகளை கலைத்தவள், ''இன்னொரு சந்தர்ப்பம் வராமலா போகும்... எனி ஹவ் தேங்க்ஸ் சூர்யா... என் வாழ்வில் மறக்க முடியாத நட்பு நாள் இது; ஓகே. டைம் ஆச்சு, வர்றேன் பை,'' என்றவள், சட்டென முதல்முறையாக, என் கரம் பற்றி, குலுக்கி விடைபெற்றாள்.
அவள் கையின் சூட்டை, வெகுநேரம் என் உள்ளங்கையில் உணர்ந்தேன்.
ஜே.டி.ஆர்.,

