
நான், நானாக...
பிறந்த போது ஓர் முகம்
சிறுவயதில் ஓர் முகம்
வாலிபத்தில் வனப்பு முகம்
நடு வயதில் அகந்தை முகம்
முதுமையில் சோர்ந்த முகம்
எதுதான் என் முகம்...
எல்லாமுமே தான்!
அறியா வயதில் ஆசைப்பட்டது
வாலிபத்தில் மோகம் கொண்டது
நடுப்பிராயத்தில் நினைத்தது
வயோதிகத்தில் வாடியது
எதுதான் என் ஆசை...
எல்லாமுமே தான்!
கேட்டது யாவுமே கிடைத்ததா
நினைத்தது எல்லாம் நடந்ததா
பேச நினைத்ததைப் பேசினோமா
செய்ய நினைத்ததைச் செய்தோமா
சாதிக்க நினைத்ததைச் சாதித்தோமா
எல்லாமே யாருக்காக?
பெற்றோர், உற்றார், உறவு
உலகு, பெயர், புகழுக்காக
மாறி மாறி
வேறு வேறு முகங்கள்
வெவ்வேறு ஆசைகள்!
எல்லா நேரத்திலும்
தூரத்தில் இருந்து ஓர் முகம்
என்னைப் பார்த்துக்கொண்டே இருந்ததே...
அது பேசாமல்
நான் பேசுவதை எல்லாம்
கேட்டுக் கொண்டே அமைதி காத்ததே...
அது யார்... அதுவும் நானா...
நான், நானாக மட்டுமே இருந்தது
எப்போது?
— தேவவிரதன், சென்னை.

