PUBLISHED ON : பிப் 07, 2016

அன்புள்ள அம்மாவிற்கு —
நான், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, 25 வயது இளைஞன்; முதுகலை பட்டப்படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில், விற்பனைத்துறை துணை மேலாளராக பணிபுரிகிறேன். அம்மா, இல்லத்தரசி; அப்பா, அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறார். இரு அக்காக்களுக்கு திருமணமாகி விட்டது. 21 வயதில் ஒரு தங்கை உள்ளாள்.
புத்தகங்கள் படிப்பது, இசை, ஆன்மிகம், உடற்பயிற்சி மற்றும் தியானம் என, அனைத்திலும் ஈடுபாடு கொண்டவன் நான்.
பூர்விக சொத்துகள் அனைத்தையும் இழந்து, தற்போது, குடியிருக்க சொந்த வீடு கூட இல்லை. தடைகள் அனைத்தையும் படிகற்களாக மாற்றி, தற்போது, சராசரி வருமானத்துடன் வாழும் எனக்கு, சொந்தமாக தொழில் துவங்கி, வாழ்வில் உயர்ந்து, என் குடும்பத்தை, சமுதாயத்தில் கவுரமிக்க நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்; மனித இனத்திற்கு, ஆன்மிக உண்மைகளை உணர்த்தி, அமைதியான உலகை உருவாக்க, என்னால் முடிந்த அளவு சேவைகளை செய்ய வேண்டும் என்பது என் லட்சியம்.
இவை அனைத்தையும், நூறு சதவீதம் அடைவேன் என்பதில், எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
ஆனால், என் பிரச்னை என்னவென்றால், சிறு வயது முதலே, எவ்வித தீயப் பழக்கங்களும் இல்லாத எனக்கு, சுய இன்பம் எனும் பழக்கம் மட்டும் எமனாக வந்து ஒட்டிக் கொண்டது.
எட்டு ஆண்டுகளாக, என்னைப் பீடித்துள்ள இப்பழக்கத்தை பலமுறை கைவிட நினைத்தும் முடியவில்லை. சற்று கவரும்படியான தோற்றத்தில் இருக்கும் எனக்கு, பல தோழிகள் உண்டு. அவர்களுடனும், மற்ற பெண் உறவினர்களுடனும் மிகுந்த கண்ணியத்துடனே நடந்து கொள்வேன்.
'பெண் என்பவள் வெறும் சதைப் பிண்டம் அல்ல; அவள், சக மனுஷி; தெய்வத்திற்கு நிகரானவள்; இறைவனின் ஈடு இணையற்ற படைப்பு...' என்பதை, நல்ல தோழிகளிடம் பேசிப் பழகும் போது உணர்கிறேன்.
எனினும், சில நண்பர்களின் வற்புறுத்தலால், தவிர்க்க முடியாமல் பார்க்கும் நீலப்படங்கள், திரைப்படங்கள், சின்னத்திரை மற்றும் பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வரும் பெண்களைப் பார்க்கும் போது, இப்பழக்கத்திலிருந்து மீள முடியாதவனாகி விடுகிறேன்.
ஆனாலும், கடந்த ஒரு ஆண்டாக கடும் முயற்சி எடுத்து, இப்பழக்கத்தை குறைத்து, தற்போது, இரு மாதங்களாக அறவே கைவிட்டு விட்டேன். இருப்பினும், என்னால் அந்த நினைப்பிலிருந்து மீள முடியவில்லை.
சின்னத்திரையில் சில மருத்துவர்கள், வாரம் ஒருமுறை சுயஇன்பம் பெறுவது ஆரோக்கியம் என்றும், இளம் வயதில் இது தேவையென்றும் கூறுகின்றனர். அது உண்மை தானா?
ராமனாகவும், சக இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் பிள்ளையாகவும், சமூகத்திற்கு சிறந்த சேவகனாகவும் வாழ நினைக்கும் எனக்கு, இறைவன் தரும் கடும் சோதனையாகவே இப்பழக்கத்தை கருதுகிறேன். இதனால், வார்த்தைகளால் கூற முடியாத மிகுந்த மன வலி ஏற்படுகிறது. இதிலிருந்து கண்டிப்பாக மீள்வேன்; அதற்காக, என் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, குறிக்கோளை அடைய வெறியுடன் செயலாற்றி வருகிறேன்.
இருப்பினும், தூயவனாக மாற, தாங்கள் கூறும் ஆலோசனைகள் என்னை மேலும் வலிமையுடன், லட்சியத்தை நோக்கி பயணிக்கச் செய்யும்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்.
அன்புள்ள மகனுக்கு —
உன் குடும்ப பாசமும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையும், சமூதாய அக்கறையும் கண்டு சிலாகிக்கிறேன்.
மகனே... பருவ வயது ஆண்களும், பெண்களும், 'ஹார்மோன்' அட்டகாசத்தால் உணர்வுகளை ஆரோக்கியமாய், சமூக நியதிகளை மீறாமல், கட்டுப்படுத்த தெரியாமல் தத்தளிக்கின்றனர். ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. திருமணமாகி, தாம்பத்யம் அனுபவிக்கும் ஆண்களும் கூட, சுயபழக்கத்தில் ஈடுபடுகின்றனர். அணைக்கட்டு நிரம்பும் போது, மதகுகளை திறந்து விடுவது தவறல்ல; அணைக்கட்டு வறண்டு கிடக்கும் போது, மதகுகளை திறந்து விடுவது அபத்தம்.
எதுவும் அளவோடு இருந்தால் நல்லது. சுயப்பழக்கம், வாரத்திற்கு ஒரு முறை இருக்கலாம். இப்பழக்கத்தால் ஆண்மை குறைவு ஏற்படாது; உடல்வலு குறையாது; உடல் முதிர்ச்சி அடையாது. இப்பழக்கம் உனக்கு இருக்கிறது என்பதற்காக, வீணாக குற்ற உணர்ச்சி கொள்ளாதே! இது ஒன்றும் குற்ற செயல் இல்லை; இது ஒரு உயிரியல் தேவை.
பெரும்பாலும், சுயபழக்கம் திருமணமானவுடன் நின்று விடும். 30 வயதில் திருமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும், இளமையின் வீரியம், 25சதவீதம் குறைந்து, சுயபழக்க நாட்டம் போய்விடும். எல்லாம் சிறிது காலம் தான்.
வாழ்க்கையை இயல்பாக, யதார்த்தமாக எதிர்கொள். ராமனாக, அனுமனாக வாழ வேண்டும் என்கிற அதீத கற்பனை உலகில் மிதக்காதே! அவதாரப் புருஷனாவது அப்பறம்... முதலில் நல்ல மனிதனாக வாழ முயற்சிப்போம்.
உன் லட்சியங்களை, நீ அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
