PUBLISHED ON : பிப் 07, 2016

அ நிறம் | அளவு
ஒளியைத் தேடி!
கருவறையின் இருளிலிருந்து
நான் வெளியே வந்தது
உலகின் வெளிச்சத்தைக் காண...
ஆனால்
பெண் சிசு என்றதும்
பெற்றோர், உற்றோர்
முகமெல்லாம் இருண்டதேன்...
என் கண்கள் மட்டும்
கறுப்பில்லை உடலின்
நிறமும் கூடக்
கொஞ்சம் இருட்டு தான்!
வளர்ந்து ஆளாகி
பெண்மை கண் விழித்த போது
பெற்றோர் முகம்
ஒப்புக்குத் தான் மலர்ந்ததோ...
அன்பிலார்க்கு இவ்வுலகம்
இல்லை என்றார்
வள்ளுவர்!
அழகில்லாதவர்க்கு
எதுவுமில்லை
நல்லூழ் எனும்
ஒளி தொடாவிடில்!
பெண், தெய்வமாம்
ஆனால், காலில்
போட்டுத் தேய்ப்பதும்
மிதிப்பதும் ஏன்...
சொற்களின் விரயம்
பகட்டுக்காக
செயல்களின் திறம்
மன இருளை மறைக்க!
கண் கூசும் பொய்களின்
வெளிச்சத்தை விட
கருவறை இருளே
மேலானதோ!
— தேவவிரதன், சென்னை.
