PUBLISHED ON : பிப் 07, 2016

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
காலை, 9:00 மணிக்கு புரொடக் ஷன் மேனேஜர், கணேசனின் போனை எதிர்பார்த்து காத்திருப்பார் தேவர். அதில் ஏதாவது குளறுபடி என்றால், அடுத்து நடப்பது, அவரின் ருத்ர தாண்டவம் தான்!
காலையில் மட்டுமல்ல, மதிய உணவு இடைவேளைக்குப் பின், முதல் ஷாட், 2:00 மணிக்கு எடுத்து முடிக்கப்படும். தேவர், செட்டுக்குள் நுழையும் போது, இயக்குனர் திருமுகம், 'அண்ணே, பர்ஸ்ட் ஷாட், ஓகே...' என்று கூற வேண்டும். இல்லாவிட்டால் தம்பி என்றும் பாராமல், நடிகைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல், அருவருப்பான வார்த்தை களை அருவியாக பொழிவார். நடிகைகள் அதை கவனித்து விட்டால், நாசூக்காக, 'மன்னிச்சுக்கம்மா...' என்பார்; அவர்களும் இடம் பெயர்வர்.
தேவருக்கு, கோபம் ஏற்படுத்தும் மூன்று விஷயங்கள்.
தாமதம், வார்த்தை தவறுவது, மோசடி!
தேவரின் அர்த்தமுள்ள இந்த கோபத்திற்கு அனைவரும் தலை வணங்கினர். ஒழுக்கம், உண்மை, கடுமையாக உழைப்பவர்களுக்கு அவர், ஒரு குழந்தையாகவே காட்சியளித்தார். அவர், 'டென்ஷன்' அடையும் போதெல்லாம், 'ஏண்ணே டென்ஷன் ஆகறீங்க... எல்லாம் ஒழுங்கா நடக்குது; கொஞ்சம் அமைதியா இருங்க. நான், இருக்கேன்ல பாத்துக்கறேன்...' என்று அவரை சமாதானப்படுத்தி, கோபத்தைக் குறைப்பார் எம்.ஜி.ஆர்.,
ஒரு நாளில், எட்டு மணி நேரம் கால்ஷீட் வீதம், 40 கால்ஷீட்டுகளில், மொத்தப் படமும் முடிய வேண்டும். ரீ - ஷூட்டிங் என்பதே தேவர் பிலிம்ஸ் வரலாற்றில் கிடையாது.
எந்த கதாநாயகியாவது நடிக்க தெரியாமல் சொதப்புவார். அதற்காக, பிலிமை, வீணடிக்க மாட்டார் தேவர்.
நடிகை சொதப்பியதற்கு ஏற்றாற் போல் கதாசிரியர் மாராவை அழைத்து, வசனத்தை மாற்ற சொல்வார். அவரைப் பொறுத்த வரை, எல்லாமே ஒரே டேக்கில் முடிய வேண்டும். இதனாலேயே நடிக்க தெரியாத நடிகைகளை, தன் படத்தில் ஒப்பந்தம் செய்யவே மாட்டார்.
தேவர், சினிமா இடி அமீன்; யாரும் அவரிடம் யோசனை கூறக்கூடாது; அது, அங்கு சாத்தியமும் இல்லை.
பாமர மக்களுக்காகவே, படம் எடுப்பதாக கூறுவார். படத்தின் டைட்டில், வசனத்தில் வந்தாக வேண்டும். அதை, எம்.ஜி.ஆர்., மட்டும் பேசினால் போதாது; நடிக்கிறவர்கள் அத்தனை பேரும் சொல்ல வேண்டும் என நினைப்பார். ஒரு முறை, ஆரூர்தாஸ், 'அது வேணாமே... இத்தனை படங்களில் தொடர்ந்து அதையே செய்திருக்கோம்; இதிலுமா...' என்றார். அன்றைய டிஸ்கஷனை, அதோடு முடித்து கொண்டார் தேவர்; அடுத்த படத்தில், அய்யாபிள்ளையை வசனம் எழுத வைத்தார்.
சினிமாவில் எதையும் சின்ன விஷயமாகக் கருதுவதில்லை தேவர். யானை, கோவிலை பக்தியோடு, வலம் வரும் காட்சி; அதற்கு வசனம் தேவைப்படாது என்று எழுதாமல் விட்டு விட்டனர். 'ரஷ்' பார்த்த தேவர், 'யானை, கோவிலை எவ்ளோ அழகா சுத்துதுன்னு எழுதுடா கிட்டா... இந்த டயலாக்கை அங்கு நிற்கிற யாராவது சொல்லட்டும்...' என்றார்.
எரிச்சலாகவே எழுதி முடித்தார் கிட்டா. அப்போது, தேவர், 'ஏண்டா... எல்லாரும் மூஞ்சியத் தொங்க போட்டுக்கிட்டீங்க... இங்கதாண்டா, அவசியம் டயலாக் வேணும்; நான் விலங்குகள வெச்சு படம் எடுக்குறேன். அதை பார்க்க, குழந்தைகளே அதிகம் வருவாங்க. அதுங்களுக்கு ஒழுங்கா படம் பார்க்கத் தெரியாது. அங்க, இங்க பராக்கு பார்க்கும். இந்த வசனம் இருந்தா, அதுங்க ஸ்கிரீனை பார்த்து, யானை கோவிலைச் சுத்தறதுக்கு, கை தட்டுமா, தட்டாதா சொல்லுங்கடா... ஒரு சீன், உங்களால, 'க்ளாப்ஸ்' மிஸ் ஆகணுமா... ஜனங்க ரசிச்சாத்தான்டா அது படம்; இல்லன்னா பப்படம்...' என்பார்.
தனக்கான காட்சிகள் முடிந்தவுடன், 'மேக்-அப்' அறைக்குள் போய் விடுவார் எம்.ஜி.ஆர்., அங்கு பல முக்கியஸ்தர்கள், கட்சிக்காரர்கள் அவருக்காகக் காத்திருப்பர். அவர்களுக்கு குடிக்க ஏதாவது வேண்டுமென்று சைகை செய்வார்
எம்.ஜி.ஆர்., பையன்களைத் தேடாமல், தானே காபி, டீ, கூல்டிரிங்ஸ் எடுத்துப் போவார் தேவர்.
எம்.ஜி.ஆரின் மேக்-அப் அறைக்குள், அவரது மேக் - அப் மேன் பீதாம்பரம் தவிர, அன்னியர்கள் பிரவேசிக்கவே முடியாது; கூடாது. எம்.ஜி.ஆர்., அழைக்கும் வி.ஐ.பி.,க்கள் மட்டுமே அங்கு செல்லலாம். பட முதலாளிகள் கூட அவரது அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது.
எம்.ஜி.ஆரின் தயாரிப்பாளர்களில், தேவர் மட்டுமே அவரது மேக்-அப் அறைக்குள் சுதந்தரமாகச் செல்வார். அது மட்டுமல்ல,
எம்.ஜி.ஆருக்கான, 'ஷாட்' தயாராகி விட்டால், 'அண்ணே மன்னிச்சுக்குங்க...' என்றபடியே எம்.ஜி.ஆரை கையைப் பிடித்து இழுத்து, செட்டுக்குள் அழைத்துச் செல்வார். அதிர்ந்து போய் நிற்பர் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த விருந்தினர்.
தேவர், எப்போதும் ஒன் - மேன் ஆர்மியாகவே செயல்பட்டார். சகலமும் அவரே! எம்.ஜி.ஆர்., படப்பிடிப்புக்கு வர தாமதமாவது போல தெரிந்தால், ராமாவரம் தோட்டத்திற்கு அவரே சென்று விடுவார். ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆர்., இருந்தால், தேவர் அவருடனேயே இருப்பார். எம்.ஜி.ஆரும், தேவர் படங்களில் நடிக்கும் போது, ப்ரீயாக இருப்பார். அவரது தலையீடு அறவே இருக்காது. பொதுவாக, தன் படங்களின் எடிட்டிங்கில் எம்.ஜி.ஆரே நேரடியாகப் பங்கு கொள்வார். அவர் ஒப்புதல் பெறாத காட்சிகள், படத்தில் வராது; ஆனால், திருமுகமே, ஒரு எடிட்டர் என்பதால், தேவர் பிலிம்ஸில் எடிட்டிங் மேஜையில், எம்.ஜி.ஆர்., உட்கார மாட்டார்.
எம்.ஜி.ஆர்., தன் பட அதிபர்களை, 'ஆண்டவனே' என்றும், 'முதலாளி சவுக்கியமா?' என்றே நலம் விசாரிப்பார். தேவரை மட்டும், 'அண்ணே...' என்று பாசமாக அழைப்பார்.
எம்.ஜி.ஆரை வைத்து, தேவர் தயாரித்த படங்களில் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், வசனகர்த்தா என்று அனைவருக்குமே மிக அதிக சம்பளம் கிடைத்தது. அதுவே, தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் எடுக்கும் சினிமா என்றால், அதில் பாதித் தொகையே ஊதியமாக வரும். தம்பி திருமுகத்துக்கும் அப்படியே! அதில் பாரபட்சம் கிடையாது.
தேவர் பிலிம்சில், உதவி இயக்குனர்கள் கிளாப் போர்டு, கதை, வசன பைல், பேடு ஆகியவற்றை பிடித்தபடி நின்றால் மட்டும் போதாது. உயிரைப் பணயம் வைத்து, புலி வாலைப் பற்றிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். காரணம், தேவரின் படங்களில், கண்டிப்பாக ஊட்டி முதுமலைக் காடுகளில், அவுட்டோர் ஷூட்டிங், ஒன்றரை மாதம் நடக்கும்.
விவசாயி படத்துக்காக, வாகினியிலேயே விளைநிலங்கள், 'செட்' போட்டார் தேவர். அவரே, சகதிக்குள் குதித்து, நாற்று நடவும் செய்தார். பட முதலாளியே, ஆபிஸ் பாய் போல், எல்லா வேலைகளையும் செய்யும் போது, உதவி இயக்குனர் சேற்றில் இறங்கத் தயங்கினால் எப்படி!
மனோதிடமும், அசாத்தியத் திறமைகளும், கடின உழைப்பும் உள்ளவர்களே தேவருக்கு ஈடு கொடுத்தனர். மற்றவர்கள், 'மிருக கம்பெனிக்கா வேலைக்குப் போற...' என்று கிண்டல் செய்தனர்.
தேவர் சென்ட்டிமென்டுகளின் சொந்தக்காரர். படம் நிறைவு பெற்றதும், அதற்கும் பூஜை நடத்துவார். தேவரின் ராசி எண், ஐந்து; அவரது படத்தை சென்னையில், 'ரிலீஸ்' செய்வதற்கு முன், புதிய சினிமாவின், ஐந்தாம் நம்பர் ரீல் மட்டும் பழநி, மருதமலை மற்றும் வடபழனி கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, முருகனின் பாதங்களில் வைத்து வழிபடுவார்; அத்துடன், அன்று, 5,000 பேருக்கு அன்னதானம் செய்வார்.
தேவருக்குப் பிடிக்காத எண்கள், மூன்றும், எட்டும்! ஆனால், 'முருகா' என்கிற மூன்றெழுத்திலேயே, அவர் மூச்சு இருந்தது. எக்காரணம் கொண்டும், தேவர் பட டைட்டில்கள், மூன்றிலோ, எட்டிலோ அமையாது. அதேமாதிரி ராகு காலத்தில் ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்துக்கு செல்லவே மாட்டார்.
தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு, நடிகைகள் வந்து செல்வது இரண்டே சந்தர்ப்பங்களில் மட்டுமே! முதன்முதலில், தேவர் படத்தில் நடிக்கும் போது அவரது ஆசி பெறுவதற்காகவும், அடுத்து, படங்களில் நடிக்கத் தேவையான காஸ்ட்யூம்களுக்கு அளவு கொடுக்க, தைத்ததை சரிபார்க்க!
தேவரின் அறை, மாடியில் இருந்தது. அங்கு நடிகைகள் செல்ல எப்போதும் தடை உண்டு. ஏதாவது, அவசர உதவி, மனக்குமுறல் என்றால், தேவரைக் காண அனுமதி கிடைக்கும். மற்றபடி ஷூட்டிங்கில், கல்யாண வீடுகளில் தேவரைப் பார்க்கலாம்; அப்படியொரு கட்டுப்பாடு அங்கு நிலவியது.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்
