sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 20, 2016

Google News

PUBLISHED ON : மார் 20, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு,

நான், பட்டதாரி ஆண்; படித்து முடித்து, பல மாதங்கள் ஆகியும், இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. காரணம், இன்டர்வியூ மீதான பயம். சிறு வயது முதலே கூச்ச சுபாவம் கொண்டவன் நான். யாரிடமும் எளிதில் பழகவோ, பேசவோ மாட்டேன். இதனால், எனக்கு நண்பர்கள் குறைவு. இப்போது கூச்சத்தோடு, பயமும் சேர்ந்து கொண்டது. முன்பெல்லாம் தெரியாத விஷயங்களை செய்யும் போது மட்டுமே பயம் ஏற்படும்; ஆனால், தற்போது தெரிந்த விஷயத்தையும், சிறப்பாக செய்ய வேண்டுமே என நினைத்து, பயம் கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன், உறவினர் பரிந்துரையில், ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. அந்த வேலையில், நான், சிறு தவறு செய்து விட்டதால், கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், அதுகுறித்து கம்பெனி கண்டுகொள்ளவில்லை என்றாலும், அந்த வேலைக்கு நான் லாயக்கற்றவன் என முடிவு செய்து, வேலையை விட்டு நின்று விட்டேன். இதேபோல், நிறைய செயல்களில், நானே என்னை விலக்கிக் கொள்கிறேன்.

தற்போது, என் நண்பனின் சிபாரிசில், ஒரு வேலையில் உள்ளேன். என் படிப்பிற்கு சம்மந்தம் இல்லாத வேலை தான் இது. இவ்வேலையில், எப்போதாவது என் பணி மாறும். அதுகுறித்து உயர் அதிகாரி விளக்குவார். உடனே அவ்வேலையைக் கற்று, செய்து தர வேண்டும். அவர், பணியைப் பற்றி விளக்கும் போது, என்னால் கவனிக்க முடிவதில்லை. இதனால், அவர் எரிச்சல் அடைகிறார். இந்த வேலையும் இழக்கும் தருவாயில் உள்ளது. இதுபோன்ற கவனச் சிதறல், எனக்கு நிறைய விஷயங்களில் இருக்கிறது.

மேலும், யாராவது சாதாரணமாக மிரட்டினால் கூட பயந்து விடுகிறேன். ஒருவருடன் பேசும் போது, பிரச்னை ஏற்படுவது போல் தோன்றினால், உடனே பயம் வந்து, அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் தோன்றுகிறது. இதுபோன்ற உணர்வை, நான் என் மேலதிகாரியை சந்திக்கும் போதும், கூட்டத்தில் பேச வேண்டிய கட்டாயத்தின் போதும், அடிக்கடி உணர்கிறேன். எப்போதும் எதிர்மறையான எண்ணங்களே மனதில் எழுகிறது. ஒரு செயலை செய்யும் முன், அதனால் ஏற்படும் தீமைகளே தெரிகிறது; இதனால், துணிச்சல் வருவதில்லை.

சிறு பிரச்னை என்றால் கூட, அந்தப் பிரச்னை முடியும் வரை, வேறு எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. அதுபோலவே, யாராவது என்னைப் பற்றி தவறாகவோ, கேலியாகவோ பேசினால் கூட, 'ஏன் அப்படி பேசினார்கள்...' என்று அதைப் பற்றியே சிந்திக்கிறேன்.

ஒரு செயலை தனியாக செய்யும் போது, சிறப்பாக செய்கிறேன்; ஆனால், அதையே மற்றவர் மேற்பார்வையில் செய்யும் போது, பதற்றத்துடன் செய்து, சொதப்பி விடுகிறேன்.

பெரும்பாலும், நான் தனிமையில் இருப்பதால், அந்த நேரங்களில், என் வாழ்வில் நடக்காததை, மற்றவர் வாழ்வில் நடந்ததை, என் வாழ்வில் நடந்தால் நான் என்ன செய்வேன் என்பது மாதிரி ஏதாவது கற்பனை செய்து யோசித்தபடியே இருக்கிறேன். இப்போதெல்லாம் இதுபோன்ற கற்பனைகளில் அதிக நேரம் செலவிடுகிறேன்.

இது, ஏதாவது மன நோயாக இருக்குமோ என்ற அச்சம் வந்துள்ளது. இவை அனைத்திலிருந்தும் மீண்டு வந்து, என் வாழ்வில் வளர்ச்சி அடைய, தாங்கள் தான் எனக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

இப்படிக்கு,

உங்கள் மகன்.


அன்புள்ள மகனுக்கு,

சதா எதையாவது பார்த்து பயப்படுவதற்கு, 'போபியா' என்று பெயர். வேலையில் பயம் ஏற்பட்டு, பணியை விட்டு நிற்பதற்கு, 'வொர்க் பிளேஸ் போபியா' என்றும், மற்றவர்களுடன் இணைந்து, ஒரு வேலையை சிறப்பாக செய்ய முடியாமைக்கு, 'சோஷியல் போபியா' என்றும், நாம் நல்லவனாக இல்லையே அல்லது சிறப்பாக செயல்பட முடியவில்லையே என ஆயாசப்படுவதற்கு, 'அடிலோ போபியா' என்றும், தோல்விகளை கண்டு பயப்படுவதற்கு, 'அடிசி போபியா' என்றும், முடிவுகளை எடுக்க தெரியாமல் திணறுவதற்கு, 'டிசைடோ போபியா' என்றும் பெயர். மகனே... உன்னிடம் இத்தனை வகை போபியாக்களும் உள்ளன.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம், சிறுவயதில், உன் பெற்றோர் உன்னை, 'எதற்கும் லாயக்கில்லாதவன்...' என வசை பாடி வளர்த்திருக்கலாம். இளம் வயதில் நண்பர்களுடன் அதிகம் பழகாமல், தனித்தே இருந்ததும் ஒரு காரணம். நீ செய்த சில காரியங்கள், தவறாக போய், அடுத்தடுத்து நீ செய்யும் காரியங்களும் தோற்கும் என்ற மனப்பான்மையும், எதையும் புதிதாய் கற்றுக் கொள்ளும் ஆர்வமோ, விருப்பமோ உன்னிடம் இல்லாதிருக்கலாம். மொத்தத்தில், பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் மற்றும் உன் குணாதிசயம் இவைகளே, உன் பின்னடைவுக்கு காரணம்.

நேர்காணலுக்கு செல்லும் போது, அறைக்குள் பிரவேசிப்பதிலிருந்து, அங்கிருப்போர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது வரை, முன் தயாரிப்பு அவசியம். நேர்காணல் செய்வோர், என்னென்ன கேள்விகள் கேட்பர் என்பதை, மாதிரி வினாக்கள் தயாரித்து ஒத்திகை பார்க்க வேண்டும்.

பணி இடத்தில், முழு கவனமாக செயல்படுவதுடன், கூடிய வரை தவறுகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு தவறுகள் செய்தால், மேலதிகாரியிடம், 'மன்னிக்கணும் சார், தவறு செய்து விட்டேன்; இனி அவ்வாறு செய்யாமல் கவனமாக இருப்பேன்...' என நேர்மையாய் கூற வேண்டும்.

தெரியாத பணியை மேலதிகாரி செய்யச் சொன்னால், 'இந்த வேலை எனக்கு தெரியாது; கற்றுத் தாருங்கள். சீக்கிரமாய் கற்றுக் கொள்வேன்...' என மிடுக்காய் கூற வேண்டும். மற்றவர்கள் மேற்பார்வையிடும் போது, சொதப்பாமல் இருக்க, அவர்கள் உன்னை விட அறிவிலும், அனுபவத்திலும் குறைந்தவர்கள் என்றும், அவர்களுக்கு இப்பணியை குரு போல கற்றுத் தருகிறேன் என நீ எண்ண வேண்டும்.

போபியாக்கள் என்பவை, நம் கை, கால்களை கட்டி போட்டிருக்கும் காகித சங்கிலிகள். உத்வேகத்துடன், ஒருமித்த மனதுடன், துணிச்சலுடன் செயல்பட்டால், இவைகளை எளிதாக அறுத்தெறியலாம்.

தினமும், உன்னை, நீ சுயவசியம் செய்து கொள். மனநல மருத்துவரிடம் சென்று, தகுந்த ஆலோசனைகள் பெறுவது நல்லது.

தன்னம்பிக்கை நூல்களை நிறைய படி; மூடுபனி விலகும்.

இன்று புதிதாய் பிறந்தோம் என நினைத்து, பாம்பு தன் சட்டையை உரிப்பது போல, உன் போபியாக்களை அகற்று.

மற்றவர்கள் வாழ்வில் நடந்த சிறப்பானவை, நம் வாழ்வில் நிகழ, நாம் என்னென்ன செய்ய வேண்டும் என, கற்பனை செய்து, கண்ணைத் திறந்து பெரிதாய் கனவு காண்.

ஒரு கோழைக்குள், மாவீனும், ஒரு முட்டாளுக்குள், ஜீனியசும். ஒளிந்திருக்கிறான். இருட்டுக்குள் தான் பிரகாசம் ஒளிந்திருக்கிறது. கொல்லும் தன்மை நீக்கப்பட்ட பாம்பின் விஷம் தான், பாம்புக் கடிக்கு மருந்தாகிறது. எதிர்மறை எண்ணங்களுக்குள் தான், நேர்மறை எண்ணங்களும் பதுங்கியுள்ளது.

தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி சாத்தியமாகும். எறும்பு ஊர கல்லும் தேயும். ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும். முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் மகனே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us