
மார்ச் 23, பங்குனி உத்திரம்
தெய்வங்களுக்குரிய திருமண நாளாகக் கருதப்படுகிறது பங்குனி உத்திரம். இந்நாளில் தான், சிவன் - பார்வதி, ரங்கநாதர் - கமலவல்லி தாயார், முருகன் - தெய்வானை போன்றோரின் திருமணங்கள் நடந்ததாக, புராணங்கள் கூறுகின்றன.
பழநி மற்றும் சபரிமலையில், பங்குனி உத்திர திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சாஸ்தா அவதரித்ததும் இந்நாளில் தான்!
சிவனுக்கும், மோகினியாக மாறிய விஷ்ணுவுக்கும் பிறந்தவரே சாஸ்தா! மகிஷி என்னும் அரக்கி, ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவரால் தான், தனக்கு அழிவு வர வேண்டும் என்று, வரம் பெற்றிருந்தாள். அதன் காரணமாக, சிவ - விஷ்ணு இந்த லீலையை நிகழ்த்த, சாஸ்தாவே, ஐயப்பனாக அவதாரம் எடுத்து, மகிஷியை அழித்தார்.
கடந்த, 16ம் நூற்றாண்டில் வசித்த அப்பைய தீட்சிதர் என்ற சைவ நெறி அறிஞரும், தாதாச்சாரியார் என்ற வைணவ அறிஞரும், ராஜா ஒருவருடன் சாஸ்தா கோவிலுக்கு சென்றனர். அங்கே, சாஸ்தா தன் மூக்கின் மேல் விரல் வைத்து, ஏதோ சிந்திப்பதைப் போன்ற சிலை ஒன்று இருந்தது.
வித்தியாசமான இந்த சிலை பற்றி அங்கிருந்தவர்களிடம் ராஜா விசாரித்த போது, 'இது பழங்கால சிலை; இதை வடித்த சிற்பிக்கு, இவ்வடிவில் காட்சியளித்துள்ளார் சாஸ்தா. அதை அப்படியே விக்ரகமாக வடித்த சிற்பி, 'இந்த காட்சிக்கான காரணத்தை, பிற்காலத்தில் அறிஞர் ஒருவர் விவரிப்பார். அக்காரணம் வெளிப்பட்டதும், சாஸ்தா மூக்கில் இருந்து விரலை எடுத்து விடுவார்...' என்று சொன்னாராம்...' என்றார்.
உடனே, தாதாச்சாரியாரிடம், 'இதற்கான காரணத்தை உங்களால் யூகிக்க முடிகிறதா...' என்று கேட்டார் ராஜா.
'தன் சேனைகளுக்கு சேனாதிபதியாக, முருகனை நியமித்துள்ளார் சிவன். பூதகணங்களின் ஒரு பகுதிக்கு அதிபதியாக கணபதியையும், இன்னொரு பகுதிக்கு சாஸ்தாவையும் தலைவர்களாக நியமித்துள்ளார். இப்படி பூதங்கள் சூழ, தன்னை சிவன் அமர்த்தியதற்கு என்ன காரணம் என்று சாஸ்தா யோசித்திருப்பார்...' என்று விளக்கமளித்தார் தாதாச்சாரியார்.
இந்த விளக்கம் சரியாக இருந்திருந்தால், சாஸ்தா மூக்கில் இருந்து விரலை எடுத்திருப்பாரே... அம்மாதிரி ஏதும் நடக்கவில்லை.
உடனே ராஜா, அப்பைய தீட்சிதரிடம் விளக்கம் கேட்டார்.
'சாஸ்தாவின் தந்தை சிவன்; தாய் மோகினியான விஷ்ணு. சிவனுக்கு, பார்வதி மனைவி என்பதால், அவளை அம்மா என்று சாஸ்தா அழைக்கலாம். ஆனால், விஷ்ணுவின் மனைவி லட்சுமியை எப்படி அழைப்பது என்று யோசிக்கிறார் போலும்...' என்றார்.
அவ்வளவு தான்! சிலை மூக்கில் இருந்து விரலை எடுத்து விட்டது. 'அப்பாவின் மனைவி அம்மா; அம்மாவின் மனைவிக்கு என்ன உறவு...' இப்படி ஒரு சிக்கலான கேள்விக்கு சாஸ்தா விடை தெரியாமல் தவித்துள்ளார்.
இந்த அருமையான விளக்கத்தைச் சொன்ன தீட்சிதர், 'சாஸ்தாவே... எங்கள் வாழ்விலும் இதுபோன்ற சிக்கலான பிரச்னைகள் வந்தால், அதை, தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்...' என்று பிரார்த்தனை செய்தார்.
நாமும், இப்படியொரு இடியாப்ப சிக்கலில் சிக்கி இருந்தால், சாஸ்தாவின் பிறந்தநாளான பங்குனி உத்திர திருநாளில் அவரது அருளை வேண்டி வரலாம்.
தி.செல்லப்பா