
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 35; திருமணமாகி, எட்டு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் இரு ஆண்பிள்ளைகள் உள்ளனர். என் கணவர், குறைந்த சம்பளத்தில், எங்கள் ஊரின் அருகில் உள்ள கம்பெனியில் பணிபுரிகிறார்.
அம்மா... நான் பிறந்தது முதல், 10ம் வகுப்பு படிக்கும் வரை பாட்டியிடம் தான் வளர்ந்தேன். இதனாலேயே தாயின் பாசம் கிடைக்காமல் போனது. 19 வயதில் எனக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன மூன்றாவது நாளிலேயே வரதட்சணை பிரச்னை ஆரம்பித்தது. அத்துடன், அன்றிலிருந்து, 2014ம் ஆண்டு வரை, என்னை என் பிறந்த வீட்டுக்கு அனுப்பியது கிடையாது, என் கணவர். முதல் பிரசவத்திற்கு மட்டும், மூன்று வாரங்கள் பாட்டி வீட்டில் இருந்தேன்.
வரதட்சணை கேட்டு தினமும் சித்ரவதை செய்ததுடன், ஒருமுறை சமாதானம் பேசுவது போல் நடித்து, என் தந்தையை வீட்டிற்கு வரவழைத்து, செருப்பால் அடித்தான், என் கணவன். அன்று என் தந்தையிடம், 'அப்பா... இனிமேல், நானாக கூப்பிட்டால் கூட என் வீட்டிற்கு வர வேண்டாம்...' என்று கூறி, அனுப்பி விட்டேன்.
பெற்ற தாயின் அன்பு கிடைக்காததால், அதை கணவரிடம் ரொம்ப ஆசையாக. எதிர்பார்த்திருந்தேன். ஆனால், தினமும், அடி உதை என, பெரிய இடியாக அமைந்தது என் வாழ்க்கை. எட்டு ஆண்டுகள் இப்படியே சென்றன.
இந்நிலையில், அரசு வேலைக்கு படிப்பதாக கூறினாள், என் தோழி. நானும் படிக்க போகிறேன் என காலில் விழுந்து கெஞ்சி, ஒப்புக் கொள்ள வைத்தேன்.
நான் பரீட்சைக்கு படிக்க ஆரம்பித்தால் போதும், ஏதாவது இடைஞ்சல் செய்து கொண்டே இருப்பார். எப்படியோ பரீட்சை எழுதி, ஆண்டவன் புண்ணியத்தில் அரசு வேலையும் கிடைத்து விட்டது; அதுவும் சொந்த ஊர் அருகிலேயே!
என் கணவருக்கு பணத்தாசை அதிகம்; அதனால், நாம் சம்பாதித்து கொடுத்தால், நம் மேல் பாசமாக இருப்பார் என எண்ணினேன். ஆனால், என் சம்பளப் பணத்தை மொத்தமாக வாங்கிக் கொள்வதுடன், மனம் மற்றும் உடல் ரீதியாக ரொம்பவும், 'டார்ச்சர்' கொடுத்தார். வாரத்திற்கு மூன்று நாள் அழுதபடியே தான் வேலைக்கு செல்வேன்.
ஒருநாள், அவரது, 'டார்ச்சர்' பொறுக்க முடியாமல், எதிர்த்து பேசி விட்டேன். உடனே என்னை அடித்து, வீட்டை விட்டு துரத்தி விட்டார். திருமணமான, 14 ஆண்டுகளில் முதன் முறையாக என் பிள்ளைகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டேன்.
நான் வந்த பின், என் கணவர் மற்றும் மாமனார், மாமியார், 'வேலை பார்க்கும் இடத்தில், மற்ற ஆண்களுடன் தவறாக பழகுகிறாள்...' என்று எல்லாரிடமும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், திடீரென, மூன்று மாதங்களுக்கு முன், என் பெற்றோரிடம் வந்து, 'நான் திருந்தி விட்டேன்; இனிமேல் அவளை அடிக்கவோ, தவறாக பேசவோ மாட்டேன் என்னுடன் அனுப்பி வையுங்கள்...' என்று கேட்டார், என் கணவர். நான் போக மறுத்து விட்டேன்.
உடனே, பஞ்சாயத்து தலைவர்களிடம் சொல்லி, என் பெற்றோரிடம் பேசினர். இப்போது என் பெற்றோரும், 'அவன் தான் திருந்தி விட்டேன் என்று கூறுகிறானே... நீ போக வேண்டியது தானே...' என்று என் மீது, கோபம் கொள்கின்றனர்.
அம்மா... என்னுடைய கேள்வி இதுதான்:
* திருமணம் ஆனதிலிருந்து நாயாய் வீட்டு வேலைகளை எல்லாம் செய்தேன். ஆறு ஆண்டுகள் அரசு வேலை செய்து சம்பாதித்து கொடுத்தேன். ஆனால், ' நீ வேலை செய்ததும், சம்பாதித்து கொடுத்ததும், சாப்பிட்டதற்கும், படுத்ததற்கும் சரியாக போய் விட்டது...' என்று கூறிய என் கணவர், இன்னும், 10 ஆண்டுகள் சென்றபின், இவ்வாறு கூறினால், நான் என்ன செய்ய? என்னுடைய தாலியைத் தவிர, வேறு எந்த நகைகளும் என்னிடம் இல்லை. பிள்ளைகள் படிப்பதற்கு கடன் வாங்கி, பீஸ் கட்டியுள்ளேன்.
* நான் நடத்தைக் கெட்டவள் என்று எல்லாரிடமும் சொன்னவர்கள், அப்படி கெட்டுப் போனவளை, ஏன் திரும்பவும் அவர்கள் குடும்பத்திற்கு வாழ அழைக்கின்றனர்.
* ஒரு பெண்ணை அவளின் கணவன் மற்றும் மாமனார், மாமியாரே நடத்தை கெட்டவள் என்று கூறினால், மற்றவர்கள் என்னவென்று பேசுவர்?
* அன்பு, பாசம் என எதுவும் இல்லாமல், வெறும் பணத்திற்காகவும், உடல் சுகத்திற்காகவும் இருக்கும் கணவரிடம், என் மிச்ச வாழ்க்கையை ஒப்படைத்தால், நானும், என் பிள்ளைகளும் சந்தோஷமாக இருப்போமா?
இப்போது என் பெற்றோரின் வீடு அருகே, எங்களுக்கு பாத்தியப்பட்ட பூர்வீக வீட்டில், என் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். என் பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் கேம் வாங்கித் தருவதாக ஆசை காட்டியும், செலவுக்கு பணம் கொடுத்தும் அழைத்து பார்க்கிறார், என் கணவர். அவர்கள் அவரிடம் போக மறுக்கின்றனர்.
இப்போது தான் இரவில் நன்றாக, நிம்மதியாக தூங்குகிறேன்.
இனி நான், என்ன செய்ய வேண்டும்; ஒரு நல்ல முடிவை சொல்லுங்கள்.
அன்பு மகளுக்கு —
மகன், மகள் வளர்ப்பின் போது இல்லாத மனப்பக்குவமும், பணப்புழக்கமும், பேரன், பேத்தி வளர்க்கும் போது தாத்தா, பாட்டியருக்கு வந்து விடுகிறது. இதனாலேயே தாத்தா - பாட்டியிடம் வளரும் பேரப் பிள்ளைகள் அவர்களையே பெற்றோராக பாவிக்கின்றனர்.
பெற்ற தாயின் அன்பை, கட்டிய கணவனிடம் எதிர்பார்த்தது மாபெரும் தப்பு; உலகின் எந்த கணவனும், பெற்ற தாய்க்கு மாற்றாக மாட்டான்.
தாம்பத்யம், விரும்பி வைத்துக் கொண்டால் சொர்க்கம்; பலவந்தப்படுத்தினால், நரகம். வரதட்சணைக்கும், மனைவி சம்பாதித்து தரும் பணத்திற்கும் ஆசைப்படும் உன் பேராசைக்கார கணவன் திருந்தி விட்டதாகவும், உன்னுடன் மீண்டும் வாழ விரும்புவதாகவும் கூறுவது நரி தந்திரம். ஒரு நாளும் நம்பாதே!
மனைவியை, உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தும் ஆண்கள், தங்கள் தரப்பு நியாயமாக, மனைவியை நடத்தை கெட்டவள் என, குற்றம் சாட்டுவர். உன் குணம், உன் கணவன் மற்றும் அவனது வீட்டாரின் உண்மை குணங்களை அறிந்தவர்கள், அவர்கள் உன் மீது சுமத்தும் குற்றச்சாட்டை நம்ப மாட்டார்கள்.
திருமணம் செய்து கொடுத்த மகள், வாழாமல், பிறந்த வீடு திரும்பினால், அவளை பராமரிக்க, பொதுவாக பெண்ணைப் பெற்றோர் விரும்புவதில்லை.
அன்பு, பாசம் இல்லாத பணத்தாசை கணவனிடம், உன் மீதி வாழ்க்கையை ஒப்படைத்தால், நீயும், உன் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க மாட்டீர்கள்.
மகளிர் காவல் நிலையத்தில் உன் கணவன் மீதும், பஞ்சாயத்தார் மீதும் புகார் கொடு. சட்டப்படி உன் கணவனிடமிருந்து விவாகரத்து பெறு. பூர்வீக வீட்டில் தனியே வசித்து, உன் பிள்ளைகளை வளர்த்து வா. மனதாலும், உடலாலும் காயப்பட்ட நீ, காயங்களிலிருந்து குணமாக காலமே அருமருந்து; பணி இடத்தில் ஆண்கள் வீசும் வலையில் விழுந்து விடாதே. கொடுங்கோல் தந்தையின் உண்மை சுயரூபத்தை மகன்களிடம் தோலுரித்து காட்டு.
தொலைதூர கல்வி இயக்ககம் மூலம், உன் கல்வித்தகுதியை உயர்த்து. பணி உயர்வுக்கு நடத்தப்படும் துறைத் தேர்வுகளை எழுது. வாரம் ஒருமுறை கோவிலுக்கும், மாதமொருமுறை குழந்தைகளுடன் சுற்றுலா போ. அதிகம் கடன்கள் வாங்கி, அகலக்கால் வைக்காதே. உன் சம்பாத்தியத்தில் உன் மகன்களை என்ன படிக்க வைக்க முடியுமோ, அதை படிக்க வை.
சுதந்திரக் காற்றை சுவாசி; சிறுசிறு சந்தோஷங்களை அனுபவி.
கொடுமைக்காரக் கணவனுக்கு, தகுந்த தண்டனையை வழங்குவார், இறைவன். இரு மகன்களின் ஒளி மயமான எதிர்காலம் உன் வெற்றி இலக்காய் அமையட்டும்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

