
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 54; என் அப்பாவின் உடன் பிறந்த ஒரே தங்கையான என் அத்தையின், மூன்றாவது மகளை, 25 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்; வெளியூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான், மகன். அவனுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள், பி.இ., இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.
தற்போது, என் பெற்றோர் மற்றும் அத்தை யாரும் உயிருடன் இல்லை. உடல் நலக் குறைவால், கடந்த ஆண்டு என் மனைவியும் இறந்து விட்டாள்.
அரசு அலுவலக அதிகாரியான எனக்கு தேவைக்கு அதிகமான பணம், வசதிகள் மற்றும் செல்வாக்கு இருந்தாலும் தனிமை என்னை வாட்டுகிறது.
என் அத்தையின் மூத்த மகள் வயது, 52; அவரது கணவர், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகன்கள் உள்ளனர். எல்லாருக்கும் திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர். அவர்களுடன் தான் தற்போது அவர் உள்ளார்.
நான், எவ்வளவு மன சங்கடத்தில் இருந்தாலும்,'மகளுக்காக வாழ்ந்தே ஆக வேண்டும்...' என்ற நிலையில் உள்ளேன். இந்நிலையில், சிலர் என்னை அணுகி, 'மறுமணம் செய்து கொள்ளலாமே... அதற்கு ஏற்ற பெண்கள் உள்ளனர்...' என கூறுகின்றனர்.
எனக்கு அதில் விருப்பமில்லை என்றாலும், என் உடல் தேவைக்காக மட்டுமின்றி, எனக்கு துணையாகவும், உறக்கமற்ற என் இரவுகளில் என்னுடன் இருக்கவும் ஒரு துணை தேவை.
என் குடும்பத்தில் ஒருவரானவரும், உடல் நலம் சரியில்லாத என் மனைவியை நன்கு கவனித்துக் கொண்டவரும், என் மகளை, தன் மகளைப் போல் பார்த்துக் கொள்பவரும், எங்கள் எல்லார் மீதும் அக்கறை கொண்டவருமான, என் மனைவியின் அக்காவையே திருமணம் செய்ய நினைக்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். எனவே, அவரிடம் என் கருத்தை எப்படி சொல்வது? எனக்கும், அவருக்கும், திருமணமான மகன்கள் மற்றும் வயது வந்த மகள் இருக்கும் போது, இதைப் பற்றி யாரிடம் எப்படி கேட்பது என்று தெரியவில்லை.
மனைவியை இழந்து, தனிமையில் உள்ள நான், எனக்கு இருக்கும் வசதிக்கு எவ்வித கெட்ட வழிகளிலும் போனதில்லை. என் நற்பெயரையும் காப்பாற்றி, என் மனைவியின் அக்காவை திருமணம் செய்ய என்ன வழி?
மேலும், என் எண்ணம் சரி தானா?
எனக்கு தகுந்த ஆலோசனை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
அன்புள்ள சகோதரன்.
அன்பு சகோதரருக்கு —
உங்களிடமிருக்கும் வசதிக்கு தவறான வழிகளை தேடாமல், இறந்து போன மனைவியின், விதவை அக்காவை, மணந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள்; நியாயமான ஆசை தான்!
அதற்கு முன், நீங்கள் செய்ய வேண்டியவை:
உங்கள் மகளுக்கு தகுந்த வரன் பார்த்து, திருமணம் செய்து வையுங்கள்.
உங்களிரு குடும்பங்களின், பொது பெரியவரிடம் விஷயத்தை சொல்லி, அப்பெண்ணிற்கும் உங்களை மறுமணம் செய்ய விருப்பம் இருக்கிறதா என்பதை, தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு விருப்பம் இல்லாதபட்சத்தில், வற்புறுத்தாமல் ஒதுங்கி விடுங்கள். மாறாக அவருக்கும் விருப்பம் எனில், உங்களிருவரின் பிள்ளைகளிடம் கனிவாக பேசி, சம்மதம் பெறுங்கள்.
இருதரப்பு பெரியவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்; யாருக்கும் ஆட்சேபனை இல்லாத அளவுக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
திருமணத்திற்கு முன், இருவரும், 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' செய்து கொள்ளுங்கள்.
மகன்கள் மற்றும் மகள் விரும்பினால், உங்களிருவரின் சொத்துகளை உங்களிருவருக்கும், இரு பங்குகள் ஒதுக்கி, மீதியை, சமமாக பிரித்து தரலாம்.
திருமணமானால், நீங்களிருவரும் தனி வீடு பார்த்து, குடும்பம் நடத்தலாம். அட்டவணை தயாரித்து, மாதத்தில், குறிப்பிட்ட நாட்கள், மகன் - மகள் வீடுகளுக்கு சென்று வரலாம்.
வேறு பெண்ணை மணம் புரிவது என்றாலும், மேற்கூறிய வழிவகைகள் செய்து, திருமணம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் மறுமணம், வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

