PUBLISHED ON : ஜூலை 17, 2016

அன்புள்ள அம்மா —
எனக்கும், என் கணவருக்கும் இடையே, 10 வயது வித்தியாசம். எங்களுக்கு திருமணமாகி, 18 ஆண்டுகள் ஆகின்றன. கல்லூரி செல்லும் வயதில், இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். முதல், 10 - 12 ஆண்டுகள், மிகவும் கோபக்காரராக இருந்தார், என் கணவர். இப்போது, நான் வேலைக்கு செல்வதால், சுமுகமாக செல்கிறது, வாழ்க்கை. கூட்டு குடும்பம் தான் என்றாலும், என் மாமியாருக்கும், தன் பையன் என்றால், நடுக்கம் தான்.
என் பிரச்னை என்னவென்றால், வயது வித்தியாசமின்றி, பிற பெண்களின் மார்பகங்களை உற்றுப் பார்த்து ரசிக்கிறார், என் கணவர். குறிப்பிட்டு சொல்வ தென்றால், சேலை அணிந்தவர்களையே அப்படி பார்க்கிறார்.
முதல் முறை, என் தாயை உற்றுப் பார்த்ததை பார்த்து, சண்டையிட்ட போது, தனிமையில், என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இம்முறை வேலைக்காரி!
சாதாரணமாக நடந்து கொள்வது போல், என் எதிரிலேயே வேலைக்காரி துணி துவைக்கும் போதும், பெருக்கும் போதும் உற்றுப் பார்க்கிறார். நான், அவளை வேலையை விட்டு நிறுத்தி விட்டேன்.
இந்தப் பிரச்னையை எப்படி கையாள்வது?
நானும் புடவை கட்டி, காட்ட வேண்டுமா இல்லை என்னை நன்றாக பார்த்துக் கொண்டால் போதும் என்று, கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா அல்லது நாசூக்காக, காலம் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா? இவரின் இத்தகைய செயலால் என் மன அமைதியே போயிற்று.
இது ஒரு நோயா, பிற்காலத்தில் இன்னும் அதிகம் ஆகுமா? என் வருங்கால சம்பந்தி வீட்டு பெண்களிடம், இப்படி நடந்து கொள்வாரோ என்று இப்போதே பயமாக இருக்கிறது.
உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத,
அவர் சொல்வது போல், 'சந்தேக நோய்' கொண்ட பெண்.
அன்புள்ள சகோதரிக்கு —
பிறந்த குழந்தைக்கு, தாயின் பாலூட்டும் அவயங்களில் பால் உறிஞ்ச யார் சொல்லிக் கொடுத்தது? இயற்கை சொல்லிக் கொடுத்த உறிஞ்சுணர்வே, குழந்தைகளின் ஆசான். எழுத்தாளர்களும், கவிஞர்கள் மற்றும் ஓவியர்களும் காலம் காலமாக மார்பகத்தை காமம் பொதிந்த விஷயமாக நமக்குள் ஏற்றி விட்டனர்.
உன் கணவருக்கு உள்ள மனநிலையே, பெரும்பாலான ஆண்கள் அனைவருக்குள்ளும் தொற்றியிருக்கும் மனநோய். மார்பகங்களை பாலுணர்வு கேந்திரமாக பார்க்க, ஆணின் மரபணுவில் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதோ என்னவோ!
உலகின் கவர்ச்சிகரமான ஆடை, சேலை தான்; அதுதான், அங்கங்களை இலை மறை, காய் மறைவாக காட்டுகிறது. அதனாலேயே, உன் கணவர் சேலை உபாசகராக இருக்கிறார். நீ அவரிடம் சொல்... 'கிழவா... பெண்களின் கழுத்துக்கு கீழே பாக்காதே; பார்த்த வரை போதும்; இனிமேலாவது மாறு. இன்று, என் தாயை பார்க்கிறாய்; நாளை நம் சம்பந்தி வீட்டு பெண்களை பார்க்க மாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம். விலங்குகள் தான், மாமிசத்தை இச்சையாய் வெறிக்கும். நீ மனித மாமிசத்தை புசிப்பவனா... பெண்களை போகப் பொருளாய் பார்க்காதே... பார்த்தே ஆகணும், ரசித்தே ஆகணும் என்றால், என்னை ரசி...' என்று கூறு.
அவ்வப்போது கணவரின் துர்நடவடிக்கைகளை கண்காணித்து கண்டி. காம விவகாரங்களை அதிகப்படுத்தும் விஷயங்கள், உன் கணவரின் கண்களில் படாமல் பார்த்துக் கொள். வாரா வாரம் கோவிலுக்கு கூட்டிச் செல். 'பெண்களை இழிவான விதத்தில் பார்க்க மாட்டேன்...' என, சத்தியம் வாங்கு!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
