தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிப்பிற்குரிய அம்மாவிற்கு —

என் வயது, 32; டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் முடித்துள்ளேன். பிளஸ் 2வில், 83 சதவீத மதிப்பெண் பெற்றும், உயர் ஜாதியை சேர்ந்தவன் என்பதால், தனியார் கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. ஆனால், ஏழ்மையான என் குடும்பச் சூழ்நிலையில், என்னால் மேற்படிப்பை தொடர முடியவில்லை. அதனால், 18 வயதிலேயே தந்தையுடன் இணைந்து சுய தொழில் ஆரம்பித்தேன்; என்னை நம்பி, ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்தார், என் தந்தை.

என் உடன் பிறந்தோர், ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி.

இந்த, 14 ஆண்டுகளில், வீடுகள், கார் என சம்பாதித்ததுடன், என் தங்கைக்கு, 50 சவரன் நகை செய்து போட்டு மணமுடித்து கொடுத்தேன். அவளுடைய இரு குழந்தைகளுக்கும் சீர் வரிசைகள் செய்தேன்.

இதனிடையே, என் தம்பி, வாகன விபத்தில் சிக்கிய போது, அவனுக்கு முதுகு தண்டில், ஆபரேஷன் செய்த வகையில், சில லட்சங்கள் செலவழித்தேன். அதன் பின்னரே, எனக்கு திருமணமும் நடந்து, ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

என் குழந்தைக்கு, இரண்டு வயது இருக்கும் போது, மஞ்சள்காமாலை ஏற்பட்டது. அப்போதிருந்து எனக்கும், என் மனைவிக்கும் நெருக்கம் குறைய ஆரம்பித்தது. அத்துடன், அவளுக்கு தாம்பத்யத்தில் ஈடுபாடு கிடையாது. இன்று வரை, வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் தாம்பத்யத்திற்கு சம்மதிப்பாள்.

என் மனைவியின் தங்கையோ அடிக்கடி என்னிடம் மொபைல் போனில் பேசுவாள். என் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடிய நேரம் அது என்பதால், நானும், அவளுடன் பேசினேன். அவள், என்னை விரும்புவதாக கூறினாள்.

ஒருசமயம், நான், என் மனைவி, குழந்தை மற்றும் மச்சினியுடன் ஒரு வேலையாக வெளியூர் சென்ற இடத்தில், நால்வரும் ஒரே கட்டிலில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, மச்சினியின் கைகள், இரு முறை என் மீது பட்டது. அதனால், நானும் அவள் மீது, கையை வைத்தேன்.

உடனே, அச்செயலை எதிர்த்தவள் போல், நடித்தாள்; அதனால், அச்சம்பவத்தை மறந்ததுடன், அவளிடம் பேசுவதையும் தவிர்த்தேன்.

இந்நிலையில், வெளியூரில் வேலை பார்த்த இடத்தில், வேறு ஜாதி பையனை காதலித்து, மணந்து கொண்டாள், என் மச்சினி.

'ஏன் இவ்வாறு செய்தாய்...' என்று குடும்பத்தினர் கேட்ட போது, 'இதற்கெல்லாம் காரணம், மாமா தான்; அவரை திருமணம் செய்ய என்னை வற்புறுத்தினார்...' என்றும், 'தகாத இடங்களில் தொட்டார்...' என்றும் கூறி, தப்பித்து கொண்டாள்.

அதற்கேற்ப, என் மனைவியும், என் பழைய காதலை சுட்டிக் காட்டி, என்னிடம் சண்டை போடுகிறாள்.

என், 23ம் வயதில், ஒரு பெண்ணை இரண்டரை ஆண்டுகள் காதலித்தேன். என் நண்பர் மூலமாக அப்பெண்ணின் வீட்டில் முறையாக பெண் கேட்டும், அவர்கள் சம்மதிக்கவில்லை. அதனால், பெற்றோர் மற்றும் சமுதாயத்திற்காக எங்கள் காதலை முறித்து, தற்போது நல்ல நண்பர்களாக உள்ளோம். இவ்விஷயத்தை, என் மனைவியை பெண் பார்க்கும் போதே தனிமையில் கூப்பிட்டு, தெளிவாக எடுத்துக் கூறிய பின்பே, அவளை மணம் புரிந்தேன்.

ஆனால், திருமணம் முடிந்து, சில ஆண்டுகளுக்கு பின், என் பழைய டைரிகளை எடுத்து படித்து, இன்றுவரை என்னிடம் சண்டையிடுகிறாள். அத்துடன், இவ்விஷயத்தை அவளது தந்தையிடம் தவறாக கூறிவிட, அவர், 'எங்களை ஏமாற்றி விட்டீர்கள்; என் பிள்ளை இப்படி தவறு செய்தால் வெட்டி கொன்று விடுவேன்...' என்று கூறினர்.

இதில் வேடிக்கை என்ன வென்றால், என் மாமனார் மற்றும் அவரது தந்தைக்கு இரு மனைவியர்.

இப்பிரச்னைகளால், நிம்மதியை இழந்துள்ள நான், இதிலிருந்து விடுபட, ஆன்மிகத்தை நாடுகிறேன்.

நான் யார், என் ஆன்மாவின் வேலை என்ன, என் தேடல் எங்கிருந்து துவங்கியது; அதன் முடிவு என்ன, மனிதனின் கர்ம வினைகள் எத்தன்மை கொண்டது, பணம் ஒன்று மட்டுமே வாழ்வின் தேடலா... என்று பல்வேறு கேள்விகள் மனதில் எழுகிறது.

அம்மா... என் தேடலுக்கு, வழிகாட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் மகன்.


அன்புள்ள மகனுக்கு,

உன் கடிதத்தில், ஜாதி வெறி பொங்கி வழிகிறது. சொந்த பந்தங்களுக்கு செலவு செய்ததை சொல்லி காட்டும் குணமும், உன்னிடம் உள்ளது. அத்துடன், உன் மாமனார் மற்றும் அவரது தந்தைக்கு இரு மனைவியர் என, நீ ஆலாபிப்பது, உன் ரெண்டு பொண்டாட்டி ஆசையையே காட்டுகிறது.

உன் மச்சினிச்சி, தன் உணர்ச்சிகளுக்கு, வடிகாலாகத் தான் உன்னை பயன்படுத்தியுள்ளாள்.

உன் ஆன்மிக தேடல் என்பது, 'சீச்சீ... இந்த பழம் புளிக்கும்...' எனும் நரி வகையை சேர்ந்தது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், 50 சதவீத சாத்தானும், 50 சதவீத தேவ அம்சமும் உள்ளது. இதில், ஆயுள் முழுக்க, மதம் சாராத ஆன்மிக தேடலே, ஆன்மாவின் வேலை.

மேலும், சுயம் அறிதல், உயிர் வாழ்வதற்கான தேடலே, மனித மனத்தின் தேடல் துவக்கம்; வாழ்வின் பரிபூரணத்துவத்தை அடைந்து விட்டோம் என்ற திருப்தியே, அதன் முடிவு.

வாழ்வின் மெய்யான தேடலில், பணத்திற்கு இடமில்லை என்பதை புரிந்து கொள்.

மனிதனின் கர்மவினைகள், இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் கடும் துன்பங்களை பரிசளிப்பவை. அதனால், உன் இருதார ஆசைக்கு, காரணம் தேடாமல், இருப்பதில் திருப்தி கொள். உன் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து ஆன்மிகத்தை உணர்ந்து கொள்வாய்.

புறத்தில் சிவனை தேடி அலையாதே; அப்பழுக்கற்ற அன்பே, 'சிவம்' எனும் தத்துவத்தை உணர்ந்து, உயிர்களை நேசி. சுயநலத்தை முழுமையாக வென்றால், மனிதனும் தெய்வமாகலாம்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us