தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு —

வணக்கத்துடன், மகன் எழுதுவது. அமைதியான, அழகான, வசதியான பாரம்பரியமிக்கது, எங்களது குடும்பம். எங்கள் வீட்டில், என், 80 வயது அம்மா, நான், என் மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளோம். நன்றாக இருந்த குடும்பத்தில், தற்சமயம், புயல் வீச துவங்கியுள்ளது.

என் மகள், இன்ஜினியரிங் மேற்படிப்பு முடித்தவள். அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்த போது, ஒவ்வொரு மாப்பிள்ளையையும் தட்டிக் கழித்து வந்தாள். விபரம் கேட்டதற்கு, 'பி.இ., படிக்கும் போதிருந்தே வேற்று மதத்தை சேர்ந்த ஒருவனை காதலிப்பதாகவும், அவனை தான் திருமணம் செய்வேன்...' என்றும் கூறினாள்.

அதனால், பெரியவர்கள் மூலம், அவளுக்கு ஆலோசனைகள் கொடுத்தேன். அப்போது, சரி எனக் கூறியவள், நல்ல வரனை அழைத்து வந்து, மாப்பிள்ளைக்கும் பிடித்து விட்ட நிலையில், மாப்பிள்ளையிடம், 'என்னை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க சொல்கின்றனர்; எனக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை...' என்று கூறி, மாப்பிள்ளை வீட்டாரை அனுப்பி விட்டாள்.

இதனால், என் மகளின் காதலனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அவனின் அப்பா, சிறு வயதில் இறந்து விட, அம்மா வெளிநாடு ஒன்றில், வீட்டு வேலை பார்ப்பதாகவும், அக்கா தான் தோன்றியாக திரிவதாகவும் அறிந்தேன். அத்துடன், சாதாரண வேலை பார்க்கும் அவன், தனிமையில், ஆதரவு இல்லாமல் வாழ்வதாகவும் கேள்விபட்டு, இவன் வேண்டாம் என்று, மகளிடம் கூறினேன். அவள் கேட்கவில்லை.

அதனால், 'உன் விருப்பம் போல் அவனை மணமுடித்து, வாழ்ந்து கொள்...' என்றேன். அதற்கும் மறுக்கிறாள். 'என்ன செய்ய போகிறாய்...' என்று கேட்டால், 'சொல்ல மாட்டேன்...' என்றும், 'நாங்கள் என்ன செய்ய...' என்று கேட்டால், அமைதியாகவும் இருக்கிறாள். மன மாறுதலுக்காக, 'வேலைக்கு போ...' என்று சொன்னாலும் போவதில்லை. இந்த எட்டு மாதங்களாக, நள்ளிரவு வரை, வீடியோ கேம் விளையாடுவதும், காலையில் தாமதமாக எழுவதையும் பழக்கமாக கொண்டுள்ளாள். மேலும், யாரிடமும் சரியாக பேசாமல், 'டிவி' பார்த்தவாறு இருக்கிறாள்.

இந்நிலையில், என் மகளை காதலிப்பவன், 'வாட்ஸ் - ஆப்' மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், என் மகளும், அவனும் பல இடங்களில் சுற்றி திரிந்ததாகவும், இரு முறை அவன் வீட்டில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் கீழ்த்தரமாக எழுதி அனுப்பினான். தற்போது, 'மன்னிக்கவும்... எங்களை மணமுடித்து வைக்க வேண்டுகிறேன்; உன் சம்மதத்துடன்...' என, எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறான்.

இதனால், வீட்டினர் அனைவரும் மனமுடைந்து, சரியாக சாப்பிடாமலும், தூக்க மின்மையாலும், நடை பிணமாக வாழ்கிறோம். இதற்கு நீங்கள் தான் தீர்வு கூற வேண்டும்.

— கண்ணீருடன்,

உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு —

முதுகலை பொறியியல் படித்த மகள், வேற்று மதத்தை சார்ந்தவனை காதலிப்பதை தகுதி குறைவாக கருத வேண்டாம். உங்கள் மகளுக்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை பார்க்கிறீர்கள் என்பதை ஒரு தட்டிலும், மகள் காதலிப்பவனை மறு தட்டிலும் வைத்து, நிறுத்தி பாருங்கள். எந்த பக்கம், தட்டு கனக்கிறதோ, அதை நீங்கள் ஆதரிக்கலாம்.

மகளின் காதலனை ஆராயும் முன், 'வாழப் போவது நாமல்ல; நம் மகள்...' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவனின் குடும்ப பின்னணி, மோசமாக இருக்கிறது என, தெரிவித்துள்ளீர்கள். ஒருவேளை, அவன் உங்கள் மகளை மணந்து கொண்டால், அவனது தனிமை கரைந்து விடுவதுடன், இன்று சாதாரண வேலையில் உள்ளவன், மென்மேலும் படித்து, பதவி உயர்வு பெறலாம்.

உங்கள் மகளின் காதல், வெறும் இன கவர்ச்சியால் ஏற்பட்டதல்ல; இளங்கலை பொறியியல் படிக்கும் போதிருந்தே, அவனை காதலித்து வந்துள்ளாள். அதனால், அவனுடைய நிறை, குறைகளை அவள் அலசி ஆராய்ந்திருக்கலாம்.

வீட்டு பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு, அவனை மறக்க துணிந்தவள், பின், குற்ற உணர்ச்சியில் தத்தளித்துள்ளார். அதனாலேயே நீங்கள் பார்த்த வரனை தட்டி கழித்துள்ளாள். அதே சமயம், வீட்டை விட்டு ஓடிப்போய், தன் காதலனை மணந்து கொள்ள, அவள் தயாரில்லை.

தன் மன அழுத்தத்தை போக்கவே வீடியோ கேம் விளையாடுவது, 'டிவி' பார்ப்பது என, தன் எண்ணங்களை திசை மாற்றுகிறாள்.

காதலுக்கு, நீங்கள் பச்சைக் கொடி காட்டாததை, உங்கள் மகள், தன் காதலனிடம் கூறியிருக்கலாம். அதனால் ஏற்பட்ட எரிச்சலில் உங்களை சீண்டி பார்க்கும் நோக்கத்துடன், தகாத தகவல்களை, 'வாட்ஸ் - ஆப்'பில் அனுப்பியுள்ளான். அதை, உங்கள் மகளோ அல்லது அவன் மனசாட்சியோ கண்டித்திருக்கலாம்; அதனாலேயே தற்போது மன்னிப்பு கேட்கிறான்.

நீங்களும், உங்கள் மனைவியும், மகளிடம் மனம் விட்டு பேசி, அவள் காதலனின் நல்ல, தீய குணங்களை அலசி ஆராயுங்கள். அவள் தன் காதலில் பிடிவாதமாக இருந்தால், அத்திருமணத்தால் ஏற்படும், சாதக, பாதகங்களுக்கு அவளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என, மென்மையாக கோடிட்டு காட்டுங்கள்.

'அவனது காதல் உண்மையானது தானா, உங்களது மகளை மணந்து, ஆயுளுக்கும் சந்தோஷமாக வைத்துக் கொள்வானா, வாழ்க்கையில், நியாயமான முறையில் உழைத்து, உயர்ந்த நிலைக்கு வர, அவனுக்கு விருப்பமுள்ளதா, எந்த நோக்கத்தோடு, 'வாட்ஸ் - ஆப்'பில் தகவல்கள் அனுப்பினான். அவனுக்கு குடி பழக்கம் மற்றும் போதை பழக்கம் உள்ளதா, அவனது குடும்பம், அவனது காதலை, எப்படி பார்க்கும்...' என்பதை அவனிடம் கேட்டு, தெளிவு பெறுவதுடன், இருவரிடமும் தனித்தனியாக பேசி, இரு தரப்பில் இருக்கும் பிரச்னைகளை களையுங்கள்.

நல்லதோ, கெட்டதோ உங்கள் மகளின் வாழ்க்கையை, உங்கள் மகளே வாழ்ந்து பார்க்கட்டும். இருவருக்கும், ஒரு நல்ல நாள் பார்த்து, திருமணம் செய்து வையுங்கள். நடப்பதெல்லாம் நல்லதற்கே என, நம்புவோம்!

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us