தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முதலில் பேசியது என்ன?

முதலில் பேசியது என்ன?

முதலில் பேசியது என்ன?


PUBLISHED ON : பிப் 05, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் பார்க்கும் போதும், முதலிரவில் பேசியதும், எந்த ஒரு கணவனுக்கும், மனைவிக்கும், மறக்கவே மறக்காது. அன்றைய சம்பவங்கள், காட்சிகள் மற்றும் வசனங்கள் ஆகியவற்றை, காலமெல்லாம், அத்தம்பதி நினைவு கூர்ந்து, அவர்களுக்குள் பேசிக் கொண்டே இருப்பர்.

இவற்றை மேற்கோள் காட்டி, மனைவியானவள், கணவனை ஒரு பிடி பிடிப்பது, பின்னாளில் சகஜமாக நிகழும்.

தம்பதியர் மட்டும் அல்ல, இருவர் ஏற்படுத்திக் கொள்ளும் தொழில்முறை (ஒப்)பந்தங்கள், சிறு சிறு செயல்பாடுகள், சிலவகை ஏற்பாடுகள் ஆகியவற்றிலும், முதன்முதலில் என்ன பேசினோம் என்பதை, அடிக்கடி நினைவு கூறப்பட்டு, 'அதன்படி நீங்கள் நடந்து கொள்ளவில்லை; பேசியதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறீர்கள்...' என்கிற குற்றச்சாட்டு எழும்.

எனவே, முதலில் பேசிய ஒன்றிற்கு, எப்போதுமே முக்கியத்துவம் உண்டு.

இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? சொல்கிறேன்...

'நினைச்சு நினைச்சு கண்டிஷன் போடுறீங்க; இதை முதலிலேயே சொல்லியிருக்கணும்ல...' என்கிற குற்றச்சாட்டை, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகள் என்று, பலரும் எதிர்கொள்கின்றனர்.

'நீங்க முதல்ல சொன்னது ஒண்ணு; இப்ப நடந்துக்கிறது ஒண்ணு...' என்கிற குற்றச்சாட்டிற்கு, நாம் ஆளாக வேண்டாம் என்றால், முதலிலேயே, எல்லாவற்றையும், ஒன்று விடாமல், தெளிவாக பேசிவிட வேண்டும்.

பள்ளிப் பிள்ளைகள், வீட்டுப் பாடத்தை மனனம் செய்வதைப் போல், இத்தகைய ஒரு சந்திப்பு நிகழுமுன், என்னென்ன பேச வேண்டும்; எதிராளியை எப்படி அணுக வேண்டும்; என்னென்ன கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும் என்பனவெல்லாம், காட்சித் திரையாக, மனதிற்குள் ஓட்ட வேண்டும்.

நினைத்து நினைத்து சேர்க்கப்படும் ஷரத்துகள் மற்றும் புது நிபந்தனைகள் திணிக்கப்பட்டவையாகவும், மிகுந்த நெருக்கடி தருபவையாகவும், பிறரால் கருத வாய்ப்பு உண்டு. இதை தவிர்க்க, 1,2,3... என, எழுதிய பின், பேச்சை ஆரம்பிக்க வேண்டும்.

ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்கிற ஒப்பந்தங்கள், நன்கு நீடிக்கின்றன. புதிது புதிதாக சேர்க்கப்படுகிற சிறு நிபந்தனைகள் கூட, பெரிய பெரிய ஒப்பந்தங்களை, காலாவதியாக்கி விடுகின்றன.

வேலையாட்களை, பணியில் நியமிக்கும் போது, பழைய அனுபவங்களின் அடிப்படையில் நடக்கக்கூடிய தவறுகளை அனுமானித்து, இன்னின்ன செயல்களுக்கு இடமில்லை என்பதை, கடுமையான விதிகள் போல் பேசாமல், தகவல் மற்றும் எதிர்பார்ப்பு என்பது போல், சொல்வதுடன், அவர்கள் கடமைகள் என்னென்ன என்பதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

அதேநேரத்தில், 'என்னய்யா இந்த ஆளு இவ்வளவு கண்டிஷன் போடுறாரு...' என்று எண்ணாத வகையில், அழகுறவும், புன்னகையுடனும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதைச் செய்றேன், இது தர்றேன் என்றெல்லாம், ஆரம்பத்தில் வீண் நம்பிக்கைகள் எதையும் அடுக்கக் கூடாது. முட்டையில், காக்காய் முட்டைக்கும், குயில் முட்டைக்கும் பெரிய வேறுபாடு தெரியாது; முட்டையிலிருந்து குஞ்சு வெளி வரும் போது தான் தெரியும். அதைப் போல, மனிதர்களும் போகப் போகத்தான், நிறம் காட்டுவர். இதற்கென காத்திருந்து, பின், சவுகரியங்களை செய்து கொடுக்கலாம். முதலிலேயே சொல்லிவிட வேண்டாம்.

வீட்டுக்காரர் - குடித்தனக்காரர்; சம்பந்தம் பேசுவோர்; முதலாளி - தொழிலாளிகள்; தொழிற் பங்குதாரர்கள், தற்காலிகப் பணிகளை முடித்துக் கொடுத்து, அன்றே கூலி வாங்கி புறப்படுவோர் என, எந்த ஒரு தொழில் மற்றும் சமூக உறவும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தபட்டு விட்டால், வண்டி தடங்கலின்றி, 'ஜம்' என்று ஓடும்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us