தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் திருமணம், 42 வயதிற்கு மேல் தான் நடந்தது. கணவனை இழந்தவள், என் மனைவி. திருமணம் நடந்த மூன்று மாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உடல் ரீதியாக, எவ்வித சுகத்தையும் அனுபவிக்காமல், 11 ஆண்டுகள், வாரிசு இன்றி வாழ்ந்து, பின், கணவனை இழந்தவள்.

நிச்சயதார்த்தம் அன்று, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். நெருங்கிய உறவினர்களுடன் கோவிலில் திருமணம் நடத்தி, மாலையில் வரவேற்பு, இசைக்கச்சேரி, வீடியோ, போட்டோ, பந்தல், மின்விளக்கு, மனைவியின் குடும்பத்தினர் வந்து போக வேன், புடவை, தாலி ஜெயின் என, எல்லாம் என் சொந்த செலவில் செய்தேன்.

என் மகன் பிறந்து, 10 மாதங்கள் ஆன நிலையில், என் தாயாரின் உடல் நிலையை நினைத்து, அவனுக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என நினைத்து, அருகிலேயே தனிக்குடித்தனம் சென்றோம். நான் மட்டும், என் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் செய்தேன். என் மனைவியும், அவளால் முடிந்த உதவிகளை செய்தாள்.

இந்நிலையில், என் மனைவியின் முதல் கணவனது, 75 வயது தாயார், தன் ஒரே மகனின் சொத்தில், தனக்கும் பங்கு உண்டு என்று கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கில், இருவருக்கும் சம பங்கு என, தீர்ப்பு வெளியாகியது.

பின், அவளின் முதல் கணவனின் சேமிப்பு பணம் மற்றும் வங்கியில் என் பெயரில் லோன் வாங்கி, கூட்டாக வீடு வாங்கினோம். ஐந்தரை ஆண்டுகள் எவ்வித இடையூறும் இன்றி, வங்கியில் கடனை செலுத்தி வந்தேன். கை குழந்தையை வைத்துக் கொண்டு என் மனைவி வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில், என் மாத வருமானத்திற்குள் குடும்ப செலவுகளை சமாளிக்க இயலவில்லை. இந்நிலையில், வெளிநாட்டில் வேலை கிடைக்க, 'நீ, உங்க வீட்ல இரு; ஆறு மாதத்திற்கு பின், உன்னை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்...' என்றேன். அவளும், 'என் தந்தைக்கு வயதாகி விட்டது; கடைசி காலத்தில் நான் அவருடன் இருக்கிறேன்...' என்று கூறினாள். உடனே, வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். தற்போது, என் உடை தவிர, வேறு ஒன்றும் என்னிடம் இல்லை. நான்கு மாதங்களாக, தினமும், 10 முறை என்னுடன் தொலைபேசியில் பேசுகிறவள், திடீரென்று என் போன் அழைப்பை தவிர்த்தாள்.

சில நாட்களுக்கு முன், என் விலாசத்திற்கு குடும்ப நலக் கோர்ட்டில் அவள் வழக்கு தொடர்ந்துள்ளதாக நோட்டீஸ் வந்துள்ளது. வீடு, நகை, காப்பீடு தொகை என, என் மொத்த உழைப்பும் மனைவியின் பெயரிலேயே உள்ளது. என் வருமானம் அனைத்தும் என் மனைவி மற்றும் மகனுக்கு மட்டுமே என்று நான் நினைக்கையில், தந்தை மற்றும் உறவினர்களின் பேச்சைக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளாள்.

கடந்த, இரண்டு மாதங்களாக என் மனைவி, மகனிடம் பேச முடியாமல், தூக்கம் இன்றி அவதிப்பட்டு வருகிறேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவளுக்காகவே வாழ்வேன். அதை அவள் எப்போது புரிந்து, என்னுடன் சேர்ந்து வாழப் போகிறாள் என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம். இப்போது, மிக உயர்ந்த பதவியில் சேர்ந்து விட்டேன். பணமோ, வீடோ, அவள் தந்தையின் இவளது பங்கு சொத்துக்களோ எனக்கு தேவையில்லை. எனக்கு தேவை எல்லாம் என் மனைவியும், குழந்தையும் மட்டும் தான். நான் ஆசைப்படுவது எல்லாம் இரண்டு நாளைக்கு ஒரு முறை, என் மகனுடன் பேசவும், மாதம் ஒருமுறை, நேரில் பார்க்க வேண்டும் என்பதே!

எனக்கு நீங்கள் தான் நல்ல ஆலோசன வழங்க வேண்டும்.

— இப்படிக்கு,

உங்கள் சகோதரன்.


அன்பு சகோதரருக்கு —

பணத்தின் மீது நாட்டம் இல்லை என கூறும் நீங்கள், கடிதம் முழுக்க நகை, பணம் மற்றும் வீடு என்றே பிதற்றியுள்ளீர்கள். பணம், சொத்து வரும் என்ற ஆசையில் தான், கணவனை இழந்த விதவையை, விரும்பி மணந்தீர்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கடிதத்தில், உங்களது தவறுகளை எல்லாம் மறைத்து, ஆசைகளை துறந்த புத்தனாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.

நீங்கள் என்ன படித்துள்ளீர்கள், திருமணத்திற்கு முன் என்ன வேலை பார்த்தீர்கள், எதற்காக பார்த்த வேலையை துறந்தீர்கள், வெளிநாட்டு வேலை என்னாச்சு, இப்போது, திடீரென்று, மிக உயர்ந்த பதவியில் எப்படி சேர்ந்தீர்கள்?

இப்படி எதற்கான பதிலும், உங்கள் கடிதத்தில் இல்லை. மிக குழப்பமான மனநிலையில், கடிதத்தை எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு, நீண்ட நாள் குடிப்பழக்கமோ, போதை பழக்கமோ அல்லது சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லும் மனநோயோ இருக்கலாம் என நினைக்கிறேன்.

தினம், பத்து முறை தொலைபேசியில் பேசும் உங்கள் மனைவி, திடீரென்று, உங்கள் மீது வழக்கு தொடுத்திருக்க, நீங்கள் சொல்லாத, வலுவான காரணம் ஏதோ ஒன்று இருக்கிறது. 74 வயதான மாமனார் வழக்கு போட தூண்டியிருக்கிறார் என்றால், அவருக்கு உங்கள் மீது என்ன வன்மம்... ஐந்து வயது மகனுடன் இருக்கும், 45 வயது பெண், யார் பேச்சையோ கேட்டு, கணவன் மீது வழக்கு போட்டு, தன் வாழ்க்கையை எப்படி சூன்யமாக்கிக் கொள்வாள்?

நீங்கள் மட்டுமே அறிந்த உங்கள் குறைகளை களைந்து, மனைவியை நேரில் சந்தித்து, அவளுக்கு உங்கள் மீதிருக்கும் ஆவலாதிகளை கேட்டறியுங்கள். பணம், நகை மற்றும் வீடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்து, மனித உறவுகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் சிறு சிறு கடமைகளை சொல்லி காட்டாதீர்கள். மாமனாரோ, உங்கள் மனைவி வழி உறவினர்களோ உங்களுக்கு எதிரி அல்ல; உங்களின் நாக்கு தான் பரம விரோதி. பேச்சைக் குறைத்து, மனைவி மற்றும் குழந்தை மீதான அன்பை, செயலில் காட்டுங்கள்.

ஐம்பது வயதாகும் உங்களுக்கு, ஆண்மைக் குறைவோ அல்லது மேல் மெனோபாஸ் பீரியடோ வந்திருக்கலாம். அதனால் கூட, உங்களின் பேச்சுகளும், நடவடிக்கைகளும் எரிச்சல் மூட்டும் வகையில் அமைந்திருக்கலாம். இதற்கு, 'செக்சாலஜி' மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.

பிரச்னைகள் நம்மிடமிருந்தே கிளம்புவதை போல, தீர்வுகளும் நமக்குள் தான் ஒளிந்திருக்கின்றன.

உங்களின் முழு சரணாகதி, மனைவியின் நிபந்தனையற்ற மன்னிப்பை பெற்றுத் தரும். திருந்தி வாழ்ந்து, மீதி வாழ்நாளை அர்த்தப்பூர்வமாய் கழியுங்கள்.

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us