தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நல்ல வழியில் நடப்போம்!

நல்ல வழியில் நடப்போம்!

நல்ல வழியில் நடப்போம்!


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடவுள், ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையை வைத்துள்ளார். அதை, சரியான வழியில் பயன்படுத்தினால், நம்மை சுற்றியுள்ளவர்கள் மட்டுமல்ல, நாமும் நல்ல நிலையை அடையலாம். மாறாக, தவறான வழியில் பயன்படுத்தி மற்றவர்களை துன்பப்படுத்தினால், நாம் அழிவது உறுதி என்பதை விளக்கும் வரலாறு இது.

ஒட்டப்பிடாரம் என்ற ஊரில், வைகுந்தநாதன் என்பவருக்கு, ஆண்டான் என்று ஒரு மகன் இருந்தான். சிறுவனாக இருந்த போது, பள்ளிக்கு செல்ல பயந்து, காளி கோவிலில் மறைந்து உட்கார்ந்து கொள்வான்.

ஒருநாள், சித்த புருஷர் ஒருவர், அவன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதைப் பார்த்து, காரணம் கேட்டார். அவனும் தன் பயத்தை சொல்ல, காளி மந்திரத்தை உபதேசித்து, 'இதை நன்றாக உருவேற்றி வா; உன் பயம் போய்விடும்...' என்றார்.

காளிதேவியின் சிலைக்கு பின் உட்கார்ந்து, மந்திரத்தை உருவேற்றினான், ஆண்டான். இதனால், அவனுக்கு காட்சியளித்த காளிதேவி, 'உனக்கு இசை பாடும் வரம் வேண்டுமா; வசை பாடும் வரம் வேண்டுமா...' என, கேட்டார். சிறுவன் என்பதால் அறியாமையில், 'வசை பாடும் வரம் தா...' என வேண்டினான்.

வேப்பிலைக்குச்சியால், ஆண்டானின் நாவில் எழுதி, 'நீ சொல்வதெல்லாம் பலிக்கும்...' என்று அருளி, மறைந்தார் காளிதேவி.

தீட்டிய மரத்திலேயே, கூர் பார்ப்பது போல, தான் வாங்கிய வரம் பலிக்கிறதா என்று பார்க்க, 'காளி விக்கிரகம் பின்னப்பட வேண்டும்; முன்னால் உள்ள கீற்றுக் கொட்டகை தீப்பற்றி எரிய வேண்டும்...' என்றான், ஆண்டான். உடனே, காளி விக்கிரகம் பின்னப்பட்டதுடன், கொட்டகையும் எரிந்தது.

அதைப் பார்த்த ஆண்டானுக்கு, அதுவரை இருந்த அச்சம் விலகியது. மறுநாள், பள்ளி செல்லாமல், வீதியில் விளையாடியபடி இருந்தான். அதைப் பார்த்த ஆசிரியர் கண்டித்தார். உடனே, ஆசிரியர் மீது அறம் பாடினான்; ஆசிரியர் இறந்தார். இதையறிந்த ஊர் மக்கள், ஆண்டானிடம் நடுங்கி, அவன் கேட்டதையெல்லாம் அளித்தனர்.

இதனால், அவனுள் ஆணவம் அதிகரிக்க, பல்வேறு கொடுமைகளை செய்தான்.

ஒருநாள், தன்னால் விளைந்த கொடுமைகளை எண்ணி, பாவம் தீர, ராமேஸ்வரம் சென்று நீராடி, வழிபாடு முடித்து திரும்பினான். ஆனாலும், மனம் அமைதி பெறவில்லை.

உடனே, திருச்செந்தூர் சென்றான், அங்கு, முருகப்பெருமானை துதிக்கையில் பழக்கதோஷத்தால், வசைப்பாடலை பாடத் துவங்க, அப்போது, 'போதும்... நிறுத்து; இல்லையேல் இப்போதே நீ இறப்பாய். இனிமேல், இவ்வுலகில் யாருக்கும் நீ எமனாக இருக்க மாட்டாய்; அதிவிரைவில் விண்ணுலகம் அடைவாய்...' என, அசரீரி ஒலித்தது.

முதன் முதலாக பயத்தின் நிழல், அவன் மனதில் படியத் துவங்கியது.

'இதுவரை எந்த திருத்தலத்திலும், இவ்வாறு நடந்ததில்லையே...' என்று நினைத்து வெட்கத்தோடு, திருச்செந்தூரை விட்டு வெளியேறினான்.

வழியில், ஆண்டான் நாவில், கொடிய புண் உண்டாக, 'தீய வழியில் சென்று, தொல்லையை தேடிக் கொண்டோமே...' என்று புலம்பியவன், நோயில் விழுந்து மடிந்தான்.

தெய்வத்திடம் தீய வரம் கேட்டு, அழிந்து போன அப்புலவன், 'வசை கவியாண்டான்' என அழைக்கப்பட்டான்.

தெய்வம் தந்ததை வைத்து, நல்வழியில் நடக்காமல், துயரப்படும் போது, தெய்வத்தை நோவதில் பலனில்லை.

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

அரச மரத்தை சுற்றுவதால், குழந்தை பிறக்குமா?

இது, அறிவியல் கலந்த, ஆன்மிக ரகசியம். அரச மரம், அமோனியா எனும் வேதிப் பொருளை அதிகமாக வெளியிடும்; இது, கர்ப்பப் பையை வலுவடையச் செய்யும். அதிக நேரம், அரச மரத்தை சுற்றும் பெண்களுக்கு, கர்ப்பப் பைக்கு சக்தி கிடைப்பதால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us