PUBLISHED ON : ஏப் 09, 2017

அன்புள்ள சகோதரிக்கு—
நான், பட்டப்படிப்பு முடித்தவள். மருத்துவராக பணியாற்றுகிறார், என் கணவர். எங்களுக்கு இரு குழந்தைகள். திருமணம் முடிந்த முதல் மாதத்திலேயே எனக்கு பிரச்னை ஆரம்பித்து விட்டது.
என் கணவர், சரியான அம்மா பைத்தியம். எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தாலும், நான் எது சொன்னாலும், அதை அப்படியே தன் அம்மாவிடம் சொல்லிவிடுவார். இது தவிர, 'செக்ஸ்' விஷயத்திலும் சரியில்லை; நான் வலியப் போனாலும் ஈடுபாடு காட்டமாட்டார்.
எங்களுக்குள் ஏதாவது சிறு பிரச்னை ஏற்பட்டால், அன்று இரவு சமாதானமாகி விடுவோம் என்று அவரை நெருங்குவேன். ஆனால், அவர் என்னை ஒதுக்கி தள்ளுவார். இதனால், கோபத்தில் என் கையை கீறுவதுடன், உடலில் சூடு வைத்து, என்னை கட்டுப்படுத்தி, அழுதபடி தூங்கி விடுவேன்.
இதனால், எங்களுக்குள் ஏற்படும் சிறு பிரச்னை கூட, தீராமல் இழுத்துக் கொண்டே போகும். திருமண வாழ்க்கையில் நிம்மதியோ, சந்தோஷமோ இல்லை. என்ன வாழ்க்கை என்று, மனம் வெறுத்து இரண்டு, மூன்று முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றும் காப்பாற்றப்பட்டேன்.
என் கணவர் குடிகாரர்; இவர் குடித்துக் கிடக்கும் அவலட்சணத்தை, அவரது உறவினரிடம் காட்டிய பின், இப்போது அவர்கள் ஒதுங்கி விட்டனர். ஆனால், என் மாமியார் மட்டும் ஒத்துக் கொள்ளாமல், 'திருமணமாகும் முன், என் மகன் நல்லாத் தான் இருந்தான்...' என்றும், 'பொண்டாட்டிகாரி தான் பொறுமையாக இருக்கணும்...' என்று சொல்கிறார்.
மது அருந்திய நேரத்தில், ஏதாவது சொன்னால், அடிக்கவும் செய்வார். எங்கள் வட்டாரத்தில் அவருக்கு நல்ல பெயர்; ஆனால், வீட்டில் நடப்பது யாருக்கும் தெரியாது.
என் பெற்றோரிடம், 'இவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கித் தாருங்கள்...' என்றால், 'ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியாது; அது குடும்பத்திற்கும் அழகு அல்ல... மாப்பிள்ளை வேண்டாம் என்றால், பிள்ளைகளுக்காக அந்த வீட்டில் வாழாவெட்டியாக வாழு...' என்கின்றனர்.
என் கணவர் நல்லவர் தான்; ஆனால், யார் சொன்னாலும் கேட்பார்; சுயபுத்தி கிடையாது. குடித்துவிட்டாலோ, 'என் அம்மா தனியாக இருக்கிறார்; அம்மா, அம்மா...' என்று அழுது புலம்புவார்.
'நீங்க மனோதத்துவ டாக்டரைப் பாருங்க; டாக்டராக இருந்தும், ஒரு பெண்ணை புரிந்து கொள்ள முடியவில்லையே... நான் வேண்டாம் என்றால், என் வாழ்க்கைய ஏன் கெடுத்தீங்க...' என்று கேட்டால், 'மூன்று வேளை நன்றாகச் சாப்பிடு; நன்றாகத் துணி உடுத்து; வீட்டோடு இரு. என்னிடம் வேறு எதுவும் எதிர்பார்க்காத. என் விஷயத்திலும் தலையிடாத...' என்கிறார்.
ஏதாவது விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், என்னை நன்றாக, 'மேக் - அப்' செய்யச் சொல்வார். ஊர் அறிய, என்னை ரொம்ப நல்லா வச்சுருக்கிற மாதிரி நடிக்கிறார். அதனால், இப்போது எல்லாம் அவர் எங்கு கூப்பிட்டாலும் போவதில்லை. 'வீட்டிற்குள் புருஷன், பொண்டாட்டியா இல்ல; ஊருக்கு எதுக்கு நடிக்கணும்...' என்று வீட்டிற்குள் அடைபட்டு கிடக்கிறேன்.
எங்களுக்கு கொஞ்சம் கடன் உள்ளது; கடன் தீர்ந்த பின், என்னிடம் நன்றாக இருப்பாராம். மனிதன் என்றால் கடன், கஷ்டம் இருக்கத்தான் செய்யும்... அலை எப்போ ஓயறது; எப்போது தலை மூழ்கிறது!
தற்போது, மூன்று மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியே வாழ்கிறோம். அவர் வருகிறார், சாப்பிடுகிறார், போகிறார். எனக்கு மனம் ரொம்ப வேதனைப்படுகிறது. 'செக்ஸ்' முடியவில்லை என்றால், என்னை வேறு வழியிலாவது சந்தோஷப்படுத்தலாமே... என்னைக் கண்டாலே அவருக்கு வெறுப்பு; சம்பளம் இல்லா வேலைக்காரி போல நடத்துகிறார். எனக்கு நல்ல வழி கூறுங்கள்.
— இப்படிக்கு,
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
மருத்துவம் படித்த ஆண்கள் எல்லாம் தேவர்கள் அல்லர். அவர்களும், ஆசாபாசம், விருப்பு, வெறுப்பு நிறைகுறை உள்ளவர்கள் தான். மனநல மருத்துவர்களே மன நோயால் பாதிக்கப்பட்டதும் உண்டு.
நீண்ட நாள் குடிப்பழக்கம் உள்ள உன் கணவர், ஆண்மைக்குறைவால் வாடுகிறார். அவர் உண்மையில் அம்மா பைத்தியம் இல்லை; தன் குறையை பூசி மெழுக அவ்வாறு நடிக்கிறார். குடிப்பழக்கத்தால் தான், கடனாளியாகவும் இருக்கிறார்.
கையை வெட்டுவது, சூடு போடுவது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது என்று உன்னை நீயே தண்டிப்பது உன் பிரச்னைக்கான தீர்வல்ல.
பட்டப்படிப்பு முடித்துள்ள நீ, ஏதாவது வேலைக்கு சென்று, பொருளாதார சுதந்திரம் பெறு. தொலைதூர கல்வி இயக்ககம் மூலம், மேற்படிப்பு படி.
உன் கணவர் திருந்த கால அவகாசம் கொடு. அதற்குள் அவர் குடிப் பழக்கத்திலிருந்து விடுபட தேவையான மருத்துவத்தை பார். ஆல்கஹால் அனானிமஸ் குழுமத்தில் அவரை சேர்.
ஆண்மைக்குறைவு நீங்க, தேவையான சித்த மருத்துவம் மேற்கொள்ள வை. அவரது சம்பாத்தியத்துக்கு கணக்கு கேள். அவரது வருமானத்தில் ஒரு பகுதியை வைத்து, அவரது கடனை அடை. தாம்பத்யம் இல்லாத சிறு சிறு சந்தோஷங்களை கணவரிடமிருந்து பெற, கணவரை மனதளவில் தயார்படுத்து. உன் கணவருக்கு உன் மீது வெறுப்பில்லை; உன்னை அவர் வேலைக்காரியாக பாவிக்கவும் இல்லை. குடிப் பழக்கத்தாலும், ஆண்மை குறைவாலும், குற்ற உணர்ச்சியில் தத்தளிக்கிறார். அதனாலேயே, உன்னுடன் முகம் கொடுத்து பேசுவதை தவிர்க்கிறார்.
நீ கொடுக்கும் கால அவகாசத்தில், உன் கணவர் உன்னுடன் ஒத்துழைத்து, குடிப்பழக்கத்தை அகற்றவில்லை என்றால், விவாகரத்து கோருவேன் என, எச்சரிக்கை செய். அவரை திருத்த அவரின் அம்மாவுடன் இணைந்து செயல்படு. கணவரை குறை கூறி ஒதுங்கி நிற்பதை விட, களத்தில் இறங்கி, அவரை உடலாலும், மனதாலும் குணப்படுத்தப் பார்.
அதிருப்தி இல்லாத திருமண வாழ்க்கை சாத்தியமே இல்லை. நமக்கு மட்டும் தான், பிரச்னை; நாம் அபாக்கியசாலி என சுய இரக்கம் கொள்ளாதே!
வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும், அது உனக்கும், உன் குழந்தைகளுக்கும் சாதகமாய் இருக்கும் வண்ணம் பார். உணர்வுபூர்வமாய் அணுகாமல், அறிவு பூர்வமாக பிரச்னைகளை விவேகமாய் அணுகு!
உன்னுடைய அறப்போராட்டம் வெற்றி பெற, இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்
