PUBLISHED ON : ஏப் 09, 2017

ஏப்., 14 - தமிழ் புத்தாண்டு
தமிழ் ஆண்டுகள், 60; அதில், 31வதாக வரும், ஹேவிளம்பி ஆண்டை பற்றி ஒரு வெண்பா உள்ளது.
ஹேவிளம்பி மாரியற்பம் எங்கும் விலை குறைவாம்
பூமி விளைவது அரிதாம் போர் மிகுதி - சாவதிகம்
ஆகுமே வேந்தர் அநியாயமே புரிவர்
வேகுமே மேதினி தீமேல்...
இதன் பொருள்: ஹேவிளம்பி ஆண்டில் மழை மற்றும் விளைச்சல் குறையும். ஆனாலும், விலைவாசி குறையும். நாட்டுக்கு நாடு சண்டை மூண்டு, உயிர் பலி நிகழும். நாடாள்வோர் அநியாயம் செய்வர்; அக்னி பயம் ஏற்படும்.
இந்த வெண்பாவில் உள்ளதுபடி நடந்தால், நிலைமை என்னாகும் என கவலைப்பட வேண்டாம். காரணம், புதிய ஆண்டின் ராஜா, புதன்; மந்திரி, சுக்கிரன், சேனாதிபதி குரு. புதன் கல்வியறிவை தருபவர்; சுக்கிரன் பொருள் வளம் தருவார்; குரு அமைதியைத் தந்து, நல்வழி காட்டுவார். இவர்களின் ஆதிக்கம் காரணமாக, நல்வழியில் நடக்கும் யாருக்கும், மேற்கண்ட கஷ்டத்தால் பாதிப்பு இருக்காது என்ற விதிவிலக்கும் உண்டு.
புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில், ஒரு மேஜையில் கண்ணாடி வைத்து, அதன்முன் பழ வகைகள், மஞ்சள் நிற பூக்கள், காசுகள் அடங்கிய தாம்பாளத்தை வைக்க வேண்டும். புத்தாண்டு அன்று, காலையில் வீட்டுப் பெரியவர் எழுந்து, இந்த தட்டை பார்க்க வேண்டும். பின், மற்றவர்களை கண்ணைப் பொத்தி அழைத்து வந்து, இந்த தட்டை பார்க்கச் செய்ய வேண்டும். இதற்கு, 'கனி காணுதல்' என்று பெயர். இதை பார்ப்பதால், ஆண்டு முழுவதும் இனிமையான சம்பவங்கள் நிகழும் என்பது நம்பிக்கை.
இந்நாளில், அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமணக்காட்சி தந்த வைபவத்தை தரிசிக்க, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சென்று வரலாம். இமயத்தில், சிவ - பார்வதிக்கு திருமணம் நடந்தது. விழாவுக்கு, உலகமே திரண்டு வந்து விட்டதால், உலகத்தின் சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதை சரிக்கட்ட, அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார், சிவன். தான் அங்கு போய்விட்டால், திருமணத்தை காண முடியாமல் போய்விடுமே என அகத்தியர் வருத்தப்பட, 'திருமணக் காட்சியை சித்திரை முதல் நாளன்று, பொதிகை மலை அடிவாரத்தில் காணலாம்...' என அருள்பாலித்தார், சிவன். அதன்படி, அகத்தியருக்கு திருமணக்காட்சியும் கிடைத்தது.
இந்த அபூர்வ நிகழ்ச்சி, சித்திரை முதல் தேதி, நள்ளிரவில் பாபநாசம், பாபநாசநாதர் கோவிலில் நடக்கும். முன்னதாக சுவாமியும், உலகாம்பிகையும் தெப்பத்தில் பவனி வருவர். தெப்ப உற்சவம் முடிந்ததும், திருமணக்காட்சியை அகத்தியர் காணும் நிகழ்ச்சி நடக்கும்.
சித்திரை முதல் நாள் தீர்த்தமாடலுக் குரியதாகும். அன்று, புனித தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியம் தரும்.
ஹேவிளம்பி புத்தாண்டு அனைவரும் நல்வாழ்வு வாழ கடவுளை வேண்டுவோம்.
தி.செல்லப்பா
