PUBLISHED ON : மே 07, 2017

அன்புள்ள சகோதரிக்கு —
என் வயது, 32; தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் ஆபரேட்டராக பணிபுரிகிறேன். திருமணம் முடிந்து, ஒரு ஆண்டிலேயே விவாகரத்து ஆகி விட்டது.
தற்போது, என் கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரை காதலிக்கிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். ஆனால், அவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.
அவர் மனைவி இவருடன் பேசுவது இல்லை. இவரே சமையல் உட்பட, வீட்டு வேலைகள் அனைத்தும் செய்து, குழந்தைகளையும் ஸ்கூலுக்கு அனுப்பி, வேலைக்கும் வருகிறார். இந்நிலையில், நான் அவருக்கு ஆறுதல் கூற, அதுவே, அவர் மீது காதல் ஏற்பட காரணமும் ஆயிற்று.
இது தவறு என்று தெரிகிறது; ஆனால், என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அவர், தன் அண்ணனிடம் எங்கள் காதலைக் கூற, அவர், எங்கள் வீட்டில் வந்து சண்டை போட்டார்.
இப்போது நான் என்ன செய்வது என்று தெரியவில்லை; எங்கள் வீட்டில் இதைப்பற்றி என்னிடம் கேட்ட போது, 'திருமணம் செய்தால், அவரை தான் செய்வேன்...' என்று கூறி விட்டேன்.
எனக்கு, ஒரு தங்கை, தம்பி உள்ளனர்; இருவருமே படிக்கின்றனர். அவர்களது எதிர்காலம் என்ன ஆகும் என்று கேட்கிறார், என் தந்தை.
எங்கள் வீட்டில் எந்த பிரச்னை என்றாலும், என் அக்கா கணவர் சொல்படி தான் செய்வோம். அவரிடம் நடந்ததை கூறினேன். அவர், 'உன் வாழ்க்கைக்காக அப்பெண்ணின் வாழ்க்கையையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் வீணடிக்காதே...' என்றும், எங்கள் வீட்டு நிலைமையையும் எடுத்துக் கூறினார்.
இதற்கு ஒரு நல்ல தீர்வை எதிர்பார்க்கிறேன். தாங்கள் தரும் தீர்வை, நிச்சயம் கடைப்பிடிப்பேன்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்புள்ள சகோதரிக்கு —
ஏற்கனவே மணமாகி, விவாகரத்து செய்த நீ, இரண்டு குழந்தைகள் உள்ளவரை விரும்புவதாக எழுதியுள்ளாய். அதற்கு, காதல், கருணை என்று நீ, என்ன பெயர் வைத்தாலும், அதை, என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
அந்த மனிதருக்கு மனைவி இருப்பதாகவும், ஆனால், சமையல் செய்வது, குழந்தைகளை கூட்டிச் சென்று, பள்ளிக்கூடத்தில் விடுவது வரை எல்லாவற்றையும் இவர் தான் செய்வதாகவும், மனைவியாகப்பட்டவள் எதுவுமே செய்வதில்லை என்றும் எழுதிஇருக்கிறாயே... இதை எழுதும் போதே, படித்த பெண்ணான உனக்குள், இப்படி, பெண்டாட்டி ஒரு வேலையும் செய்யாமல், கையை கட்டி, ஏன் உட்கார்ந்திருக்கிறாள்... இவர் சொல்வதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்ற கேள்வி எழவில்லையா?
நீ, இவரை மணந்தால், அவருக்கு சமைத்து போடுவதுடன், அவரது குழந்தைகளையும் கவனித்துக் கொள்வாயா? அவள், இவருடன் பேசுவது கிடையாது என்றால் ஏன்? இரண்டு பிள்ளை பெறும் வரையில், இருவரும் சண்டை போட்டாலும், படுக்கையறையில் சமாதானமாக போயிருக்கின்றனர் என்று தானே அர்த்தம்!
முதல் மனைவியையும், குழந்தைகளையும் விரட்டி விட்டு, அந்த புறாக் கூட்டில் நீ வசிக்க போகிறாய் என்றால், நாளைக்கு உனக்கும் இதே நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?
ஒரே கூரையின் கீழ், இரண்டு பேரும் வாழ ஆரம்பித்து, முதல் மனைவிக்கும், அவருக்கும் இடையில் ஏற்பட்ட அதே பிரச்னை உங்களிருவருக்கும் ஏற்பட்டால், என்ன செய்வாய்... விலகி விடுவாயா?
ஏற்கனவே, ஒருமுறை விவாகரத்து பெற்றவள் நீ... இதுவரையில், உன்னளவில் ஏதும் குற்றமில்லை என்றே வைத்துக் கொண்டாலும், இரண்டாம் முறையும், மண வாழ்வில் விரிசல் ஏற்பட்டால், உலகம், யார் மீது, பழி சுமத்தும்... உன் மீது தானே!
இது எல்லாவற்றையும் விட, உன் அக்கா கணவர் சொல்வதை கேள். அநியாயமாய், ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு சமாதி கட்டி, அச்சமாதியின் மீது, உன் காதல் மாளிகையை எழுப்பினால், அவளது கண்ணீரே, உன்னை சந்தோஷமாய் வாழ அனுமதிக்காது.
ஒரு மனிதனுக்கு, வாழ்க்கை துணை சரியாக அமையவில்லை என்றால், அதற்காக வருத்தப்படலாம்; நல்ல சினேகிதமாக இருந்தால், அந்த தம்பதியை ஒன்றாய் சேர்த்து வைக்கலாம்.
உன் வயசுக்கு, ஏற்கனவே மண வாழ்க்கையில் உனக்கு ஏற்பட்ட அனுபவத்துக்கு, உன் படிப்புக்கு, இன்னும் கொஞ்சம் விவேகமாகவே இருக்கலாம் நீ... அப்படியானால், ஒருமுறை விவாகரத்து பெற்றவள், இன்னொரு திருமணமே செய்யக் கூடாதா என்று கேட்கிறாயா...
இல்லறம் தேவை என்றால், உன்னை போல ஏற்கனவே விவாகரத்து ஆனவரை (கவனி... விவாகரத்து ஆனவரை... உன்னால், அவர் தன் மனைவியை தவிக்க விடக் கூடாது) அல்லது மனைவியை இழந்தவரையோ அல்லது ஊனமுற்றவரையோ மணந்து கொள். உன் வரவு, அவர்களது வாழ்க்கையை மலர செய்யட்டும்.
இத்தனையும், திருமணம் தேவை என்று நீ நினைத்தால் தான். ஒரு பெண்ணுக்கு, திருமணம் அவசியம் தான்; ஆனால், அதுவே அவளது மொத்த வாழ்வுக்கும் ஏற்ற தீர்வு என்று, சொல்ல மாட்டேன்.
மறுபடியும் சொல்கிறேன்...
அடுத்தவர் பசிக்காக வைக்கப்பட்ட உணவை திருடி தின்பது, இரவல் சட்டையை, உரிமையாளருக்கு தெரியாமல் மாட்டி திரிவது, ஏற்கனவே, ஒரு பெண்ணின் கணவனாக இருப்பவனை இச்சிப்பது, இது அத்தனையுமே கடைந்தெடுத்த குற்றம்; இவற்றுக்கு மன்னிப்பே கிடையாது.
உன் சொந்த காலில் நின்று, தம்பி, தங்கையின் வாழ்வை வளமாக்கு; உன் வாழ்வு, தானாவே வளமாகும்!
- என்றென்றும், தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்!
