தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அம்பிகையை சரணடைந்தால்...

அம்பிகையை சரணடைந்தால்...

அம்பிகையை சரணடைந்தால்...


PUBLISHED ON : மே 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சமயம், உமாதேவியை, 'காளி...' என அழைத்தார், சிவபெருமான். காளி என்றால், கருமைநிறம் உடையவள் என்பது பொருள்.

'சுவாமி... தங்களால் காளி என அழைக்கப்பட்ட நான், தங்களை குறித்து தவமிருந்து, பொன்னிறத்தை அடைவேன்...' எனக் கூறி, தவம் செய்ய சென்றாள், அம்பிகை.

இமயமலையில் இருந்த ஓர் ஏரிக்கரையில், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தவம் செய்யத் துவங்கினாள் காளி. அங்கே, வேங்கை புலி ஒன்று, கால்களை கூட அசைக்க முடியாத நிலையில், கடும் பசியுடன் படுத்திருந்தது.

இதைக் கண்டதும், அன்னையின் உள்ளத்தில், கனிவு பொங்க, அப்புலிக்கு அருளினாள். அடுத்த நொடி, அதனுடைய பிணி மற்றும் குரூர குணங்களும் நீங்க, சாதுவான விலங்காகி, பார்வதி தேவியின் திருவடிகளை வணங்கி, அவள் காலடிலேயே தங்கி விட்டது.

இந்நிலையில், ஒரு பெண்ணால் மட்டுமே தங்களுக்கு அழிவு ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்த சும்ப, நிசும்பர்களின் கொடுமைகளால் மக்கள் துன்பமடைய, அவர்களை வதம் செய்வதற்காக, அம்பிகையை நாடி வந்தார், பிரம்மா.

அங்கே, அன்னையின் காலடியில் அமர்ந்திருந்த வேங்கை புலியை பார்த்தவர், அதுகுறித்து அம்பிகையிடம் கேட்க, 'நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இப்புலிக்கு, அருள் புரிந்தேன். அதனால், இது, என்னை விட்டு விலகாமல், ஒரு காவலனைப் போல் இருந்து வருகிறது...' என்றார்.

'சக உயிர்களை கொன்று புசிக்கும் கொடிய குணம் கொண்ட இது, இன்னும் என்னென்ன தீமைகளை செய்யுமோ...' என்றார், பிரம்மா.

'பிரம்மதேவா... நன்மை, தீமை என்பது உயிர்களின் இயல்பு அல்ல; அது, கர்மாவின் செயல். தன் கர்ம வினையால், கொடிய விலங்காக பிறந்து விட்ட இது, துயரத்தில் சரணாகதி அடையும் போது, அதற்கு அருள் செய்வதே படைப்பின் தர்மம்...' என்றாள்.

அதைக்கேட்ட பிரம்மா, 'தாயே... உயிர்களின் ஜீவ சக்தியாகிய தங்களின் அருளை புரிந்து கொள்ளாத என்னை மன்னித்தருள வேண்டும். உன்னருள் இருந்தால், துரும்பும் பிரம்ம பதவியை அடையும்; உன் திருவருள் இல்லையானால், பிரம்மனான நானும் துரும்பாவேன்...' என சொல்லி, அன்னையை துதித்து, தான் வந்த விஷயத்தைக் கூறினார்.

அன்னையின் மேனியில் இருந்த கறுப்பு நிறம் உதிர, அதிலிருந்து துர்க்கை வெளிப்பட்டாள்.

சும்ப, நிசும்பர்களின் வதத்திற்கு ஆசி கூறிய அம்பிகை, வேங்கை புலியுடன், சிவபெருமானிடம் திரும்பி, 'பெருமானே...

இப்புலிக்கு, தாங்கள் அருள வேண்டும். இதுவும், உங்களின் கண நாதனாக, நம் நந்தியோடு, வாயிற்படிக் காவல் கொள்ளுமாறு அருள வேண்டும்...' என வேண்டினாள்.

அவ்வாறே அருள் புரிந்தார் சிவபெருமான். அம்பிகையால் அழைத்து வரப்பட்ட புலி, 'சோம நந்தி' எனும் திருநாமம் தாங்கி, தங்கப்பிரம்பு மற்றும் வாள் ஏந்தி, நந்தியுடன் சேர்ந்து, அதிகாரம் செலுத்தும் பதவியை வகிக்க துவங்கியது.

புலி என்பது, மூர்க்க குணத்தின் வெளிப்பாடு. மூர்க்க குணம், நம்மை வீழ்த்தி, செயலற்றதாக ஆக்கி விடும். அம்பிகையை சரணடைந்தால், அவர், நம் மூர்க்க குணத்தை போக்கி, நமக்கு ஆற்றல் தந்து, அருள் புரிவார் என்பதையே, சோம நந்தியின் கதை, நமக்கு உணர்த்துகிறது.

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

மொட்டை போடும் போது கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன?

குழந்தைக்கு சோறூட்டும் சடங்கிற்கு பின், மொட்டை போட வேண்டும். அதன்பின், தந்தை, குழந்தையின் தலையில், சந்தனத்தால், 'ஸ்வஸ்தி' என்றெழுதி, நெற்றியில் சந்தன திலகமிட வேண்டும். 'ஸ்வஸ்தி' என்றால், 'இறைவன் சித்தமும், தன் சித்தமும் ஒன்றாக இருக்க வேண்டும்...' என்று பொருள்.

இதனால், குழந்தைக்கு, தெளிந்த புத்தி, சாந்தம் மற்றும் பரிசுத்தமும் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us