PUBLISHED ON : மே 07, 2017

1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத படம்!
மூத்த மலையாள எழுத்தாளர், என்.டி.வாசுதேவநாயர், மகாபாரதத்தை தழுவி எழுதிய, 'இரண்டாம் ஊழல்' என்ற கதையை, திரைப் படமாக, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என, ஐந்து மொழிகளில் எடுக்கின்றனர். மகாபாரத பீமன் கதாபாத்திரத்திற்கு, முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள இப்படத்தில், பீமனாக, மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதோடு, அப்படத்திற்கு, மகாபாரதா - ரெண்டாம் ஊழல் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில், அமிதாப்பச்சனை நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடக்கிறது.
— சினிமா பொன்னையா
இளையராஜாவுக்கு பாராட்டு விழா!
அன்னக்கிளி படம் துவங்கி, பாலாவின், தாரைத்தப்பட்டை படத்தோடு, ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து விட்டார், இளையராஜா. மேலும், பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவருக்கு, தமிழ் திரையுலகம் சார்பில், பாராட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்துள்ளார், நடிகர் விஷால். சென்னையில் நடக்கும் இவ்விழாவில், இந்திய சினிமா உலகினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
— சி.பொ.,
மீண்டும் நாயகியான இனியா!
வாகை சூடவா பட நாயகி இனியா, தற்போது, தமிழில் பொட்டு படத்தில் நடித்து வருபவர், மலையாளத்தில், சமுத்திரக்கனி இயக்கும், ஆகாச மிட்டாய் என்ற படத்தில், ஜெயராமிற்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபகாலமாக, தமிழைப் போலவே, மலையாளத்திலும், 'கேரக்டர்' வேடங்களிலேயே நடித்து வந்த இனியாவுக்கு, இப்படத்தில் நடிக்க இருந்த வரலட்சுமி விலகியதை அடுத்து, அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்!
— எலீசா
போர்க்கொடி தூக்கிய நடிகை!
கமலுடன், ஆளவந்தான் படத்தில், நாயகியாக நடித்தவர், ரவீணா. பிரபல இந்தி நடிகையான இவர், தற்போது, மதர் என்ற படத்தில் நடிக்கிறார். பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தமான இப்படத்திற்கு, எந்த சான்றிதழும் வழங்க முடியாது என்று, சென்சார் போர்டு மறுத்து விட்டது. இதனால், கடும் கோபத்திற்கு ஆளான ரவீணா, 'சென்சார் போர்டின் சட்டதிட்டங்கள் பழமையாக உள்ளன; இன்றைய காலகட்டத்திற் கேற்ப, சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்...' என்று, போர்க்கொடி தூக்கியுள்ளார்.
—சினிமா பொன்னையா.
கறுப்பு பூனை!
* ரோஜா நடிகர், இளவட்ட நடிகைகளிடம், அளவுக்கதிகமாக, கொஞ்சி குலாவ துவங்கியுள்ளார். இச்சேதியை, அவரது வீட்டு அம்மணியின் காதுகளில், யாரோ ஓதி விட, தற்போது,அவர், திடீர் திடீரென்று 'ஸ்பாட்'டுகளுக்கு, 'விசிட்' அடித்து வருகிறார். இதனால், கடும் கோபத்தில் இருக்கும் நடிகர், தான் கடலை போடும் விஷயத்தை, வீடு வரை கொண்டு சேர்த்த, அந்த தூது நபரை தேடி வருகிறார்.
* தன் மூன்றாவது காதலருடன், அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வரும் தாரா நடிகை, இயக்குனரை, தன் அன்புப் பிடியில் இருந்து விடுவித்து, பழைய நட்பு வட்டாரத்திற்கு, தூது விடுகிறார். ஆனால், அம்மணியால் மனசு நொந்து போன சிலர், அவரது அழைப்பை அலட்சியப்படுத்திய போதும், பிரியாணி நடிகர் மட்டும் முதல் ஆளாக, அம்மணியின் பாசறைக்குள், 'என்ட்ரி' கொடுத்துள்ளார்.
சினி துளிகள்!
*சதுரங்கவேட்டை இரண்டாம் பாகத்தில், அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார், த்ரிஷா.
* கொலையுதிர் காலம் படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுக்கிறார் நயன்தாரா.
* டார்ச்லைட் என்ற படத்தில், மாஜி கதாநாயகிகளான ஸ்ரேயா - சதா இருவரும், கதையின் நாயகிகளாக நடிக்கின்றனர்.
* வணங்காமுடி படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சிம்ரன்.
* சசிகுமாரின், கொடிவீரன் படத்தில், அவரது தங்கையாக நடிக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவ்ளோதான்!
