தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு மகளே —

என்னை விட, வயதில் சிறியவளாக இருப்பாய் என நினைத்து, மகள் என்று அழைக்கிறேன்; என் வயது, 64. என் உறவினரின், 90 வயது பாட்டி, ஆறு மாதம் படுத்த படுக்கையாகி, முதுகில் புண் வந்து, மிகவும் வேதனையை அனுபவித்து, இறந்தார். அவரது அக்காவோ, 15 ஆண்டுகள் படுக்கையில் கிடந்து, கடந்து ஆறு மாதங்களாக பேச்சு மற்றும் அசைவு இன்றி, கால்களில் புண்ணாகி, 95 வயதில் இறந்தார்.

இதையெல்லாம் பார்த்து, நானும், என், 84 வயதான அம்மாவும் மனதளவில் மிகவும் பயந்து, மரணம் எப்படி வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.

முதுமையுடன், நோய், தள்ளாமை, மறதி, விரக்தி எல்லாம் வந்து, பெற்ற குழந்தைகளுக்கே பாரமாக, பிறர் தயவை எதிர்பார்த்து வாழ வேண்டியுள்ளதே என்ற இயலாமையில், வாழ்ந்து வருகிறோம். சிலசமயம், 'இனி ஏன் வாழ வேண்டும்...' என, மனம் எண்ணுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது?

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, 69வது வயதில் இறந்தார், என் கணவர். 90 வயது மாமனாரை நான் தான் பார்த்துக் கொண்டேன். என் கணவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் தான், அவர் போய் சேர்ந்தார்.

எனக்கு மூன்று குழந்தைகள்; எல்லாரும் படித்து, நல்ல நிலையில் உள்ளனர். என்னை ஒரு குறையும் இல்லாமல், நன்றாகத்தான் பார்த்துக் கொள்கின்றனர். ஆனாலும், அவர்களுக்கு எங்களால் வீண் அலைச்சல், டென்ஷன், பணம் மற்றும்

நேர விரயம்!

வயது ஆக ஆக கவலை, பயம், துக்கம், பதற்றம்... குழந்தைகள் எல்லாம், நம் கண் முன், நன்றாக இருக்கும் போதே, போய் சேர்ந்து விட வேண்டும் என்பதே என் பிரார்த்தனை; ஆசை. என் கணவரின் இறப்பே, எனக்கும், என் தாய்க்கும் பேரிடியாகி விட்டது. 'உனக்கு முன் நான் போய் சேரணும்டி; இன்னும் எனக்கு வேளை வரவில்லையே...' என்று புலம்புகிறார், என் தாய்.

பிள்ளைகளுடன் வாழும் என் போன்றோருக்கே, இத்தனை வேதனை, மனக்கஷ்டம் என்றால், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களின் மன நிலை எப்படி இருக்கும்... மரணத்தை தழுவ விருப்பப்படும் முதியவர்களை கருணைக் கொலை செய்து விடலாமே!

இதில், உங்கள் அபிப்ராயம் என்ன என்பதை வெளியிட்டால், என் போன்ற முதியோர்களுக்கு மன ஆறுதலும், தெம்பும் தரும். தங்கள் பதிலை, ஆவலுடன் எதிர்பார்க்கும் பேதை பெண்மணி!

அன்புள்ள அம்மா —

உங்கள் கடிதத்தில் இருந்த உண்மையும், சத்தியமும் என் முகத்தில் அறைந்தன.

உங்கள் உறவினர் பாட்டி, 90 வயதிலும், அவரது அக்கா, 95 வயதிலும், உங்கள் கணவர், 69 வயதிலும் மற்றும் உங்களின் மாமனார், 90 வயதிலும் இறந்தது, நீண்ட நாள் வாழும் தன்மையை, அவர்கள் மரபணுவில் பெற்றிருக்கின்றனர் என்பது ஊர்ஜிதமாகிறது. 67 வயதான நீங்களும், 84 வயதான உங்கள் தாயாரும் உயிர் வாழ்வது, இந்த மரபணுவின் தன்மையால் தான்.

வயது ஆக ஆக, நோய் பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு. உணவுக் கட்டுபாடு, மருந்து எடுத்துக் கொள்ளல், நடை

பயிற்சி, மன திடம் மற்றும் இளைய தலைமுறையின் அனுசரணையான

கவனிப்பு மூலம், நோய்களின் பாதிப்பை, வெகுவாக குறைக்கலாம்.

முதியவர்கள், ஒரு சமுதாயத்தின் சொத்து; அவர்களின் அனுபவ அறிவும், வாழ்க்கை கல்வியும், இளைய தலைமுறைக்கு உதவவே செய்யும்; ஒரு சமுதாயத்தில், ஆண்களோ, பெண்களோ நீண்ட ஆயுளை பெற்றிருப்பது, அச்சமுதாயத்தை மகிமைப்படுத்தும் விஷயம்.

ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாளின் கடைசி நொடி வரை வாழ, அடிப்படை உரிமை இருக்கிறது. ஒரு பச்சை இலை, பழுத்த இலையாகி உதிரும் வரை காத்திருக்க வேண்டும்; துரட்டி வைத்து, பாதி பழுத்த இலையை பறிப்பது, மனிதாபிமானமற்ற செயல். கருணைக்கொலை என்பது, எனக்கு உடன்பாடான விஷயமில்லை.

இன்று, நீங்கள், விஷ ஊசி போட்டு இறக்க விரும்பலாம். நாளை, பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பேரனின் திருமணம் வரை வாழ விரும்பலாம். மனித மனம், நொடிக்கு ஒரு விதமாய் யோசிக்கும்.

குழந்தைகளுக்கு, பாரமாக இருக்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சி அவசியமற்றது. இன்று உங்களை அவர்கள் கவனித்தால், நாளை, அவர்களை, அவர்களின் பிள்ளைகள் கவனிக்கும்; இது ஒரு சுழற்சி முறை. வயோதிகம் என்பது, இரண்டாம் குழந்தை பருவம். ஒரு மனிதனின் ஆயுட்காலம் முழுமையடைவதை, அந்த மனிதனே கண்டு உணர்வதே வயோதிகம்.

இருக்கும் வரை, நாமும் சந்தோஷமாக இருந்து, பிறரையும் சந்தோஷப்படுத்துவோம். அருகிலுள்ள ஆன்மிக தலங்களுக்கு செல்லுங்கள்; உணவு கட்டுப்பாட்டுடன், உங்ளுக்கு பிடித்த ருசியான உணவை சமைத்து சாப்பிடுங்கள். இளைய தலைமுறையுடன் கூடிக் களியுங்கள். மாதம், ஒரு முதியோர் இல்லம் சென்று, அங்குள்ள முதியவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். முதுமையை வெல்லும் குதூகல முதியோர்களை, முன்மாதிரியாக கொள்ளுங்கள்.

உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us