தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நான் ஏன் பிறந்தேன்! - எம்ஜிஆர். (23)

நான் ஏன் பிறந்தேன்! - எம்ஜிஆர். (23)

நான் ஏன் பிறந்தேன்! - எம்ஜிஆர். (23)


PUBLISHED ON : ஜூன் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.

நாடகத்தில், உத்திரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த போது, 'பாம்பு... பாம்பு...' என்று அலறியபடி அர்ச்சுனன் மீது விழ, என் நடிப்பை ரசித்தனர், மக்கள். 'பையன் பரவாயில்லையே...' என்று பாராட்டினர், சக நடிகர்கள்.

ஆனால், உண்மையில், என்ன நடந்தது தெரியுமா...

பாலகிருஷ்ணன் என்ற பையன், எனக்கு உடைகள் அணிவித்து, உதவி செய்தான் என்று சொன்னேன் அல்லவா... அவன், வேண்டுமென்றே, இடது காலுக்குரிய இரண்டு வெவ்வேறு அளவுடைய ஷூவை எனக்கு மாட்டி, மேடைக்கு அனுப்பி விட்டான். நான், கீழே விழ வேண்டும் என்பதற்காக, அவன் செய்த சூழ்ச்சி இது; அதுவே, எனக்கு புகழை தந்து விட்டது.

தன் சூழ்ச்சி தோற்றது குறித்து, பாலகிருஷ்ணனுக்கு பெரிய ஏமாற்றம்!

இந்நிகழ்ச்சிக்கு பின், என்னைப் பற்றி, மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு, நான் உயர்ந்தேன்.

அப்போதெல்லாம், கம்பெனியில் அடிக்கடி, 'ராமாயணம்' நாடகம் நடக்கும்; ஒருமுறை, 'ராமாயணம்' நாடகம் போடும் போது, அதில், அகத்தியர் வேடம் போடும் பையன், ஊருக்கு போனவன், திரும்பி வரவில்லை; வருவானோ, மாட்டானா என்பதும் தெரியவில்லை. இதற்காக, நாடகத்தை நிறுத்த முடியுமா... அந்த கதாபாத்திரத்திற்கான பாடமோ பெரியது; அதுவும், கடினமான தமிழ் பதங்களை கொண்டது.

என்னிடம் அப்பாடத்தை கொடுத்து படிக்கச் சொன்னார், காளி என்.ரத்தினம்.

மறுநாள் ஒத்திகையின் போது, நான், வசனத்தை ஒழுங்காக ஒப்பித்ததைப் பார்த்து, கம்பெனியிலிருந்த எல்லாரும் வியந்து பாராட்டினர்.

இதன் விளைவாக, நாடகத்தில் உடன் நடிப்போரின் வசனங்களையும் மனனம் செய்ய ஆரம்பித்தேன். 'செகண்ட்' ராஜபார்ட்டாக நடிக்கும் சிறப்பு பெற்றிருந்த, பி.யு.சின்னப்பா, முதன்முதலாக, 'குலேபகாவலி' நாடகத்தில், தாசன் முல்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதிலும், காளி என்.ரத்தினத்திற்கு பங்குண்டு!

பின்னாளில், இந்துஸ்தானி மெட்டுகளில் பாடி, மக்களின் உள்ளங்களை கவர்ந்த, பி.ஜி.வெங்கடேசனும், அந்த ஊரில், அதே நாடகத்தில், முதன்முதலில், கதாநாயகி லக்பேஷ்வா என்ற வேடத்தை ஏற்று, நடித்தார்.

இந்நாடகம் நடைபெறுவதற்கு, இரண்டொரு நாட்களுக்கு முன், ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. பி.யு.சின்னப்பாவின் தந்தையான உலகநாதம் பிள்ளை, அப்போது கம்பெனிக்கு வந்திருந்தார்; அவரும் பிரபல நாடக நடிகர்.

நாடக அரங்கேற்றத்தின் போது, கம்பெனியின் கட்டுப்பாட்டை மீறி, ஒத்திகையில் பேசாத உரையாடல்களை எல்லாம் மேடையில் பேசியும், பாடல்களை பாடியும் நடித்தார், சின்னப்பா.

பி.ஜி.வெங்கடேசனுக்கோ, அதுபோல் புதிய பாடல்கள், உரையாடல்களைப் பற்றி தெரியாது; அதனால், வருத்தத்தோடு நாடக உள்அரங்கிற்குள் திரும்பி வந்து விட்டார்.

சின்னப்பாவிற்கு, எப்படி அவையெல்லாம் தெரிந்தன என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டனர்.

உலகநாதம் பிள்ளையே, அவற்றை சொல்லித் தந்துள்ளார் என்பது, பின்னால் தான் தெரிந்தது.

அதுமுதல், கம்பெனியில், கட்டுப்பாடு மேலும் அதிகமாகி விட்டது.

அதுவே, என்னுள் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. அது, யார் நடித்தாலும், பாடினாலும், பேசினாலும், அவற்றை மனப்பாடம் செய்யவும், நடிப்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளவும் முற்பட்டேன்.

இதன் விளைவாக, வெகு விரைவிலேயே, கம்பெனியில் நடிக்கப்பட்ட, எல்லா நாடக கதாபாத்திரங்களின் பாடங்களும், எனக்கு மனப்பாடமாகி விட்டன. இதன் காரணமாகவே, நாகப்பட்டினத்தில், எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கவும் செய்தது.

என் மனதில் இடம் பெற்றிருந்த ஒரு கதாபாத்திரத்தை, நடிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் விட்டு விடுவேனா... பெரும் மகிழ்ச்சியோடு நடித்தேன்; கிடைத்தது முழு வெற்றி!

அதோடு, 'எந்த வேடத்தையும், எனக்கு கொடுக்கலாம்...' என்ற நம்பிக்கையும், மற்றவர்களுக்கு உண்டானது.

அதன் விளைவு, எனக்கு, மாத சம்பளம், ஐந்து ரூபாய் என, அறிவிக்கப்பட்டது. அத்துடன், என் மனதில் இன்னொரு மாற்றமும் உண்டானது.

சில சமயம், நல்ல உடைகள் கூட உடுத்திக்கொள்ள முடிவதில்லை; மற்ற பிள்ளைகள் நல்ல ஆடைகள் அணிவதை பார்க்கும் போது, எனக்கும் அதுபோல் அணிய ஆசை எழும். அதன் காரணமாக, பெரிய வேடத்தில் நடித்து, அதிக சம்பளம் பெற, மனம் நாட்டம் கொண்டது.

பரதன் வேடத்தில், நடித்து கொண்டிருந்தார், பி.யு.சின்னப்பா; எனக்கு சத்துருக்னன் வேடம் கிடைத்திருந்ததால், அவர் நடிப்பதை, நன்கு கவனித்து, கற்றுக் கொள்ள, மற்ற பையன்களை விட, எனக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது.

இதேபோல், ராமராக நடித்த கே.பி.கேசவனின் நடிப்பையும், உற்று கவனிப்பேன்.

சோக காட்சிகளில், பிரமாதமாக நடிப்பார், கேசவன். அவருக்கு, பாடும் ஞானம் இருந்தாலும், குரல் அதிகமாக ஒத்துழைக்காது. ஆனாலும், ராமரும், பரதனும் பிரிந்து செல்லும் கட்டத்தில், பாடியழுது, மக்களின் கைத்தட்டலை பெற்று விடுவார்; அக்காட்சியில், சின்னப்பாவும் நன்றாக நடிப்பார்.

காரைக்குடியில், அப்போது கம்பெனியின் நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன. பி.யு. சின்னப்பாவை, வேறு கம்பெனிக்கு அழைக்கின்றனர் என்றும், அதிக சம்பளம் கொடுப்பதாய் கூறியதாகவும், ஒருவேளை, அவர் அங்கு போய் விடலாம் என்றும் பேசப்பட்டது.

அவ்வாறே, காரைக்குடியிலிருந்து, திருச்சிக்கு கம்பெனி புறப்பட்ட போது, சின்னப்பாவை ஊருக்கு அழைத்துப் போக வந்தார், உலகநாதம் பிள்ளை.

திருச்சியில், நாடக அரங்கேற்றத்துக்கு முன் கொண்டு வந்து விடுவதாக கூறி, சின்னப்பாவை அழைத்து போய் விட்டார்.

அவர், நாடக அனுபவம் பெற்றவராகையால், அவரிடம் பயமுறுத்தலோ, ஏமாற்றுதலோ செல்லாது. ஆகவே, முதலாளியிலிருந்து, வாத்தியார் வரை எல்லாரும் பேசாதிருந்து விட்டனர். இதனால், 'திருச்சிக்கு சின்னப்பா மீண்டும் வர மாட்டார்...' என்று வெளிப்படையாகவே பேசப்பட்டது.

திருச்சிக்கு வந்து சேர்ந்ததும், ஒருவேளை சின்னப்பா வராவிட்டால் என்ன செய்வது என்று, மாற்று ஏற்பாடாக, பரதன் கதாபாத்திரத்திற்கான பாடத்தை,

கே.ஆர்.ராமசாமிக்கு சொல்லிக் கொடுத்தார், காளி என்.ரத்தினம்.

என் முக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். பரதன் வேடத்தை ஏற்று, பரதன், கைகேயியை ஏசும் வசனங்களில் பாதியை மனப்பாடம் செய்து விட்டார், ராமசாமி.

நாடகம் நடைபெற இரண்டு நாட்கள் தான் இருந்தன; சின்னப்பாவை காணோம்; முதலாளிக்கோ கவலை அதிகமாயிற்று. அடுத்த நாளும் வந்து விட்டது. மறுநாள் நாடகம் நடத்தியே ஆக வேண்டும். கே.ஆர்.ராமசாமியோ, இன்னும் பரதன் கதாபத்திரத்திற்கான வசனத்தை முழுவதுமாக மனப்பாடம் செய்யவில்லை.

காளி என்.ரத்தினத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாடகத்தன்று, உலகநாதம் பிள்ளையும், பி.யு.சின்னப்பாவும் வந்து சேர்ந்தனர்; எல்லாருக்கும் ஒரே திகைப்பு.

கம்பெனி முதலாளி, ரத்தினத்தை அழைத்து, ராமசாமியிடமிருந்து பரதன் பாட புத்தகத்தை வாங்கி வைக்கும்படியும், சின்னப்பாவுக்கு எந்த விவரமும் தெரியாமல் கவனித்துக் கொள்ளும்படியும் சொல்லி விட்டார்.

ராமசாமிக்கோ உள்ளூர ஆத்திரம்!

அவராக, தனக்கு வேடம் வேண்டுமென்று கேட்கவில்லை. கம்பெனியாரே கொடுத்த பின், அதை முழுவதும் மனப்பாடம் செய்ய கூட விடாமல், தடுத்து விட்டனரே என்று மன வருத்தம்.

திருச்சியில் நாடகங்கள் முடிந்து, பாலக்காட்டுக்கு புறப்பட்டோம். இங்கும், நாடகங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. இங்கே, என்னை வளர்த்த வேலு நாயரின் வீடு இருந்தது; நாடகம் முடிந்ததும், அவர் வீட்டுக்கு போய் விடுவேன்.

நாடகம் துவங்கி, ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்கு பின், ஒருநாள், சீன் வேலை செய்யும் பரமேஸ்வரன் என்பவர், என்னை தேடி வந்தார். காளி என். ரத்தினம், என்னை அழைத்து வர சொன்னதாக சொல்லி, சைக்கிளில் என்னை அழைத்து போனார்.

தொடரும்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us