தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது, 23; ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நடுத்தர குடும்பம். என் பெற்றோர், சிறு சிறு விஷயங்களுக்கு கூட சண்டையிட்டு, ஊர்க்கூட்டம் வரை செல்வது வழக்கம்; இது, எனக்குள் மிகப் பெரிய மனப் பாதிப்பை ஏற்படுத்தியது. இவர்களால், என் தம்பியும், ரவுடியாகி விட்டான். அவன் திருடி வந்தால் கண்டிக்க மாட்டார்கள். இதனால், பள்ளிப்பருவத்திலேயே, பல்வேறு தீய பழக்கங்களை கற்று விட்டான்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக வேறு ஜாதியை சேர்ந்தவரை காதலித்து வருகிறேன். என்னவரும் கஷ்டப்பட்டு படித்தவர்; அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்தவர். எவ்வித கெட்ட பழக்கங்கள் இன்றி, பொறுப்பாக இருந்தது, என்னை மிகவும் ஈர்த்தது. தற்போது, அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் காதல் விஷயத்தை தந்தையிடம் தெரிவித்தேன்.

மிகவும் உடைந்து விட்டார், என் தந்தை. 'உன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்; ஏமாற்றி விட்டாயே...' என்று அழுதார். பின், 'அவனை கொலை செய்ய போகிறேன். நீ செத்தாலும் பரவாயில்லை; அவனை திருமணம் செய்ய விட மாட்டேன்...' என்கிறார்.

என் காதலை, தந்தையிடம் தைரியமாக சொன்னதற்கு காரணமே, அவரும் ஒரு பெண்ணை காதலித்து, திருமணம் செய்து, குழந்தையுடன் கை விட்டு, என் அம்மாவை திருமணம் செய்து, கஷ்டத்தை அனுபவிப்பவர் என்பதால் தான்.

ஆனால், அவர் என் காதலை எதிர்ப்பதற்கு காரணம், என் காதலர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதாலேயே!

என் தந்தையை மன வருத்தம் அடையச் செய்யும் காதல் வேண்டாம் என்று நினைக்கும் போதெல்லாம், என் பெற்றோரின் சண்டையும், அவர்களின் போலியான வாழ்க்கையும் பார்த்துப் பார்த்தே, என் காதலில் உறுதியாகி விட்டேன். இவர்களை போல் இல்லாமல், சந்தோஷமாக, உண்மையான அன்புடன் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்னவர் வீட்டில் சம்மதித்து விட்டனர். நானும், அவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், என் பெற்றோரை அவமானப்படுத்தி, ஓடிப்போய் திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை.

என் தந்தையோ, 'திருமணம் செய்து கொடுத்தால், கூட்டி கொடுத்து விட்டேன் என, ஊர் பேசும். நீ தற்கொலை செய்தால் கூட, வயித்துல வந்துருச்சு; அதான் செத்துப் போயிட்டா என்பர்...' என, ஊரை பற்றியே கவலைப்படுகிறார். என் அம்மா சில நேரம் திட்டுகிறார்; சில சமயம், 'உன் கூட சேர்ந்தவ எல்லாம் குழந்தையோட இருக்கா; நீ இப்படி உட்கார்ந்திருக்க...' என்பார்.

இந்த நான்கு ஆண்டுகளாக, நாங்கள் கண்ணியமாகத்தான் பழகி வருகிறோம். எனக்கு கர்ப்பப் பை பிரச்னை உள்ளது. இது என்னவருக்கு தெரியும். 'பரவாயில்லை; டிரீட்மென்ட் எடுப்போம்...' என்கிறார்.

என் அப்பா மாறவே மாட்டார்; பெற்றோருக்காக காதலை விடுவதா, காதலுக்காக, பெற்றோரை விடுவதா என்று தெரியாமல் தவிக்கிறேன். என் தந்தையோ, 'சாகப் போகிறேன்; அதற்கு முன் அவனை கொல்லப் போகிறேன்...' என்கிறார். என்னவரோ, 'நம்ப வைச்சு ஏமாத்த பார்க்கிறாயா...' என்கிறார்.

என் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனக்கு நல்லதொரு ஆலோசனை சொல்லுங்கள்.

இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

நம் நாட்டில் வெற்றி பெறாத காதல் கதைகள் ஏராளம்; பெற்றோருக்காக, பெரும்பாலான இந்தியப் பெண்கள், தங்கள் காதலை தியாகம் செய்கின்றனர். காதல், எல்லா பெற்றோருக்குமே கெட்ட வார்த்தை; ஒவ்வாமையை ஏற்படுத்த கூடிய விஷயம் தான். இதில், உன் தந்தை, வேறு ஜாதி ஆணை காதலிக்கும் உனக்கு எதிராய் இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

உடனடியாக உனக்கு வரன் பார்த்து, கட்டாய திருமணம் செய்யும் எண்ணத்தில், உன் பெற்றோர் இல்லை. அதனால், உன் தந்தையோ, தாயோ வாய் விட்டு, மனம் விட்டு புலம்பட்டும் விடு. நீயும், உன் காதலனும் நைச்சியமாக திட்டமிடுங்கள். உன் காதலன் வேலைக்கு போகட்டும்; இடைப்பட்ட காலத்தில், நீ மகப்பேறு மருத்துவரை அணுகி, கர்ப்பப் பை பிரச்னையை குணமாக்கு. காதலனுடனான தகவல் தொடர்பை சீராக வை. உன் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரின் குணங்களை வெறுப்பதற்கு பதில், அவர்களை நல்வழிப்படுத்து.

ஆணவக் கொலை நடக்கக் கூடும் என நினைத்தால், மிக ஜாக்கிரதையாக, அதை மோப்பம் பிடித்து, தவிர். பொதுவாக காதல் திருமணம் செய்வோர், சில, பல விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கணவனுக்கு தெரியாமல், பெற்றோருடன் மொபைல் போனில் பேசக் கூடாது; ஆசை வார்த்தை கூறி, தனியாக அழைத்தால், பெற்றோர் வீட்டுக்கு போய் விடக் கூடாது.

பிறர் கண்களை உறுத்தும் வண்ணம், தாக்குதலுக்கு வழி வகுக்கும் வகையில், பொது இடங்களில் சுற்றக்கூடாது. தனிக்குடித்தனம் போகும் காதலர்கள், அற்ப விஷயங்களுக்கு சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு குழந்தை பிறந்தால், இரு தரப்பும் ராசி ஆகி விடுவர் என, தப்புக்கணக்கு போடக்கூடாது.

திருமணமான முதல் ஐந்து ஆண்டு காலம் மிக ஆபத்தானது. அதை, சாதுர்யமாக ஓட்டி விட்டால் போதும்; அதன்பின், ஆணவக் கொலைகள் நடப்பதற்கான சாத்தியம் குறைந்து விடும்.

எனவே, நீ, உன் பெற்றோருக்காக காதலை கை கழுவ தேவையில்லை. காதலுக்காக, பெற்றோரை தற்காலிகமாக பிரி. ஓடிப்போவது என்கிற பதப்பிரயோகம் தேவையில்லை. 'திருமண வயதை தாண்டிய ஒரு ஆணும், பெண்ணும் கண்ணியமான வாழ்க்கை வாழ, பதிவு திருமணம் செய்ய போகிறோம்...' என, சொல்.

காதலில் ஜெயிப்பது முக்கியமல்ல; திருமண வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். அதுதான், காதலுக்கு நீயும், உன் காதலனும் செய்யும் மரியாதை!

உன் திருமணத்துக்கு என் நல்வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us