PUBLISHED ON : ஜூலை 09, 2017

ஜூலை 14 - சிவானந்தர் முக்தி தினம்
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை என்ற ஊரில் வசித்த அப்பைய தீட்சிதர் என்ற வேத பண்டிதரின் பரம்பரையில் வந்த வெங்கு ஐயர் - பார்வதி தம்பதிக்கு, செப்., 8, 1887ல் பிறந்தார், சுவாமி சிவானந்தர். இவருக்கு, பெற்றோர் இட்ட பெயர் குப்புசுவாமி.
இளமையிலேயே சேவை மனப்பான்மையுடன் திகழ்ந்த இவர், மருத்துவம் படித்தார். மலேசியாவிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் படும் பாட்டை கேள்விப்பட்டவர், அங்கு சென்று வைத்தியம் செய்தார். பணம் உள்ளவர்களிடம் கட்டணம் வசூலித்து, அதை, ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்தினார்.
இந்நிலையில், அவரது மனதில் துறவு எண்ணம் ஏற்பட, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் அங்குள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, ஒரு சட்டை, வேட்டியுடன், 1923ல் இந்தியாவிற்கு திரும்பினார். பின், காசி சென்று, கிழிந்த உடையுடன் பிச்சை எடுத்து, சாப்பிட்டார்; சத்திரத்து திண்ணையில் தங்கினார்.
இதையடுத்து, மஹாராஷ்டிரா சென்ற அவருக்கு, போஸ்ட் மாஸ்டர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர், குப்புசாமியின் பெருமையை உணர்ந்து, அவரை ரிஷிகேஷ் செல்லும்படி அறிவுறுத்த, அவ்வாறே ரிஷிகேஷ் சென்று, சுவாமி விசுவானந்தாவை சந்தித்தார். அவரை சீடராக ஏற்று, 'சிவானந்தர்' என்ற துறவுப்பெயரை சூட்டினார், விசுவானந்தா.
அங்கே, சிறிய மருத்துவமனையை நிறுவி, ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார், சிவானந்தர். உலர்ந்த ரொட்டியை மட்டும் சாப்பிட்டு வந்த அவர், அங்கு வரும் துறவிகளுக்கு பழம், பால் உள்ளிட்ட உயர்ந்த உணவுகளை அளித்தார்.
'தெய்வநெறி கழகம்' என்ற அமைப்பை துவங்கி, ஆன்மிக சேவை செய்தார். மருத்துவம் மற்றும் ஆன்மிக இதழ்கள் பலவற்றை வெளியிட்டார்.
மருத்துவம் படிப்பது சம்பாதிக்க மட்டுமல்ல; ஏழைகளுக்கு உயர்ந்த சேவை செய்வதற்கும் என்பதை உணர்ந்து, சிவானந்தரின் முக்தி தினத்தில் இருந்து, ஏழைகளுக்கு உதவ, மருத்துவர்கள் முன் வர வேண்டும்.
தி.செல்லப்பா
