தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது, 28; எம்.ஏ., பி.எட்., எம்.பில்., பட்டதாரி; திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். என் கணவர் மிகவும் நல்லவர்; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

கடந்த மாதம் கைபேசி வழியாக நண்பர் ஒருவர் அறிமுகமானார். என்னை விட இரண்டு வயது இளையவர். இதுவரை நேரில் சந்தித்ததில்லை; புகைப்படத்தில் பார்த்து இருக்கிறேன். என்னுடைய புகைப்படத்தையும், அவருக்கு அனுப்பி இருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறோம்.

நான் மிகவும் அழகாக இருப்பேன். அதனால், என் நண்பர் என்னை எங்கும் செல்லக் கூடாது, எந்த ஆணுடனும் பேசக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதித்துள்ளார். அதை, இன்று வரை நானும் கடைப்பிடிக்கிறேன். இந்நிலையில், கடந்த இரண்டு மாத்திற்கு முன், அவருக்கு திருமண ஏற்பாடு நடப்பதாக கூறினார். அவர் முகத்தை நேரில் கூட காணாத நான், அதை தாங்க முடியாமல், விஷம் அருந்தி விட்டேன். என்னை காப்பாற்றி விட்டார், என் கணவர். அப்போது கூட என்னை வந்து பார்க்கவில்லை, நண்பர்.

என் கணவருக்கு, நான், அவரிடம் பேசுவது ஓரளவுக்கு தெரியும். அவரும், நண்பரிடம் நன்றாக பேசுவார். ஆனால், சில நேரங்களில், என் நண்பருடன் நான் மொபைலில் பேசிக் கொண்டு இருந்தால், கோபம் வந்து என்னை அடிப்பார். நான், என் கணவருக்கு துரோகம் செய்ய எள்ளளவும் எண்ணியதில்லை. ஆனால், நண்பருடன் என்னால் பேசாமல் இருக்கவும் முடியவில்லை. நண்பருடன் அடிக்கடி சண்டை போடுவேன்; அவராக என்னிடம் பேச மாட்டார்; நானே வலிய, அவருக்கு போன் செய்த பின்னரே பேசுவார். நான் தற்கொலைக்கு முயன்ற பின், என்னை சுத்தமாக ஒதுக்கி விட்டார்.

என்னிடம், 24 மணிநேரமும் பேசியவர், தற்போது, அரை மணி நேரம் கூட பேசுவதில்லை. அதுவும் நான் அழுது, கெஞ்சி, மன்னிப்பு கேட்டபின்பே பேச ஆரம்பித்துள்ளார்.

இப்போது என் பிரச்னை என்னவென்றால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வார், நண்பர். அதற்கு பின் என்னுடன் போனில் பேச மாட்டார். இதை எப்படி தாங்கி கொள்ளப் போகிறேன். இதிலிருந்து மீளும் வழி என்ன? நேரில் வர சொன்னால், வர மறுத்து, 'நீ நேரில் என்னை பார்த்தால், பேச மாட்டாய்; என்னை விட்டு விலகி விடுவாய்...' என்கிறார். ஆனால், அவரை பாராமலே அவர் மீது அதீத அன்புடன் இருக்கிறேன். நான், என் நண்பரின் அம்மாவிடமும் போனில் பேசுவேன். அவர்களும் என்னை புகைப்படத்தில் பார்த்துள்ளனர்.

இப்பிரச்னையிலிருந்து விடுபட எனக்கு வழி கூறுங்கள். இக்கடிதம் எழுதும் போது என் கணவரும் அருகில் இருந்தார். அவர் அடிக்காமல் இருக்க அவருக்கும் அறிவுரை கூறுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மகள்.


அன்பு மகளுக்கு —

மொபைல் போன், நொடிக்கு ஆயிரம் ஒழுக்கமீறல்களை தோற்றுவிக்கும் குட்டி சாத்தான்; சொந்த செலவில் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூன்யம். மொபைல் போனின் கைங்கரியத்தால் நாட்டின், 90 சதவீதம் பேர், 'செல்பி' பைத்தியங்களாக மாறி விட்டனர். நம் அந்தரங்க தன்மையை மொபைல் போன் மூலம் அரசிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும், சக மனிதர்களிடமும் அடகு வைத்து விட்டோம்.

சிலருக்கு நன்கு சாப்பிட்ட பின்னும், 'நாம் சரியாக சாப்பிடவில்லையோ; உணவின் ருசி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ...' என்று மனதில் அதிருப்தி எழும். தாம்பத்யத்தில் உனக்கு இருக்கும் அதிருப்தியும், கணவனை விட அழகானவள்; அதிகம் படித்தவள் என்கிற மமதையும் உன்னை அறியாமல் உனக்குள் பீறிடுகிறது. அதன் காரணமாகவே, ராங்கால் நபரிடம் மனதை பறி கொடுத்துள்ளாய்.

உன் மொபைல் போன் நண்பன் நல்லவன் அல்ல; அவன், தன் புகைப்படத்துக்கு பதிலாக, வேறொரு அழகானவன் புகைப்படத்தை அனுப்பியிருக்க கூடும். வேறொருவனின் மனைவிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க, அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது, அதற்கு நீ கட்டுப்பட வேண்டிய அவசியம் தான் என்ன?

மேலும், நீ பலவீனமானவள் மட்டும் அல்ல; படித்த முட்டாளும் கூட. இல்லையென்றால், உனக்கு சிறிதும் உரிமை இல்லாத ஒருவனுக்காக தற்கொலை செய்ய துணிவாயா? உன் நண்பன் நூறு பெண்களிடம் தொலைபேசி தாம்பத்யம் நடத்துபவன்; அதில் ஒருத்தி தற்கொலை செய்ய முயற்சித்தால், நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் அவனுக்கென்ன வந்தது?

உன் கணவனிடமும், பலவீனம் இருக்கிறது. தவறு செய்யும் மனைவியை அடிப்பதை விட, ஒரு பார்வையிலேயே திருத்தலாமே... கண்டித்து பேசி, உன் மொபைல் போன் தொடர்புகளை கத்தரிக்கலாமே!

உடல் ரீதியாக சோரம் போவது மட்டும் குற்றம் அல்ல; இம்மாதிரி மனரீதியாக சோரம் போவதும் கணவனுக்கு செய்யும் துரோகம் தான்.

ஆறு மாதத்திற்கு மொபைல் போனை தூக்கி எறி; அலைபாயும் மனதை நங்கூரமிட்டு நிறுத்து. கணவனிடமும், மகனிடமும் ஒட்டு மொத்த காதலையும், பாசத்தையும் கொட்டு. வீட்டில், உபயோகமாக பொழுதை போக்க, தையற் கலையை கற்றுக் கொள். 'டிவி'யில் சீரியல்கள் பார்க்காதே. ஒரு தவறான காரியம் செய்தால், பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை, மானசீகமாக கற்பனை செய்து, தெளிவு பெறு.

உன் மொபைல் போன் நண்பனின் நினைவுகளை ஒட்டுமொத்தமாக தலைமுழுகு. ஏட்டுக்கல்வியை படித்த அளவுக்கு, வாழ்க்கை கல்வியை நீ கற்கவில்லை. ஒழுக்கமான வாழ்க்கை என்பது, 200 மாடி கட்டடங்களுக்கு இடையே கயிற்றை கட்டி நடப்பது போன்றது; சிறிது கவனம் சிதறினாலும் அம்பேல்!

கணவனுடன் இருந்த இனிமையான பொழுதுகளை அசை போடு; கணவனின் ப்ளஸ் பாயின்டுகளை நினைத்து திருப்தி படு. பேச விரும்பும் காதல் வசனங்களை கணவனிடம் பேசு.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து மகளே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us