
அன்பு சகோதரிக்கு —
என் வயது, 52; என்னுடன் சேர்த்து, என் பெற்றோருக்கு, ஏழு பெண்கள். நான், நான்காவது பெண். என் தந்தை, அரசு பணியில் கிளார்க்காக பணிபுரிந்தவர். என் மூன்று அக்காக்களுக்கும் கல்லூரி படிப்பு எட்டாக்கனியாகி விட்டது. நான் நன்றாக படித்ததால், 'ஸ்காலர்ஷிப்' கிடைத்து, எம்.ஏ., வரை படித்தேன். பின், நான் டியூஷன் எடுத்து, என் தங்கைகளை, டிகிரி படிக்க வைத்தேன்.
அத்துடன், 'டைப்பிங்' முடித்து, அரசு பணிக்கான தேர்வு எழுதி, மாநில அரசில், ஜூனியர் கிளார்க்காக வேலைக்கு சேர்ந்தேன். என் சம்பளமும், என் அப்பாவின் சம்பளமும் சேர்ந்து, ஓரளவுக்கு, பசி இல்லாமல் குடும்பத்தை காப்பாற்றியது.
என் அம்மா, அக்கம் பக்கத்து வீட்டு விசேஷங்களுக்கு சமையல் செய்து, தன் பங்குக்கு சமாளித்தார். பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த என் அக்காக்களுக்கு, சாதாரண நிலையில் இருந்த மாப்பிள்ளைகளை பார்த்து, திருமணம் செய்து வைத்தார், என் தந்தை.
எனக்கு வரன் பார்த்த போது, மாப்பிள்ளை அரசு பணியில் இருப்பவராக இருக்க வேண்டும் என்று வலை போட்டு தேடினார். நன்கு படித்த, வசதியான எத்தனையோ மாப்பிள்ளைகள் வந்தும், அதையெல்லாம் தட்டிக்கழித்தார். என் தாயும், என் பெரியப்பாவும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
இதற்கிடையில், சீனியர் கிளார்க்காக பதவி உயர்வு பெற்றேன். என் இரு தங்கைகளும், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். கடைசி தங்கை மட்டும், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். என், 28வது வயதில், அரசு பணியிலுள்ள மாப்பிள்ளை ஒருவர் வந்தார். என்னை விட குறைந்த படிப்பு; அசிஸ்டென்ட் கிளார்க்காக இருந்தார்.
குடும்பத்தில் மூத்தவரான அவருக்கு, கூடப் பிறந்தவர்கள் இரு தங்கை மற்றும் ஒரு தம்பி.
இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும், அரசு பணியில் உள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக, என்னை, அவருக்கு திருமணம் செய்து வைத்தார், என் தந்தை.
புகுந்த வீட்டிலும், குடும்ப பொறுப்பு முழுக்க, என் தலையில் விழுந்தது. எனக்கு பிறந்தது இரண்டும் பெண்கள். என் கணவருக்கு பொறுப்பு என்றால் என்னவென்றே தெரியாது. திருமணமான ஐந்தாவது ஆண்டு, மாமனார் காலமானார்; மாமியாருக்கு விவரம் போதாது.
என் கணவரது உடன் பிறந்தவர்களின் திருமணம், என் தங்கைகளின் திருமணம் என்று ஏகப்பட்ட செலவு. அலுவலகத்தில் உள்ள அத்தனை கடன்களையும் வாங்கி, சமாளித்தேன்.
என் இரு பெண் குழந்தைகளின் படிப்பு செலவும் என்னை மிரட்டியது. ஓரளவுக்கு குடும்பம் தலைதூக்க ஆரம்பித்தபோது, என் அம்மாவுக்கு வயிற்றில் கட்டி வந்து, ஆபரேஷன் செய்ய வேண்டியதாகி விட்டது.
நல்லவேளை... அப்போது, என் கடைசி தங்கை படிப்பு முடித்து, நல்ல வேலையில் இருந்தாள். அவள் அந்த செலவை ஏற்றுக் கொண்டாள். அவளுக்கேற்ற, படித்த, வசதியான பையனை காதலித்து, திருமணம் செய்து கொண்டாள்.
இவ்வளவு கஷ்டத்திலும், என் கணவர், தனக்கு எதுவுமே சம்பந்தம் இல்லாதது போல், நடந்து கொண்டார்.
தற்போது, என் பெண்கள் கல்லூரியில் படிக்கின்றனர். இப்போது, என் பெற்றோர், மாமியார் என யாரும் உயிருடன் இல்லை. இதுவரை, வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையுமே அனுபவித்ததில்லை. இவ்வளவு காலம் ஓடிய ஓட்டம், எனக்கு மூட்டு வலியை தான் பரிசாக கொடுத்துள்ளது. தலைமுழுவதும் நரைத்து, தோல் சுருங்கி, முகத்தில் கிழக் களை வந்து விட்டது.
இன்னும் ஆறு ஆண்டு சர்வீசை முடிக்க வேண்டுமே என்று நினைக்கும் போது அலுப்பாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், என் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.
வாழ்க்கை சூறாவளியில், உறவினர்களையோ மற்றும் நட்பு வட்டாரத்தையோ சம்பாதிக்க தவறி விட்டேன். யார் தோளிலாவது தலை சாய்ந்து, ஆறுதல் தேட விரும்புகிறது மனம். அக்கா, தங்கைகள் இருந்தாலும், அவர்களுடன் மனம் விட்டு பேசுவோ, ஆறுதல் தேடவோ முடியவில்லை.
இப்போதெல்லாம் யாரை பார்த்தாலும் எரிச்சல் அடைந்து, மனம் நோகும்படி பேசி விடுகிறேன்.
மீதமுள்ள காலத்தையாவது எனக்கே, எனக்காக வாழ முடியுமா... அதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்; நல்ல ஆலோசனை கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.
- இப்படிக்கு
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தலைவியையும் தனித்தனியாக நேர்காணல் செய்து பார்... ஒவ்வொருவரும், ஒரு அழுவாச்சி காவியத்தை அரங்கேற்றுவர். தமிழ் சமுதாயத்தில், குடும்பம் என்ற அமைப்பு, பல்லாயிரம் ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்குகிறது என்றால், அதற்கு, தன்னலமற்ற குடும்பத்தலைவிகளே முழு முதல் காரணம்.
'உழுதவன் கணக்கு பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது' என்பது போல், ஒரு குடும்பத்தலைவி தன் குடும்ப வரவு, செலவு கணக்குகளை ஆராய்ந்தால், எல்லாமே நஷ்ட கணக்கு தான்; மிஞ்சின உறவுகள் மட்டுமே லாப கணக்கு!
ஏழு பெண்களில் ஒருத்தியாக பிறந்த உனக்கு, நல்ல படிப்பும், நல்ல வேலையும் கிடைத்ததே என, சந்தோஷப்படு. உன்னை விட படிப்பில் குறைந்தவன், குடும்ப பாரத்தை சுமக்க விரும்பாதவன் என்றாலும், உன் கணவனுக்கு பிற மகளிர் தொடர்போ, குடிப்பழக்கமோ இல்லை என, ஆறுதல்படு. யாரிடமும் கை நீட்டாமல், அனைவருக்கும் அள்ளிக் கொடுத்திருக்கிறாய் என்பதை நினைத்து பெரு மகிழ்ச்சி கொள். ஓடி வந்த தூரத்தை திரும்பி பார்த்து பெருமைப்படு; ஒப்பாரி வைக்காதே. சுய பச்சாதாபம் என்பது, காலில் நாமே கட்டிக் கொள்ளும் இரும்பு குண்டு.
தினசரி வாழ்க்கை முறையில், உனக்கான சிறு சிறு சந்தோஷங்களை ஏற்படுத்திக் கொள். உறவினர் மற்றும் நட்புக்களின் நல்லது, கெட்டதுகளுக்கு அடிக்கடி போய் வா. அக்கா, தங்கை குடும்பங்களுடன் எப்போதும் நல்லுறவுடன் இரு.
தவறான உணவு பழக்கம், நம் வயோதிகத்தை கூட்டி விடும். அதனால், டயட்டீஷியனை அணுகி, சரி விகித சத்துணவு அட்டவணை அமைத்து உண். தினசரி நடைபயிற்சி மேற்கொள்; மூட்டுவலிக்கு மருத்துவம் எடுத்துக் கொள். முக சுருக்கங்களை போக்க, மார்க்கெட்டில் கிரீம்கள் உள்ளன; தரமானதை வாங்கி உபயோகித்து பார். தலை கேசத்துக்கு உரிய இடை வெளியில் ஹெர்பல் டை அடி. பற்கள் ஏதாவது விழுந்திருந்தால், செயற்கை பல் கட்டு.
குடும்பத்தலைவி பொறுப்பையும், அலுவலகப் பணியையும் ஒருசேர நேசித்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படு. 'அலுவலகப்பணி இன்னும் ஆறு ஆண்டுகள் இருக்கிறதே...' என, ஆயாசப்படாமல், உன் பணியில் முத்திரை பதிக்க திட்டமிடு. யார் தோளிலாவது தலை சாய்த்து ஆறுதல் தேட வேண்டுமென்றால், மகள்கள் மற்றும் அக்கா, தங்கைகளின் தோள்களில் சாய். உள்ளுக்குள் எழும் எரிச்சலை அடக்கி, பேசும் வார்த்தைகளை வாய்க்குள்ளேயே தணிக்கை செய்.
எனக்கே எனக்காக வாழ்வது என்று சொல்வது, ஒரு மாயை. அப்படி வாழ வேண்டுமென்றால், ஆளரவமற்ற தீவில், நீ மட்டும் தான் வாழ முடியும்.
இல்லறமும் இறைவனை அடையும் வழி தான். ஆகவே, நீ குடும்பத் தலைவியாக ஜெயித்து, இறைவனின் பேரருளை பெறுவாய்!
- என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

